சிறப்புக் கட்டுரைகள்

வாழ நினைத்தால் வாழலாம்! - எடுத்துக்காட்டாக வாழும் நாமக்கல் இளைஞர்

3rd Dec 2022 07:20 AM | எம். மாரியப்பன்

ADVERTISEMENT

உருவமாக இருக்கும் மனிதன் உடலில் ஒரு பாகத்தை இழந்துவிட்டால் மாற்றுத் திறனாளி என்ற மறுபெயரைக் கொண்டவனாகி விடுகிறான். உடல் இயக்கங்கள் நல்ல முறையில் இருப்போரில் பலர்கூட சோம்பேறியாய் இருக்கும் இவ்வுலகில், தங்களது இயக்கங்கள் தடைப்பட்டாலும் சாதித்துக் காட்டுவோம் என இவ்வுலகில் போராடி வருகின்றனர் பல மாற்றுத் திறனாளிகள்.

அந்த வகையில், சாலை விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கான தேவையையும், தன்னைப் போல் உள்ளோருக்கான தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் வடுகம்பாளையம் புதூரைச் சேர்ந்தவர் குமார் (37). பிளஸ் 2 வரை படித்த அவர் தனியார் கல்லூரிப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது வாடகைக்கும் கார் ஓட்டி வந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு நாமக்கல் - மோகனூர் சாலையில் அணியாபுரம் என்ற இடத்தில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு சாலையின் நடுவில் வர, காரில் சென்று கொண்டிருந்த குமார், மாடு மீது மோதாமல் இருக்க காரைத் திருப்பியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கினார். அப்போது அவரது முதுகுத் தண்டுவடம் உடைந்தது.

ADVERTISEMENT

பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளித்தபோதும், வயிற்றுக்குக் கீழ் உள்ள பகுதி முழுவதும் செயலற்றுப் போய்விட்டது. தள்ளுவண்டியில் இருந்தபடி தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை வாழ்கிறார். தந்தை இறந்து விட, தாய் ராஜேஸ்வரி அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். ஜெயலட்சுமி என்ற தங்கை உண்டு.

நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் சிறிய ஆலையை நடத்தி வரும் அவர் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டோவில் 30 சிப்பம் கொண்ட உருண்டை வெல்லத்தைத் திருச்சி மாவட்டம் துறையூர் சந்தைக்குக் கொண்டுசென்று விற்பனை செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, தன்னைப்போல் முதுகுத் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோர் பயனுறும் வகையில் ஆட்டோவை ஓட்டுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைத்து கொடுக்கிறார். தவிர, எங்கெல்லாம் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோர் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தேவையான பண உதவி, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார்.                                   

உடல் குறைப்பட்ட நிலையிலும் பிறருக்கு உதவும் குமாரை சந்தித்தபோது, அவர் கூறியதாவது:

வாழ்க்கையில் பல கனவுகள் இருந்தன. சாலை விபத்தில் அனைத்தும் ஒரே நொடியில் தகர்ந்துவிட்டன. வாழ்க்கை ஒரே மாதிரியாக யாருக்கும் அமையாது. கடந்த 15 ஆண்டுகளாக வீல் சேரில்தான் இயங்கி வருகிறேன். ஓட்டுநராகப் பணியாற்றியதால் ஆட்டோ ஒன்றை வாங்கி அதில் வீல் சேரில் அமர்ந்தபடி ஆட்டோவை இயக்கும் வகையில் வடிவமைத்துக் கொண்டேன். முதுகுத் தண்டுவட பிரச்னையால் பாதிக்கப்பட்டோர் இவ்வாறான உதவி கேட்டால் அவர்கள் இயக்கும் வகையில்  ஆட்டோவை வடிவமைத்துக் கொடுக்கிறேன். நாட்டுச் சர்க்கரை தொழில் செய்வதால் எனக்கான வருவாய், பிறருக்கு உதவுவதற்கான வாய்ப்பு உள்ளது. இன்னும் திருமணமாகவில்லை, தாயுடன் வசிக்கிறேன், மாற்றுத் திறனாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுக்கிறேன்.

'வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்..' என்ற கவிஞர் கண்ணதாசனின் பாட்டு எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்த வரிகள். வாழும் வரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT