சிறப்புக் கட்டுரைகள்

200 ஆண்டுகள் மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா? அதிசயத் தகவல்கள்!

14th Jul 2022 02:57 PM | எம். பாண்டியராஜன்

ADVERTISEMENT

 

மனிதன் அதிக அளவாக எவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியும்? சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மட்டும்தான் வரலாறா? இல்லாவிட்டால்...?

உலகில் தற்போது வாழ்ந்துகொண்டிருப்போரில் மிக அதிகமான வயதுடையவர் - உலகிலேயே மூத்தவர் - ஒரு பெண்மணி, லூசிலி ரேண்டன், வயது 118 ஆண்டுகள் 152 நாள்கள். (பிறந்த நாள் 11, பிப்ரவரி, 1904).

எல்லா வகையிலும் உறுதி செய்யப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மிக அதிக காலம் வாழ்ந்து மறைந்தவர் பிரான்ஸைச் சேர்ந்த ழான் கால்மென்ட் என்ற பெண்மணி, 122 ஆண்டுகள், 164 நாள்கள்! 1875, பிப்ரவரி 21 ஆம் தேதி பிறந்து 1997 ஆகஸ்ட் 4 ஆம் தேதி மறைந்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதுவரை அறிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலும் பெண்களே அதிக காலம் வாழ்ந்திருக்கிறார்கள், ஆண்களை விட.

1934-ல் துருக்கியில் ஸாரா ஆகா என்பவர் இறந்தபோது 170 வயது முதியவர் மறைவு எனச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் வாழ்ந்த குர்து இனத்தைச் சேர்ந்த ஸாரா ஆகா என்பவர், 1934 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் நாள் (பிறந்த நாள் 1764 பிப்ரவரி 16) மறைந்தபோது அவருடைய வயது 170 ஆண்டுகள், 133 நாள்கள் என்று தெரிவிக்கப்பட்டது. உலகிலேயே மிக அதிக காலம் வாழ்ந்தவர் இவர்தான் என்று தெரிவிக்கப்பட்டாலும் இவ்விஷயத்தில் நிறைய தகவல் குழப்பங்கள் இருக்கின்றன. இறந்தபோது அவருக்கு 97 வயதுதான் என்றும் கூறுகிறார்கள். இந்தியாவில் 160 வயதில் ஸாரா ஆகா இறந்தார் என்றே செய்திகள் வெளிவந்துள்ளன. 

ஸாரா ஆகா

ஆனால், இந்த சர்ச்சைக்கிடையே அதே காலகட்டத்தில் 180, 200 வயதுடையோரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், இவர்கள் எல்லாருமே பெரும்பாலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான், என்று அன்றைக்கிருந்த தகவல் தொடர்புகளை வைத்துக்கொண்டு, அடுத்த சில மாதங்களில் கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது தினமணி.

பிரம்மச்சாரி, ஏகபத்தினி விரதன், ஏராளமான மனைவிகள், எண்ணற்ற பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன் பேத்திகள்... என்று வியக்க வைக்கிற - இன்றைய சூழலில் - நம்ப முடியாத தகவல்களுடன் செல்கிறது கட்டுரை.

1934 ஆண்டு செப்டம்பர் 21 ஆம் நாள் தினமணியில் வெளியான கட்டுரை கூறுகிறது:

நீண்ட ஆயுள் பெற்ற மக்கள்,

இரு நூற்றாண்டு வாழும் ஆப்கானியர்,

40 பேரன், பேத்திகளைக் கண்ட ஜுபேதா, ஜாரோ ஆகாவைவிட வயதில் மூத்தோர் பலர்.

சென்ற 1933 ஆம் ஆண்டில் சீனத்தார் ஒருவர் 156 ஆண்டுகள் ஜீவித்திருந்து  இறந்துபோய் விட்டார். சமீபத்தில் பிரபல துருக்கியரான ஜாரோ ஆகா இறந்துபோய்விட்டார்.; இவரது ஆயுள் 160 வயது. இவர் ஒன்பது விவாகங்கள் செய்துகொண்டு வாழ்ந்தவர்.

இக்காலை பெரும்பாலும் இந்த இருவர்தான் நீண்ட ஆயுள் வாழ்ந்தவர்களென்று பத்திரிகைகளிலெல்லாம் பிரகடனப்படுத்தப்படுகிறது. உண்மையில் இப்பெருமைக்கு இவ்விருவரும் அருகதையுடையவர்களல்ல. ஏனெனில், இவர்களைவிட மிகமிக நீண்ட ஆயுள் பெற்றுள்ள மக்கள் இன்னமும் நல்ல ஸ்திதியினராய்  ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்திருந்து வருகின்றார்கள். இத்தகையோரில் 180 வயதுடையோரும் 200 வயதுடையோரும் இதுகாறும் இருந்து வருகின்றனர். இதுவன்றி ஆங்கு 100 வயதுக்கு மேற்பட்டு 180-க்குள்ளாக இருப்போர் சர்வசாதாரணமாக்க் கணக்கற்றிருந்து வருகின்றனர். ஆகவே, நீண்ட ஆயுள் பெற்ற மக்களுடைய நாடு சீனமென்றோ, துருக்கியென்றோ கூறுவதை விட்டு, ஆப்கானிஸ்தானம் என்று கூறுவது மிகமிகப் பொருத்தமானதாகும். இதற்கத்தாக்ஷி கீழே எடுத்தோதப்படும் நீண்ட ஆயுள் பெற்ற மக்களின் வயது விபரத்தால் அறியலாம்:- 

இதையும் படிக்க |  தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!

200 வயது

முராகயீ என்ற பெயருடையவருக்குத் தற்போது சரியாக 200 வயது பூர்த்தியடைந்து கொண்டு வருகின்றது.  இன்னவர் ஆப்கானிஸ்தானின் சுற்றுப்பக்க கிராமங்களிலொன்றான முல்லாஜாவில் வசித்திருந்து வருகின்றார். இவர் கிப்ரீ வம்சத்தைச் சேர்ந்தவராம். இவர் இன்னும் நல்ல ஸ்திதியில் தானிருக்கின்றார். இது காறும் இவர் விவாகம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து வருகின்றாராம். மேலும் இன்னவர் ஆப்கானின் பழங்கால அரசர்களான அஹ்மத்ஷா, தைமூர்ஷா முதலியவர்களின் வரலாறுகளையொட்டி நேரில் கண்ட விபரங்களைச் சொல்லுகின்றார். இவருக்குச் சிற்சில பற்கள் விழுந்துபோய் அவ்விடத்தில் புதிதான பற்கள் முளைத்திருக்கின்றனவாம். 

180 வயது 

ஹாஜி குல்வலத் அஹ்மத்ஷா என்பவர் ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியிலுள்ள அர்கோன் இலாக்காவைச் சேர்ந்த மைதானாக் என்னுமிடத்தில் வசித்திருந்து வருகின்றார். தற்போது இவருக்கு வயது 180. இவரது தேக திடம் கொஞ்சமேனும் பலஹீனமடையாதிருந்து வருகிறது. ஆனால் கண்பார்வை மட்டும் மங்கிவிட்டதாம். இவர் இதுவரை ஏகபத்தினி விரதராகவே இருந்து வருகின்றார். மொத்தம் 9 பிள்ளைகள் பிறந்தன. நான்கு குமாரர்கள்தான் உயிருடனிருக்கிறார்கள். பேரன், பேத்திகளும் பலருளர். இவர் ஜனங்களுடன் சேர்ந்து பழகுவதில்லை. அநேகமாய் ஏகாந்த வாசமே செய்கிறார். 

170 வயது 

பஹாத்துர் என்பவர் ஆப்கானின் கிழக்குப் பிராந்தியத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு வயது 170. இரண்டு மனைவியரும் பல பிள்ளைகளுமுடையவர். நல்ல ஸ்திதியுடனிருக்கின்றார். 

ரம்ஜான்:- என்ற பெயருடன் ஹாஜரா என்னுமிடத்தில் 170 வயதுடைய ஒருவர் ஜீவித்திருந்து வருகின்றார். ஆனால், இவர் மிகவும் பலஹீனராகக் காணப்படுகிறார். 

பாஜ்குல்கான்:- என்பவர் கோஹாட்டைச் சேர்ந்த ஒரு சிற்றூரில் வசித்து வருகின்றார். இவருக்கு தற்போதைய வயது 160. இவரொரு பெரிய ஜமீன்தார். இவருக்கு இரண்டே குமாரர்களுண்டு. ஒருவருக்கு வயது 99. இதுவரையும் அப்பெரியவர் நல்ல திடகாத்திரத்தோடே இருந்து தம் விவசாயத்தை மேல் பார்வைப் பார்த்து வருகின்றார். கண்பார்வை இவருக்கு இன்னும் கூர்மையாகயிருக்கின்றது. 

யார்முஹம் கான்:- என்பவர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கஸ் என்ற இடத்தில் வசித்து வருகின்றார். இவருக்குத் தற்போதைய வயது 150தான். இவர் இன்னும் சுகதேகியாகவும் உழைப்பவராகவுமிருந்து வருகின்றார். 

முல்லா மஃதுகான் என்பவர் ஷின்வாரிகளைச் சேர்ந்த ஒரு மதக்குரு. இவருக்குத் தற்போதைய வயது 150. இவர் ஹதீஸ் கலை, தப்ஸீர் கலை ஆகியவைகளில் பாண்டித்தியமுடையவர். 

மீர்ஜான் என்பவர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாஜியான் என்னுமிடத்தில் இருந்து வருகின்றார். இவர் ஷின்வாரி வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 145. இவர் நல்ல நிலையில் தானிருக்கின்றார். 

அமர்ஸிங் என்ற சீக்கிய ஹிந்து ஒருவர் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பஷுத் என்ற இடத்தில் இருந்து வருகின்றார். இவருக்குத் தற்போதைய வயது 120. இவருடைய பற்களில் ஒன்றுகூட இன்னும் ஆட்டங் காணவில்லை. இவர் கால்நடையாக வெகுதூரம் பிரயாணாஞ் செய்யும் பழக்கமுடையவராயிருக்கின்றார்.  

முஹம்மத் அப்பாஸ் என்பவர் கோர்பந்து என்ற இடத்திலிருந்து வருகின்றார். இவருக்கு தற்போதைய வயது 120. இவர் நான்கு விவாகஞ் செய்திருக்கிறார். மூன்று தாரங்கள் இறந்து போய்விட்டனர். இவருக்கு மொத்தம் 30 பிள்ளைகள் பிறந்தன. 20 பிள்ளைகள் இப்போது உயிருடனிருந்து வருகின்றனர். இவரும் கால்நடையாய்ப் பிரயாணஞ் செய்யும் பழக்கமுடையவர். 

இதையும் படிக்க | இந்த ரயில்களில் இனி 2 ஸ்லீப்பர் பெட்டிகள்தான்: ரயில்வேயின் அதிர்ச்சித் தகவல்!

ஹாஜீ ஷாஹ்வலி கான் என்பவர் ஒரு இடையர். இவர் இடையரெனினும் தனவந்தர். இவருக்கு தற்போதைய வயது 120. இவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். இவர் தினமும் கால்நடைப் பிராணிகளை ஓட்டிக்கொண்டு போய் மேய்த்து வருகிறார். 

முஹம்மத் என்ற பெயருடன் அலி ஆபாத் என்ற இடத்தில் ஒருவர் வசித்து வருகின்றார். இவருக்கு வயது 120. இவருக்கு 29 பிள்ளைகள் பிறந்தனர். இவர் இப்போது பிள்ளை, பேரப்பிள்ளைகள் எல்லோருமாக 54 பேர்களுள்ள ஏக குடும்பமாய் வாழ்ந்து வருகின்றார். இவர் நல்ல ஞாபக சக்தியும், தேக திடமும் உடையவராயிருந்து வருகின்றார். 

முராத்பாயீ என்ற பெயருடையவர் குத்கன் பகுதியைச் சேர்ந்த இந்திராப் என்ற இடத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு வயது சுமார் 120. இவரும் திடதேகியாகவும் பெரிய குடும்பஸ்தராகவுமிருந்து வருகின்றார். 

பாபா என்ற பெயருடையவர் குத்கன் பகுதியில் வசிப்பவரே. இவருக்கு வயது 115. இவருக்கு 15 குமாரர்களும் குமாரத்திகளுமிருக்கின்றார்கள். பேரன் பேத்திமார்கள் எல்லாரும் சேர்ந்து 60 பேர்களுள்ள குடும்பஸ்தராயிருந்து வருகின்றார். நன்கு உழைத்து சம்பாதிக்கிறார். 

ரேஜா என்பவள் குர்பான்பேக் உடைய மகள் (வயது தெரியவில்லை). ஹஜரா வர்க்கத்தைச் சேர்ந்தவள். சார்பாக் என்ற இடத்தில் வசிப்பவள். இவள் பெற்ற பிள்ளைகளில் 12 குமாரர்களும் குமாரத்திகளும் ஏக குடும்பஸ்தர்களாயிருந்து வருகின்றனர். 

ஜுபேதா என்பவள் நபஸ் முஹம்மதின் மகள். இவளுக்கு வயது 110. இவளுக்கு 12 புத்திரர்கள். 40 பேரப்பிள்ளைகள். இவள் கோலூன்றி நடந்து செல்கிறாள். சரித்திர பூர்வமான கதைகள் பல சொல்லுகிறாள். 

மலிக்  தாபக்க்ஷ் என்பவர் கோஸ்தந்தர் என்ற இடத்தில் வசிப்பவர். இவருக்கு வயது 112. இவருக்கு 40 புத்திரர், புத்திரிகள் இருக்கின்றார்கள். பேரன் பேத்திகள் மட்டும் பிரத்தியேகமாய்  15 பேர்களிருக்கின்றனர்.

முஹம்மத்  சாஹிப் ஜாதா என்பவர் 170 வயதுடையவர். இவருக்கும் ஆப்கானைச் சேர்ந்தவரே. இவர் பெரிய அறிவாளி. வேதவித்தியாகரர். ஞான தத்துவார்த்தமாய் அநேக கிரந்தங்கள் எழுதியுள்ளார். இன்றும் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ளாமலேயே நூல்கள் வாசிக்கவும் இயற்றவும் வல்லவராயிருக்கிறார். 

ஹாஜீ மீர்ஜான் என்பவர் கானாபாத் என்ற இடத்தில் வசிப்பவர். இவருக்கு வயது 105. இவர் நல்ல தேக திடத்துனிருக்கின்றார். இவர் பல மனைவியரை மணந்தவர். மொத்தம் இவருக்கு 120 சந்ததிகளாம். தம் பிள்ளைகளின் பெயர்களும் அடையாளங்களும் இவருக்குச் சரிவரத் தெரியாது. 

(இன்னும் இதைப்போன்று நீண்ட ஆயுள் வாழும் மக்கள் ஆப்கானிஸ்தானில் அநேகம் பேர் இருக்கின்றனர். அவர்களின் ஜாபிதாக்களையெல்லாம் எழுதி விடுவதெனில் ஒரு பெரிய நூலாய்விடும்.)

ஒருவேளை இப்போது  இப்படியெல்லாம் மக்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் திடகாத்திரமாக வாழத் தொடங்கிவிட்டால் நம் மருத்துவமனைகள் எல்லாம் என்ன செய்யும்? நம்முடைய மருந்து நிறுவனங்கள் எல்லாம்தான் என்ன செய்யும்? 

இதையும் படிக்க | மறதிக்கு மருந்தாகும் உணவுகள் என்னென்ன?

ADVERTISEMENT
ADVERTISEMENT