சிறப்புக் கட்டுரைகள்

'ஹஜ்' பெரு நாள்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 16

17th Apr 2022 05:00 AM | மணவை முஸ்தபா

ADVERTISEMENT

இறையில்லங்களின் தாய்

ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள் ‘ஹஜ்’ பெருநாளாகவும் அமைந்துள்ளது. ‘ஹஜ்’ என்ற சொல்லுக்குச் ‘சந்திக்க நாடுதல்’ என்பது பொருளாகும். ஹஜ்ஜின்போது உலகெங்குமுள்ள மக்கள் “கஃபா இறை இல்லத்தைச் சந்திக்க நாடி வருவதால் ‘ஹஜ்’ என அழைக்கப்பட்டது.

ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது இறுதிக் கடமையாக அமைந்திருப்பது ஹஜ் கடமை. எல்லோருக்குமுரிய கடமையாயினும் உடல் நலமும் பொருள் வசதியுமுள்ளோருக்குக் கட்டாயக் கடமையாகும்.

துல்ஹஜ் மாதத்தில் உலகெங்குமுள்ள முஸ்லிம் மக்கள் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குவதற்கென மக்காவில் அமைந்துள்ள ‘கஃபா’ இறையில்லம் சென்று இறைவணக்கம் புரிவதே ஹஜ் ஆகும்.

ADVERTISEMENT

உலகிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களுக்கும் தாய் போன்றது கஃபா இறையில்லம். ஆனால், உலகிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தின் அமைப்புக்கும் தன்மைக்கும் முற்றிலும் மாறுபட்டதாக கஃபா விளங்குகிறது. உலகெங்குமுள்ள பள்ளிவாசல்களில் இறை வணக்கம் புரிவோர் கஃபா இருக்கும் திசையை நோக்கியே தொழுவர். ஆனால், கஃபா இறையில்லத்தில் வணக்கம் புரிவோருக்கு திசை கட்டுப்பாடு ஏதுமின்றி எல்லாத் திசைகளிலும் கஃபாவைச் சுற்றி வட்டவடிவமாக நின்று தொழுகின்றனர்.

வாழ்வின் உட்பொருளை வெளிப்படுத்தும் ஹஜ்

ஹஜ் என்பது மனித வாழ்வின் சூட்சம நோக்குகளை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வோர் தாங்களே பாடுபட்டு நேர்மையான முறையில் தேடிய பொருளைச் செலவிட்டே ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணம் மேற்கொள்வோர் எல்லாவித உலகியல் பற்றுகளையும் விட்டொழித்தவராக இறைவனையும் இறையில்லச் சிந்தனையையும் தவிர, மற்ற எதையும் நினைக்காதவராகத் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார். இது அவரது மறுமையின் பயணத்தை அவருக்கு நினைவூட்டுவதாக அமைகிறது.

தனது குடும்பம், உற்றார் உறவினர், சொத்து சுகம் அனைத்தையும் துறந்தவராக கஃபா இறை இல்லம் நோக்கி ஹஜ் பயணம் செல்பவர் தனது மரணப் பயணத்தையே நினைவு கூர்பவராகிறார்.

ஹஜ் பயணம் செய்வோர் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இருந்தே தனது ஆடம்பர ஆடை அணிகலன் அனைத்தையும் களைந்துவிட்டு தைக்கப்படாத சாதாரண துணியிலான இரு வெள்ளைத் துண்டுகளை மட்டுமே அணிகிறார்கள். இவ்வாறு அரசராயினும், ஆண்டியாயினும் எல்லாரும் ஒரே மாதிரியான 'எஹ்ராம்' எனும் தைக்கப்படாத வெள்ளுடை உடுத்தியே இறையில்லம் செல்ல வேண்டும். இதே உடைதான் இறந்த சடலத்துக்கும் (மையத்) போர்த்தப்படுகிறது. எனவே, இந்த எஹ்ராம் எனும் வெள்ளுடை அணியும் ஹஜ் பயணி தனது மரணத்தையே நினைவு கூர்பவராகிறார். 

இதையும் படிக்க | பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 1

வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘எஹ்ராம்’ போன்ற வெள்ளுடையையே இறுதிவரை அணிந்து வந்தார் என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

ஒருமை உணர்வு தரும் கஃபா இறையில்லம்

ஹஜ்ஜின்போது லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கஃபா இறையில்லத்தில் கூடுகின்றனர். எல்லோருமே ஒரேமாதிரி சீருடையில் தைக்கப்படாத இரு துண்டுத் துணிகளை அணிந்தவர்களாக காட்சி தருகின்றனர். பல்வகைப்பட்ட மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தபோதிலும் அங்கு ஒரே மொழியில் அரபியில் இறை வணக்கம் புரிகின்றனர். வேற்றுமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகத்தான ஒற்றுமையை சமத்துவத்தை சொல்லிலும், செயலிலும் இறைவன்முன் நிலைநாட்டுகின்றனர்.

ஹஜ் கடமை நிறைவேற்றம்

கஃபா இறையில்லத்தை ஹஜ் செய்வோர் ஏழு முறை ‘தவாப்’ சுற்ற வேண்டும். ‘தவாப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘சுற்றி வருதல்’ என்பது பொருளாகும். அதன்பின் அருகிலுள்ள ஜம்ஜம் கிணற்று நீரைக் குடித்து விட்டு சஃபா மருவா என்னும் இரு குன்றுகளிடையே ஏழு முறை தொங்கலோட்டம் ஓட வேண்டும்.

இக்கடமைகளை இனிது நிறைவேற்றிய ஹாஜிகள் அடுத்து மக்காவிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள மினா என்னுமிடத்தை அடைந்து, தங்கி இறைவணக்கம் புரிவார்கள்.

அடுத்த நாள் வைகறையில் தொழுகையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அருகில் உள்ள அரஃபாத் பெரு வெளியில் ஹாஜிகள் குழுமுகிறார்கள்.

ஹஜ் கடமையே இங்குதான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது. ஒரே மாதிரியான வெள்ளைச் சீருடை அணிந்த லட்சக்கணக்கான ஒரே மாதிரியான கூடாரங்களில், ஒரே மாதிரியான வெள்ளை எஹ்ராம் உடையில் தங்கிப் பிரார்த்தனை செய்கின்றனர்.

உலக ஒருமைப்பாட்டு மாநாடு

ஹஜ்ஜின்போது குழுமும் ஹாஜிகள் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாயிருந்தும், பல்வேறு விதமான மொழிகளையே பேசுபவர்களாயிருந்தும் வெவ்வேறு விதமான கலாசார அடிப்படையில் ஆடை அணிகளை அணியும் வழக்கமுடையவர்களாயிருந்தும், பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாயிருந்தும் ஏழை-பணக்காரன், அரசன் - ஆண்டி என்ற பொருளாதார வேற்றுமைக்கு உட்பட்டவர்களாயிருந்தும் கருப்பன் வெள்ளையன் நிற பேதமுடையவர்களாயிருந்தும் இறையில்லத்தின் முன் இந்த வேறுபாடுகள் எதுவும் இல்லாதவர்களாகக் குழுமி ஒரே மாதிரியான எஹ்ராம் வெள்ளுடையில் ஒரே இறைச் சிந்தனையுடன் ஒரே மொழியில் இறையருளை வேண்டி நிற்கும்போது உலக மக்கள் அனைவருமே ஆதி பிதாவான ஆதாமின் மக்கள் என்பதை உலகறிய பறைசாற்றும் ஒப்பற்ற காட்சியாக அமைகிறது. இறைவன் முன் எல்லோரும் ஓர் குலம், ஓர் இனம், ஓர் நிறை என்ற உன்னத நிலையை செயல் வடிவில் உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது. 40 லட்சத்து ஹாஜிகளும் வியக்கத்தக்க ஒற்றுமையுடனும், ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, ஆண்டு தோறும் ஹஜ் திருநாளின்போது நிலைநாட்டுகிறார்கள்.

தியாக சீலர் ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்களால். நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பு உலக மக்களுக்கு விடுவிக்கப்பட்ட ஹஜ் அழைப்பு, பதினைந்து நூற்றாண்டுகளாக பெருமானார் அவர்களால் முறைப்படுத்தப்பட்ட ஹஜ் கடமை, உலகமே வியக்கும் வகையில் அனைத்து வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் உலக முஸ்லிம்களின் மாபெரும் மாநாடாகவே நடந்து வருகிறது.

நாளை: இஸ்லாமியப் புத்தாண்டு தரும் செய்தி 

இதையும் படிக்க | பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 2

ADVERTISEMENT
ADVERTISEMENT