சிறப்புக் கட்டுரைகள்

'உயர்ந்து காட்டுவோம்' - மக்கள் சேவையில் உள்ளாட்சிப் பிரதிநிதி

ஜெ. முருகேசன்

மற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத சூழ்நிலையில், இன்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணி செய்து வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹரிகரசுதன். 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாகராஜன் - அழகம்மாள் தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தவர் ஹரிகரசுதன். இவர் பிறந்து 18 மாதங்களில் இளம்பிள்ளைவாதம் பாதிப்பு ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ்ப் பகுதி முழுமையாக செயலிழந்துவிட்டார்.

இதன்பின் அவரது தாய், ஹரிகரசுதனை மருத்துவமனைக்கு நடையாய் நடந்து கொண்டு சென்றும் குணப்படுத்த முடியவில்லை. மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வேதனையுற்றாலும் மகன் மீண்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் பார்த்து வந்தனர். பெற்றோர்களின் ஆதரவினால், 90 சதவீதம் உடல் பாதிப்புள்ள ஹரிகரசுதன் தற்போது அந்தப் பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எனது தாய்,  உன்னால் எல்லோரையும் போல வாழ முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தி வளர்த்தார். என்னால் எங்கும் செல்ல முடியாத நிலையில் வாகனம் வாங்கி கொடுத்து குறை தெரியாமல் வளர்த்தனர். என்னாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த சிறு தொழில் செய்ய, வியாபாரத்தை தொடங்கி வைத்தார். குறைந்தபட்சமாக 5 ஆயிரம் முதலீட்டில் காரசேவு, மிக்ஸர் பாக்கெட் எடுத்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்தேக வாகனத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விற்பனை செய்து வருகிறேன். உழைப்பே நம்பிக்கை என வாழ்ந்து வருகிறேன்.

ஊர் மக்களின் ஆதரவினால் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சாத்தக்கோன் ஊராட்சியில் 8 வது வார்டில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன்.

மற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத நான் உள்ளாட்சி பிரதிநிதியாக மாறி இன்று தனது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொடுப்பது வாழ்வில் பெருமையாக உள்ளது. 

தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக இருந்து வருவதுடன் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை உரிமைகளுக்காக தில்லி, சென்னைஎன 70 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். பாடல் பாட தெரியும் என்றதால் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற போட்டியிலும் பங்கேற்றுள்ளேன். ஊனம் என நினைத்து ஒதுங்கிவிடாமல் என்னாலும் தன்னம்பிக்கையுடன் முயன்று மக்கள் சேவையாற்றி வருவது பெருமையாக உள்ளது. 

யாரும் ஊனம் என முடங்கிவிடாதீர்கள் உங்களுக்கும் வாழ்க்கை உண்டு மற்றவர்கள் போல நாமும் உயருவோம்' என்கிறார் தன்னம்பிக்கையுடன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT