சிறப்புக் கட்டுரைகள்

நிற்க, நடக்க முடியாது! இரு சக்கர வாகனத்தில் இன்னிசைக் குழு!

ஏ.எஸ்.கணேஷ்

இரு சக்கர வாகனத்தில் இன்னிசை சாதனங்களுடன் பாடல்களைப் பாடி கேட்போர் நெஞ்சை நெகிழ வைக்கிறார் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வரான பிரேம்ராஜ் (50).

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் குடும்பம் கடந்த 60 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறது. பிரேம்ராஜ்  ஐடிஜ படித்துள்ளார். இவர் பிரேம் ரிதம்ஸ் என்ற பெயரில் இன்னிசைக் குழு நடத்தி வந்தார். இவரது இன்னிசைக் குழு சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளது. 

அதனை நினைவுகூறும் பிரேம்ராஜுக்கு கடந்த 2016-ல் மாடியில் இருந்து தவறி விழுந்து இடுப்பு எலும்பு உடைந்தது. கடந்த 4 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்த அவர் உயிர் பிழைப்பாரா என்ற நிலையில்தான் இருந்தார். 

கால் வலி, வயிற்றுப் பகுதி கயிறு போட்டு முறுக்குவதுபோல் இருந்ததாகக் கூறும் அவரால் தற்போது நிற்கவும் முடியாது, நடக்கவும் முடியாது. அவரைத் தூக்கி இரு சக்கர வாகனத்தில் அமர வைப்பதற்கும் 2 பேர் வேண்டும். ஏன், இயற்கை அழைப்புகளைக் கழிப்பதிலும் பெரும் பிரச்னைதான் என்கிறார் பிரேம்ராஜ்.

தானாகச் செயல்பட முடியாததால் உதவிக்கு இருவர் உடனிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவரது மனைவி சகாயமேரி வருவாயில்தான் குடும்பத்தை நடத்துகின்றனர். ரோஹித், ஆல்பின் ராஜ் என இரு மகன்கள். ஒருவர் மெகானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறார். 2-வது மகன் 8 ஆம் வகுப்பு படிக்கிறார்.

மனைவி, மகன்களுக்கு பாரமாக இருக்க முடியாமல் சொற்ப வருமானத்தையாவது ஈட்டலாம் என்ற நோக்கில் இரு சக்கர வானகத்தையே மேடையாகப் பயன்படுத்தி வாகனத்தில் இன்னிசை சாதனங்களை பொருத்திக் கொண்டு அனைத்து கோயில்களிலும் பாடி வருகிறார் பிரேம்ராஜ். 

கடந்த 2011ல் வெளிநாட்டிற்கு இன்னிசைக் குழுவை அழைத்துச் செல்ல வீட்டுப் பத்திரத்தை ரூ. 4 லட்சத்திற்கு அடமானம் வைத்தார். ஆனால், இப்போது ரூ. 12 லட்சம் கொடுத்தால்தான் திருப்ப முடியும் என்பதால் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்.

'அன்றாடம் பாடுவதன் மூலம் ரூ. 500 முதல் ரூ. 700 வரை கிடைக்கும். சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலின் வாயிலில் பாட வாய்ப்பு வழங்கிய கோயில் நிர்வாகத்துக்கு நன்றி. ஐயப்பன் காப்பாற்றுகிறார், கடவுளை நினைத்து உருகி பாடும்போது வலியை மறக்கிறேன், கடவுளுக்காகப் பாடி மக்கள் உதவும்போது எனது குடும்பத்துக்கு நான் மேலும் பாரமாக இல்லை என உணர்கிறேன்' என்கிறார் இசைக் கலைஞர் பிரேம்ராஜ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT