சிறப்புக் கட்டுரைகள்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி! தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் இளைஞர்

3rd Dec 2022 08:46 AM | வி. என். ராகவன்

ADVERTISEMENT

முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்கிற கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் என்னைச் சாவின் விளம்பில் இருந்து மீட்டது என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயத்தைச் சேர்ந்த சி. ஜெயராஜ்.

தற்போது 40 வயதை எட்டியுள்ள இவர் பள்ளிப் பருவத்தில் மற்ற சிறுவர்களைப் போலவே துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தவர்தான். ஆனால், அவரது 11 ஆவது வயதில் நிகழ்ந்த துயர சம்பவம் அவரை முற்றிலுமாக முடக்கிவிட்டது.

கடந்த 1993 ஆம் ஆண்டில் தனது அக்காவுடன் அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தபோது குடிபோதையில் ஓட்டுநர் ஓட்டி வந்த லாரி இவர் மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த இவருக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. நெஞ்சுக்குக் கீழே எந்த உணர்வும், அசைவும் இல்லாமல் போனது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்கள் சிகிச்சையில் இருந்தும் மீள முடியவில்லை. அடுத்து கோவை, சென்னை, கேரளம் என பல்வேறு ஊர்களிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்றும் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற இயலவில்லை.

ADVERTISEMENT

மனைவி மருதம்மாளுடன் ஜெயராஜ் 

இந்தச் சூழ்நிலையிலிருந்து மீள முடியாமல் தவித்த அவர் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு, தற்போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வருகிறார். அது எப்படி சாத்தியமானது என்பதை அவரே நம்மிடம் விவரிக்கிறார்...

"விபத்துக்குப் பிறகு கைகள் மட்டுமே அசைவுடன் இருக்கின்றன. நெஞ்சுக்குக் கீழே எந்தச் செயல்பாடும் இல்லை. இந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் பள்ளிக்கு வழக்கம்போல சென்றேன். என்றாலும், முழுமையாகச் செல்ல முடியாது; சென்றாலும் முழு நேரம் பள்ளியில் தொடர இயலாமல், பாதியில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன். இந்தச் சிரமங்களுக்கு இடையிலும் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன்.

அதன் பிறகு காயத்தால் ஏற்பட்ட சிரமங்கள் கடுமையாகிவிட்டன. சிறுநீர், மலம் கழிப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை புண் ஏற்பட்டுவிடும். அதுபோல எனக்கும் படுக்கைப் புண் வந்துவிட்டதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகி, சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். அப்படியொரு வேதனையை அனுபவித்தேன். 

செல்போன் சர்வீஸ் பணியில் ஜெயராஜ்

அப்போதுதான் வானொலியில் கண்ணதாசனின் மயக்கமா, கலக்கமா பாடல் ஒலிபரப்பானது. அதில் வந்த, 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்து பார்த்து நிம்மதி நாடு' என்ற இரு வரிகள்தான் என்னை மீண்டும் வாழ வைப்பதற்கான தன்னம்பிக்கையை அளித்தன.

அந்த காலகட்டத்தில் கோவையைச் சேர்ந்த வர்மக்கலை மருத்துவர் பாசு கண்ணா என்பவரை அணுகினேன். அவர் கொடுத்த மருந்தைப் பயன்படுத்தியதன் மூலம், 3 மாதங்களில் படுக்கை புண் ஆறிவிட்டது.

அதன் பின்னர், தென்காசியில் உள்ள அமர்சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் 2009-10 ஆம் ஆண்டில் சேர்ந்தேன். அங்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனக்கும் சிறுநீர், மலம் கழிப்பு மேலாண்மையை எப்படி மேற்கொள்வது என்பதைக் கற்றுத் தந்தனர். இதேபோல, சக்கர நாற்காலியை இயக்குவதையும் கற்றுக் கொடுத்தனர்.

தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்ற ஜெயராஜ்

அங்கு சென்ற பிறகுதான் நாம் எப்படி வாழ்வது என்பதை அறிந்து கொண்டேன். அதன் மூலம் வாழ்வதற்கு வழி கிடைத்தது. நாம் கோழையாக செத்துவிடக் கூடாது என்பதை உணர்ந்தது மட்டுமல்லாமல், எனக்கு வாழ வேண்டும் என்ற நம்பிக்கையும் அதிகரித்தது. அந்த அளவுக்கு அமர் சேவா மையத்தில் தன்னம்பிக்கை அளித்தனர்.

அந்த மையத்திலேயே கணினி பயிற்சி, செல்போன் சர்வீஸ் பயிற்சி போன்றவற்றையும் கற்றுக் கொண்டேன். மீண்டும் எனது ஊருக்கே சென்று 2013 ஆம் ஆண்டில் செல்போன் சர்வீஸ் கடை வைத்தேன். இப்போது, தொழில் நன்றாக நடைபெறுகிறது.

அமர்சேவா மையத்தில் இருந்தபோது, அங்கு பணியாற்றிய மருதம்மாள் என்ற பெண் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கேட்டார். இருவரும் 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டோம். தற்போது, மருதம்மாள் மின் வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். வாழ்க்கையும் மகிழ்ச்சியாகச் செல்கிறது.

தன்னம்பிக்கையால் 2014 ஆம் ஆண்டு முதல் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறேன். சக்கர நாற்காலிப் போட்டி, வட்டு எறிதல், நீச்சல் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்டுள்ளேன். இவற்றில் ஓரிரு முறை வெற்றியும் பெற்றேன். தொடர்ந்து 8 ஆண்டுகளாக சக்கர நாற்காலி மாரத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கங்களும் பெற்றுள்ளேன். 

என்னைப் போன்று தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசி வருகிறேன். தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோரிடம் விழிப்புணர்வு இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எங்களைப் போன்றவர்கள் ஒன்றிணைந்து 'தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு' என்கிற சங்கத்தை மாநில அளவில் 2012 ஆம் ஆண்டில் தொடங்கினோம். இதில், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், தஞ்சாவூர் மாவட்டத் தலைவராகவும் உள்ளேன்.

இதன் மூலம் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களுக்குத் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டு, வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறோம். மிக முக்கியமாக சிறுநீர், மலம் மேலாண்மையை எவ்வாறு சுயமாக மேற்கொள்வது என ஆலோசனைகள் கூறி, அதை அவர்களுக்கு மிகவும் எளிதான பணிதான் என்பதைப் புரிய வைக்கிறோம். மேலும், வெளியில் செல்லும்போது சிரமம் இருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலையில் எவ்வாறு சமாளிப்பது, மேலாண்மை செய்வது குறித்தும் ஆலோசனை வழங்குகிறோம். நாமும் சக மனிதர்களைப் போன்று வாழலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம்.

மேலும், தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு அரசு செய்து வரும் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சக்கர நாற்காலி உள்ளிட்ட தேவைப்படும் உபகரணங்களை அரசிடமிருந்து பெற்றுத் தர உதவி செய்கிறோம்.

எங்களுக்கு அரசு தொடர்ந்து நல்ல முறையில் உதவி செய்து வருகிறது. இப்போது, ரூ. 1.05 லட்சம் மதிப்புள்ள பேட்டரி வீல் சேர்களை வழங்குகிறது. இது குறித்துத் தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பெற்றுத் தருகிறோம். மாவட்ட அளவில் சந்திப்பு நிகழ்ச்சி, மருத்துவ முகாம்களும் நடத்துகிறோம். தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டு, சிரமப்படும் நிலையில் உள்ளவர்கள் எங்களை 99439 87160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார் ஜெயராஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT