சிறப்புக் கட்டுரைகள்

சப்தமில்லா புரட்சி: 'விபத்தில்லா தேசம்' உருவாக்கத் துடிக்கும் மைம் கலைஞர் வீரமணி சேகர்

வாணிஸ்ரீ சிவகுமார்


விபத்தில்லா தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சப்தமில்லாமல் ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் அம்பத்தூரைச் சேர்ந்த மைம் கலைஞர் வீரமணி சேகர்.

அதென்ன சப்தமில்லாமல் புரட்சி.. ஆம் வீரமணி வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. இத்தனை காலமும் தனக்குத் தெரிந்தவர்களிடம் தான் பேச பயன்படுத்திய சைகை மொழியுடன், மைம் கலையையும் கற்றுத் தேர்ந்து அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரது விழிப்புணர்வை பார்த்தும் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் பலருக்கும் இவரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அம்பத்தூர் பகுதியை வார இறுதி நாள்களில் வாகனத்தில் கடந்து சென்றிருக்கும் எவர் ஒருவரும் வீரமணி சேகரையும் அவரது தோழன் குழுவையும் சந்திக்காமல் இருந்திருக்க முடியாது என்ற அளவுக்கு இவர்கள் பிரபலம். ஆனால் இவர் முகம் யாருக்கும் தெரியாது. முகத்தில் முழு மேக்அப்புடன் கருப்பு ஆடையில்தான் இவர்களது விழிப்புணர்வு நடைபெறும்.

அதேவேளையில், இவர் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் சமூகத் தொண்டாற்ற வந்துவிடவில்லை. இவர் தனியார் வங்கியின் ஊழியர். பலரையும் போல அவரும் வாரம் முழுக்க கடினமாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர். வார இறுதி நாள்களில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இதற்குக் காரணம் பற்றி அவரிடம் கேட்டதற்கு, தனது மகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வாகனத்தில் வந்த இளைஞர் எங்களைத் இடித்துவிட்டுச் சென்றுவிட்டார். நல்ல வேளையாக மகளைக் காப்பாற்றிவிட்டேன். எனக்கு லேசான காயங்கள். ஆனால் அன்று என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். குறை இருக்கும் நானே ஒழுங்காக வாகனம் ஓட்டும் போது எல்லாம் நன்றாக இருப்பவர்கள் ஏன் சரியாக ஓட்டுவதில்லை என்று தோன்றியது. அது தன் நெஞ்சில் நீங்கா வடுவாக மாறியது. அது பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்த போது உதித்ததுதான் இந்த யோசனை. உடனே தோழன் அமைப்புடன் சேர்ந்து இப்பணியைத் தொடங்கினேன் என்கிறார்.

வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்கள் என்றால், தனது தோழன் குழுவோடு முக்கிய சாலைச் சந்திப்புகள், பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களுக்கு வந்து, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார்.
 
அது மட்டுமல்ல.. சாலைகளில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, அதனை சரி செய்ய போக்குவரத்துத் துறையினருடனும் இணைந்து பணியாற்றுகிறார்.  அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் நீர்நிலைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகள் எங்கு நடந்தாலும் அங்கு வீரமணி சேகர் நிச்சயம் இருப்பார்.

மைம் கோபியின் குழுவில் இணைந்து மைம் கலையை கற்றுக் கொண்டதோடு, தற்போது மற்றவர்களுக்கும் கற்பித்து வருகிறார். எல்லா சாலைகளிலும் இவரே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது என்பதால், ஏராளமான இளைய தலைமுறையினரையும் இப்பணியைச் செய்ய ஊக்குவித்தும் வருகிறார்.

இவரது குழுவில் திருநங்கை உள்பட ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். இவரைப் பார்த்து, தங்களது பிள்ளைகள் தலைக்கவசம் அணிவதாக பெற்றோர் வந்து பாராட்டி வாழ்த்திச் செல்லும் போது நிச்சயம் வீரமணிக்கு அது கேட்டிருக்கும்.

அவரிடம் யாராவது உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்.. விபத்தில்லா தேசம் என்றுதான் சொல்வார். மக்கள் சாலை விதிகளை கட்டாயம் மதித்தால் விபத்தில்லா தேசம் உறுதி. நமக்குத் தேவை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளைஞர்கள். சாலையில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்தத் தாயராக இருக்கும் இளைஞர்கள் என்கிறார்..

இவர்கள் செய்வதை அல்லது சொல்வதையெல்லாம் யார் பார்க்க, கேட்கப் போகிறார்கள் என்று நினைக்கவே முடியாது. காரணம். முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்கள் சிவப்பு விளக்குப் போட்டு நிற்கும் போது அந்த வாகனங்களுக்கு முன்பு கழுத்தில் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகையை மாட்டியபடி, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டாதீர்கள், தலைக்கவசம் அணியுங்கள் என்பதை மைம் கலை மூலம் நாடகமாக நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவார். ஒரு பக்கம் சிக்னல் விழுந்ததும், அடுத்தப் பக்கத்துக்குச் சென்று அங்கே வாகனங்களில் நிற்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று வானிலை என்ன சொல்கிறது என்பதெல்லாம் இவருக்கு முக்கியமில்லை. வானிலை எதுவாகினும் இவரது சமூகப் பணிக்கு விடுமுறை கிடையாது.

வெயிலிலும், காற்று, புகையிலும் நின்றுகொண்டு, தன்னை வருத்திக்கொண்டு, வாகன ஓட்டிகளிடம் இவர் மைம் கலையின் மூலம் சொல்ல வருவது, தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டுங்கள், இருக்கை பட்டை அணியுங்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள், சாலையில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டாதீர்கள் என்பதுவே.

பிறவியிலேயே பேசும், கேட்கும் திறன் இல்லாமல் பிறந்தவர். சிறப்புப் பிள்ளைகளுக்கான அடையாறு பால வித்யாலயா பள்ளியில் 5வது வரை படித்த அவருக்கு அங்கே கொடுத்த பேச்சுப்பயிற்சி மூலம் ஓரளவுக்கு பேசும் திறனையும், வாய் அசைவைக் கொண்டு பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறனும் கிடைத்துள்ளது.

பிறகு அரசுப் பள்ளியில் படித்துள்ளார். எங்கு தன்னுடன் படித்த பிள்ளைகள் கேலி செய்யும் போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாராம். படித்து முடித்து வேலைக்குச் சென்றதும் அங்கு ஒரு நல்ல சூழல் கிடைத்தது. அங்குதான் மைம் கலையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் பிறந்தது. இப்போது எனது அலுவலகத்தில் என்னை எல்லோரும் ஒரு கதாநாயகன் போல பார்க்கிறார்கள் என்கிறார் துள்ளலோடு.

இவரது தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கையால் விருதுகளையும் பெற்றுள்ளார். காவல்துறையினரும், போக்குவரத்துக் காவலர்களும் இவரது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்புடன் பாராட்டுகளையும் ஆதரவையும் அளித்து வருகிறார்கள்.

தன்னை பாதித்த ஒரே ஒரு சம்பவத்தால், விபத்தில்லா தேசம் என்ற சப்தமில்லா புரட்சியை விதைக்க முயல்கிறார் வீரமணி சேகர். பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT