சிறப்புக் கட்டுரைகள்

காந்திக்கே கறார் காட்டிய தமிழர் ஜே.சி. குமரப்பா!

தினமணி

நாம் கவலைப்படா விட்டாலும் கூட, நாம் மறந்து விட்டாலும் கூட, நம் இந்தியத் திருநாட்டின் பொருளாதாரம் இந்த விநாடிகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதுதான் இன்றும், நம்மை இயக்கிவருகிறது.

இதுபோலவே நாம் காலப்போக்கில் மறந்துவிட்ட, ஆனால் தற்போதும் நமக்குத் தேவைப்படக் கூடிய பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்று, காந்தியப் பொருளாதாரம். அதற்காக நாம் நினைவு கூறவேண்டிய தீர்க்கதரிசி ஜே.சி.குமரப்பா.இவர் தமிழர் என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமை தரக்கூடிய விஷயம் அல்லவா?

மகாத்மா காந்தியின் நினைவு நாளான சனவரி 30ஆம் தேதி தான் காந்தியப் பொருளாதார அறிஞரான குமரப்பாவின் நினைவு நாளும் கூட. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு எனச் சொன்னவர் காந்தியடிகள். அக் கிராமங்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துத் தந்தவர் குமரப்பா.

தஞ்சாவூரில் 1892-ஆம் ஆண்டு சனவரி 4 இதே நாளில் பிறந்த குமரப்பா, பள்ளிப்படிப்பைச் சென்னையிலும், உயர்கல்வியை லண்டனிலும் பயின்று அங்கேயே சில காலம் பணியிலும் இருந்தார். பின்னர் அமெரிக்கக் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படிப்பதற்காகச் சேர்ந்தார்.

அப்போது, 'இந்தியா ஏன் ஏழ்மையில் உழல்கிறது?' என்ற தலைப்பில் ஓர் உரையாற்றினார். அந்த உரை, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அந்த உரையைப் படித்த அவரது ஆசிரியர், "இந்தத் தலைப்பிலேயே முதுகலை படிப்பிற்கான ஆய்வை மேற்கொள்" எனச் சொல்கிறார். இந்த ஆய்வுதான் அவர் வாழ்க்கையையே, மாற்றுகிறது. பிரிட்டன் இந்தியாவைச் சுரண்டுகிறது என்ற முடிவுக்கு வந்த அவர், அதுவரை தான் நம்பிய பொருள்வயமான சித்தாந்தத்தை மாற்றிக் கொள்கிறார். அதனுடன் தம் வாழ்க்கை முறையையும். பின்னர் இந்தியாவின் நிலையை ஆய்வு செய்த குமரப்பா, 1927-இல் இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்து, திரும்பினார்.

1934-ஆம் ஆண்டில், பீகார் மாநிலம் நில நடுக்கத்தால் மிகவும் சிதைந்து போனது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ காந்தி களத்தில் இறங்கினார். இராஜேந்திர பிரசாத் இந்த நிவாரணப் பணிகளைக் கவனித்துக் கொண்டார். 

ஆனால், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக இருந்ததால், ராஜேந்திர பிரசாத்தால் மட்டும் தனியாக அவற்றைச் செய்ய முடியவில்லை. ஜமன்லால் பஜாஜை அழைத்து, ராஜேந்திர பிரசாத்துக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார் காந்தி. பஜாஜ், ஜே.சி.குமரப்பாவின் உதவியை நாடினார். பீகார் நிலநடுக்க நிவாரண பணிகளுக்கான நிதி நிர்வாகத்திற்கான ஆலோசகராக ஜே.சி. குமரப்பா நியமிக்கப்பட்டார்.

பீகார் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் செலவுக்கு தலா மூன்று அணாக்களை அப்போது அங்கே குமரப்பா ஒதுக்கினார்.

அந்தச் சமயத்தில் நிவாரணப் பணிகள் தொடர்பான ஒரு கூட்டத்திற்காக காந்தி பாட்னா சென்றார். காந்தியுடன் அவரது அலுவலர்களும் சென்றார்கள். இந்தச் சூழலில் காந்திக்கான செலவுக் கணக்கு மூன்று அணாக்களை தாண்டிச் சென்றது. இந்த விஷயம் ஜே.சி. குமரப்பாவின் காதுகளை வந்தடைந்தது.

குமரப்பா காந்தியின் தனிச் செயலாளரான மகாதேவ் தேசாயை அழைத்தார். ''நிவாரண நிதியிலிருந்து காந்திக்காகவும், அவரோடு வரும் அவரது அலுவலர்களுக்காகவும் செலவு செய்ய முடியாது. ஒரு நபருக்கு மூன்று அணாக்கள்தான் ஒதுக்கி இருக்கிறோம். ஆனால், காந்திக்கான செலவு மூன்று அணாக்களுக்கு மேல் போகிறது. அதனால், பணம் தருவது சிரமம். அதுமட்டுமல்ல, காந்தியின் வாகனத்திற்கான எரிபொருள் செலவு வேறு தனியே ஆகிறது. இதற்கு நீங்கள் மாற்று வழியைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கறாராகச் சொல்லி விட்டார்.

இந்த விஷயம் காந்தியின் காதுகளுக்குப் போகிறது. காந்தி குமரப்பாவை அழைத்து விசாரிக்கிறார். ஆனால், அப்போதும் குமரப்பா தனது முடிவில் உறுதியாக இருந்து, நிதி சுமை குறித்து விவரிக்கிறார். "மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி இது. அதனைச் சிக்கனமாகச் செலவு செய்ய சில விதிகளை வகுத்து இருக்கிறோம். அந்த விதி எல்லாருக்கும் பொருந்தும். உங்களுக்கும் கூட".காந்தியும் பின்னர் வேறு வழியின்றி இதனை ஒப்புக் கொள்கிறார்.

காந்தி முதல்முறையாக குமரப்பாவை சந்திக்கும் போது காந்தி குமரப்பாவை அறிந்திருக்கவில்லை. குமரப்பாவுக்கும் காந்தியைத் தெரிந்திருக்கவில்லை.

இவர்களது முதல் சந்திப்பானது சபர்மதி ஆசிரமத்தில் நடந்ததாகக் கூறுகிறது.

காந்திய ஆய்வு அறக்கட்டளையின் இணையதளம்.

சபர்மதி ஆசிரமத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து காந்தி இராட்டை சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் குமரப்பாவுக்கு அவர்தான் காந்தி எனத் தெரியவில்லை. ஏறத்தாழ ஐந்து நிமிடங்கள் அங்கேயே நிற்கும் ஜே.சி. குமரப்பாவைப் பார்த்து காந்தி, "நீங்கள்தான் குமரப்பாவா?" என்கிறார். குமரப்பாவும், "நீங்கள்தான் காந்தியா?" என்கிறார். காந்தி, ஜே.சி. குமரப்பா இடையேயான ஆழமான நேசம் இப்படித்தான் தொடங்கியது.

ஒரு நாள் பண்டிட் மதன் மோகன் மாளவியா, காந்தியிடம், 'குமரப்பாவுக்குச் சிறப்பான பயிற்சியை வழங்கி இருக்கிறீர்களே!' என்று சொல்லி இருக்கிறார். இதற்குக் காந்தி, "நான் குமரப்பாவுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பே எல்லாம் கற்று முழுமையாகவே அவர் வந்தார்" என்கிறார்.

காந்தி, குமரப்பா இருவருக்கும் உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், சிந்தனைகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இருவரது பொருளாதாரக் கொள்கையும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. இருவரும் மையப்படுத்துதலை எதிர்த்து இருக்கிறார்கள்.

"மையப்படுத்துதல் என்பது அனைவரையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அடக்குமுறையின் ஒரு வடிவமே. பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வைத் தன் கைக்குள் வைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் வேண்டுமானால் பொருளாதாரத்திலும் ஜனநாயகத் தன்மை வேண்டும்" - இது குமரப்பா கூறியது.

"அதிகார மையம் என்பது இப்போது புது டெல்லியில் இருக்கிறது. கல்கத்தாவில் இருக்கிறது. பம்பாயில் இருக்கிறது. பெரு நகரங்களில் இருக்கிறது. நான் அந்த அதிகாரத்தை 7 லட்சம் கிராமங்களுக்கும் பிரித்துத் தர விரும்புகிறேன்" - இது காந்தி கூறியது.

இப்படியாகப் பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.

அனைத்திந்திய கிராமத் தொழில் சங்கத்தின் அமைப்பாளராக குமரப்பா இருந்தபோது, தொழில் பரவலாக்கலுக்கான ஏராளமான முயற்சிகளைக் காந்தியுடன் இணைந்து எடுத்திருக்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக குமரப்பாவை நியமிக்க காந்தி விரும்பியதாகவும் கூறப்படுவதுண்டு.

காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக குமரப்பாவை நியமித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்தார் குமரப்பா. இதனால் பின்னாட்களில் சிறைக்குச் சென்றார். கிராமங்கள் தொடர்பாக காந்தி கண்ட கனவிற்கு நிகராக, கிராமியப் பொருளாதரத்தை முழுமையாக நம்பியவர் குமரப்பா.

கிராமங்களில் இருக்கும் தொழில்களும், கிராமங்களில் விளையும் பொருட்களும் கிராமங்களுக்கே முழுமையாகப் பயன்பட வேண்டும் என்றார். இதனால் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறும் என்பதே அவரது கொள்கை. உணவுக்கான பயிர் விளைய வேண்டிய இடத்தில், பணப்பயிர்கள் விளைவதையும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் புகையிலை விளைவதையும் அவர் எதிர்த்தார். 

இயற்கை வளங்களை அழித்துவிட்டு, அதன்மீது நடைபெறும் பெருந்தொழில்களை அவர் எதிர்த்தார். இயற்கையை எதிர்த்து நடக்கும் தொழில்கள், நீண்ட நாட்களாக நடக்க முடியாது எனவும், இயற்கையோடு இணைந்த தொழில்களே பலநூறு ஆண்டுகள் தொடரும் என்றும் கூறினார்.

ஆனால் தற்போது நாம் அந்தக் கட்டத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். மனிதன் சிதைக்காத இயற்கை வளம் என ஒன்று இந்த பூமியில் இருக்கிறதா என்ன? தனது பொருளாதாரக் கொள்கைகளை ஒட்டுண்ணிப் பொருளாதாரம், சூறையாடும் பொருளாதாரம், கூட்டிணக்கப் பொருளாதாரம், சேவைப் பொருளாதாரம், முனைவுப் பொருளாதாரம் என ஐந்து வகையாகப் பிரித்தார்.

இவற்றில் சேவைப் பொருளாதாரம் என்பதனை நோக்கியே இந்தியா இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பசுமைப் புரட்சி இந்தியாவில் துவங்கிய போது, இயற்கை உரங்களுக்கு பதில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை அவர் கண்டித்தார். 'டிராக்டர் நிலத்தை உழும்...ஆனால் சாணி போடுமா?' என்றார்.

மாடுகளுக்குப் பதில், உள்ளே நுழையும் டிராக்டர்கள் மனித உழைப்பைப் பறிக்கின்றன. இதனால் வேளாண்மையில் இருந்து மனிதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அத்துடன் நிலத்தை உழும் மாட்டையும் அது வெளியேற்றுகிறது. இதனால் மாட்டிடம் இருந்து கிடைக்கும் சாணம் போன்றவை கிடைக்காமல், விவசாயி இரசாயன உரங்களை நோக்கிச் செல்கிறார். இது விவசாயிகளுக்குக் கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துகிறது. அவனை மேலும் கடனாளியாக்குக்கிறது என இதனை எதிர்த்தவர் குமரப்பா.

இன்று கொஞ்சம் உங்களை சுற்றிப் பாருங்கள். உங்களை சுற்றியிருக்கும் தொழிற்சாலைகளைப் பாருங்கள். எங்கோ, ஏதோ ஒரு நாட்டில் அணிவதற்கான டீ-ஷர்ட்கள், காலணிகள், மின் சாதனங்கள் நம்மூரில் தயாராகின்றன. அதற்கான தொழிற்சாலைகள் நம்மைச் சுற்றியும் இருக்கின்றன. அவை நம் இயற்கை வளங்களைச் சிதைக்கிறது. வணிகம் என்ற பெயரில் இவற்றை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் மினரல் வாட்டர் அல்லது குளிர்பானங்கள் குடிப்பவர் என்றால் உங்கள் பாட்டிலில் இருக்கும் முகவரியை கொஞ்சம் பாருங்களேன். ஏதோ ஒரு இடத்தில் உற்பத்தியான நீர், தற்போது உங்கள் தொண்டையை நனைக்கிறது. இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைதான்.

ஆனால் அது ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு விவசாயியின் பயிருக்கான தண்ணீர் அல்லவா? தேவைக்கு அதிகமாக விளைவிக்கப்படும் பணப்பயிர்கள் அனைத்தும், உணவுப் பயிர்களுக்கு மாற்றாக வளர்ந்து கொண்டிருப்பவைதானே?

உங்கள் கிராமத்திற்கான பொருட்கள், உங்கள் கிராமத்தில் விளைவதில்லை அல்லது உருவாவதில்லை எனில் உங்கள் கிராமத்தின் உழைப்பு, எங்கு யாருக்குச் செல்கிறது? இவை எல்லாவற்றையும் தான் கேள்வி கேட்கிறார் குமரப்பா. எளிமையிலும், கொள்கையிலும் காந்தியை விஞ்சிய காந்தியவாதியாகத் திகழ்ந்தார்.

'ஒரு குறிப்பட்ட பகுதியில் ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன்பு, அங்கே இருக்கும் ஏழைகளின் விலா எலும்புகளை எண்ணுவேன். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு, அதே ஏழைகளின் விலா எலும்புகளில் ஏதேனும் சதைப்பற்று காணப்படுகிறதா எனப் பார்ப்பேன். அப்படிக் காணப்பட்டால் அந்தத் திட்டம் வெற்றி எனக் கருதுவேன்" என்றார் குமரப்பா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT