சிறப்புக் கட்டுரைகள்

பொறுமையின் மாதம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 28

29th Apr 2022 05:00 AM | மு.அ.அபுல் அமீன்

ADVERTISEMENT

இஸ்லாமியர்களின் மூன்றாவது கடமையான ஒரு மாத நோன்பு ரமலான் மாதத்தில் நோற்கப்படுகிறது. இவ்வாண்டு நோன்பு கடந்த ஏப்ரல் 2ல் தொடங்கி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

"நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள்' என்று எழில் மறை குர்ஆனின் 2.45 -ஆவது வசனம் அறிவுறுத்துகிறது. இவ்வசனத்தில் வரும் பொறுமை என்பது நோன்பைக் குறிப்பதாக குர்ஆன் விரிவுரையாளர் குர் து பீ (ரஹ்) கூறுகிறார். 

இதனாலேயே நோன்பு கடமையான ரமலான் மாதத்திற்குப் "பொறுமையின் மாதம்' என்ற சிறப்பு பெயரும் உண்டு. "நோன்பு, பொறுமையின் சரி பாதி' என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதைத் திர்மிதீ, அஹமது முதலிய நூல்களில் காணலாம். 

பொறுமை, பாவங்களிலிருந்து விலகிடச் செய்யும். நடைமுறையில் பொறுமையற்றோர், ஒரு கோபத்தில் கொலை முதலிய கொடிய பாவங்களைச் செய்துவிட்டு பரிதவிப்பதைப் பாரில் காண்கிறோம், பத்திரிகைகளில் படிக்கிறோம். 

ADVERTISEMENT

அதனால்தான் பொறுமை, வெறுப்புக்குரியன செய்யாமல் விலகி, இலகுவாய் பொறுப்புடன் செயல்பட வைத்து, நாடிய நன்மை கை கூடச் செய்யும். 

பொறுமை இரு வகைப்படும். 1. சோதனை ஏற்படும் பொழுது பொறுமை காத்தல். அது அழகானது. 2. இறைவன் தடுத்ததை விட்டும் தற்காத்துக் கொள்ளுதல் அழகினும் அழகானது. 

"உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போல, நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உடையவர் ஆகலாம்' என்று 2.183 -ஆவது வசனம் அறிவிக்கிறது. இவ்வசனத்தில் வரும் உங்களுக்கு முன்னிருந்தோர் என்பது வேதக்காரர்களைக் குறிக்கிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விளக்கம் தப்ஸீர் இப்னு கதீரில் உள்ளது. இங்கு விளக்கப்படும் வேதக்காரர்கள் என்பது முன்னருள்ள நபிமார்களின் நற்போதனைகளைப் பின்பற்றியோரைக் குறிப்பிடுகிறது. 

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் மீதும் அல்லாஹ் ரமலானுடைய மாத நோன்பைக் கடமையாக்கி இருந்தான் என்று இப்னு உமர் (ரலி) இயம்புவது தப்ஸீர் இப்னு ஹாத்தியில் உள்ளது. 

நோன்பு நோற்பதால் உள்ளம் தூய்மை பெறுகிறது. அற்ப குணங்கள் அகலுகின்றன. தாழ்ந்த பண்புகள் வீழ்கின்றன. இவையே இறை அச்சத்தின் உச்ச பண்புகள். "நோன்பு கடமை எண்ணப்படும் நாள்களில் மட்டுமே ஆகும்' என்ற 2.184-ஆவது வசனப்படி நோன்பு ஆண்டு முழுவதும் கடமையல்ல. குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே கடமை. நூஹ் நபி காலத்தில் முற்கால மக்களுக்கு இருந்ததைப் போல மாதம் மூன்று நாள்கள் நோன்பு இஸ்லாத்தின் துவக்க கால கடமையாக இருந்தது. ரமலான் மாத நோன்பு கடமையானதும் இந்நோன்பு கடமை அல்ல என்று ஆனது. 

மாநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின் மாதத்தில் மூன்று நாள்களும், முஹர்ரம் பிறை பத்தில் ஆசுரா நாளிலும் நோன்பு நோற்றார்கள். ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பெற்ற மாதம். 

அம்மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும் என்ற 2.185 -ஆவது வசனம் அருளப் பெற்றதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நோன்பைக் கட்டாயக் கடமை ஆக்கினார்கள். நூல் - தப்ஸீர் இப்னு கதீர். நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தக் கூடாது. சஹர் உணவை இறுதி நேரம் வரை  உண்ண உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அறிவிக்கிறார் அபூதர் (ரலி). நூல்- அஹ்மது. ஒரு நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் வேண்டும் இறைவேண்டல் மறுக்கப்படாது. 

எனவே கடமையான நோன்பை இறை அச்சத்தோடு நோற்று எண்ணிய நல்லெண்ணங்கள் நிறைவேறி, இறையருளால் இனிதே வாழ்வோம்! 

ரமலான் -சிறப்பு கட்டுரைத் தொடர் முழுவதையும் படிக்க...

ADVERTISEMENT
ADVERTISEMENT