சிறப்புக் கட்டுரைகள்

சித்திரை மகளே!

முனைவர் சி.பிரகலாதன்

ஆழிசூழ் உலகினில் அளப்பரிய மொழிகள் பலஉள. 

ஆயினும் தரணி புகழ் தமிழே இனிதென கண்டோரும் கற்றோரும் உவப்பக் கூறி உள்ளம் மகிழ்ந்தனர். இந்நிலையில் சித்திரை மகளின் வருகை சிறப்பாய் அமையும் என்று எவரோ கூறிவர் இவர். இத்தரணியில் உள்ளோர் யாவரும் இத்திருமகளை வரவேற்க உவப்புடனே கூடி நிற்பர். 

பார்புகழும் சித்திரையின் வருகையினால் மணம் வீசும் நற்காற்று வானளவு மனம்பரப்பி சித்திரைத் திங்களன்று செம்மார்ந்து நடை பழக்க வருகைதரும் தமிழ் மகளே வருக! வருக!! 

எத்திக்கும் புகழ் பரப்பும் தமிழ் மகளின் நல்வரவால் தமிழர் வாழ்வு சிறக்கும் என்ற சிந்தையொடு தமிழ் மகள் இன்று தரணி வாழ் தமிழர்கட்கு மணிமகுடமாய் வந்திட்டால் சித்திரை பெயர் தரித்து 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம்தமிழ்க்குடி மக்கள் உலகினில் எத்திசையும் சென்று கோலோச்சித் திரும்பினார்கள்.

நன்றி என்பது நெஞ்சில் நிலைநிறுத்தும் நினைவு மட்டுமல்ல. அந்த நன்றி உணர்வோடு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர் தமிழர்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும், 
என்ற ஐயனின் குறள்வழி நின்று வாழ்வை நடத்திய தமிழர்கள்.

தமிழையும் தம் மொழியையும் தம் தமிழ் இனத்தையும் மறந்தாரிலர்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் புறப்பாட்டின் வரிகளுக்கு ஏற்ப யாவும் தம் ஊரே.

யாவரும் நம் உறவினர் என்ற உயரிய சிந்தனை கொண்ட வாழ்வியலைக் வாழ்ந்து காட்டுபவர்.

தமிழை அளப்பரிய மொழியாகவும் அம்மொழியைப் பேசும் உயரிய நெஞ்சுரம் கொண்டவராகவும் வாழ்வதாலேயே இவ்வுலகம் இன்றும் மகிழ்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்த் தெருவில் விளையாடி தங்கத் தமிழில் தாலாட்டு கேட்டு தமிழச்சியின் வயிற்றிலே தமிழனாய்ப் பிறந்த நான் தமிழ் இனி என்றும் வாழும் என்று இறுமாப்பு கொண்டு சூளுரைப்பேன்.

"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும், மெல்லிடையில் மேகலையும், சிலம்பார் இன்பப் போதொளிரும் பூந்தாமரையும், பொன்முடி சூளாமணியும், பொலியச் சூடி நீதியொளிர் செங்கோனாய்த் திருக்குறள் தாங்கு தமிழ் நீடு வாழ்க" என்றெல்லாம் அழகாய் காட்சி தரும் தமிழ்த்தாயை வாயாரப் போற்றுவர் தமிழ்ச் சான்றோர்.

"முந்தைய நாளினில் அறிவும் இலாது மொய்த்த நன்மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரை காடு பூத்ததுபோல செழித்த என் தமிழே ஒளியே" என்றார் புரட்சிக்கவி.

இன்று அந்த அமுதத் தமிழ், அருமைத் தமிழ், அழகுத் தமிழ் வாழும் திசை மாறாமல் என்றும் இளந்தமிழாய் கன்னித் தமிழாய் வலம்வரும் இப்புவியில் "பிழைப்பிற்குக் கூட அன்னிய மொழி நாடேன்.... அருந்தமிழ் இருக்கும் போழ்து எம்மொழிக்கும் அடிபணியேன்" என்றார் வ.சுப. மாணிக்கனார்.

தேனினும் இனிய தீந்தமிழ் மொழி கற்று மேன்மையடைவோம். முந்து தமிழை மொழிகளுக்கு எல்லாம் மூத்த தமிழை ஓயாது வீசும் தென்றலாம் வீசச்செய்வோம் திக்கெட்டும்.

"தாய்மொழியை பழித்தவனை
தாய்தடுத்தாலும் விடேன்" 
என கொதித்தெழுந்த புரட்சிக்கவிஞரை பின்தொடர்ந்து, எம் தாய்மொழிக்கு பாராட்டு இல்லை எனில் அந்த பாராட்டைக் குப்பைக் தொட்டியில் போடென்று உதறித் தள்ளு என்றார் வங்கக் கவிஞர் தாகூர்.

"நாளை என் தாய்மொழி மரணிக்கும் என்றால் இன்றே நான்" என்றான் ரஷ்ய கவிஞர் ரசூல் கம்சதேவ்.

ஆம் எந்நாட்டவராயினும் அவரவர் தாய்மொழியே அவர்தம் உயிராகும். 
ஆனால், நம் தாய் நாட்டில் மட்டும்தான் தாய்மொழி அல்லாது எம்மொழி பேசினாலும் ஆனந்தமாய் இருக்கும் நிலையை மாற்றி "சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும்.... எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்ற பற்றுதலோடு தமிழ்பரப்பி, தமிழுக்காக தன் தலையையே கொடுக்கத் துணிந்த குமண வள்ளல் போல, தமிழை நம் உயிராகக் கொண்டு வாழ வேண்டும். பிறரையும் நாம் வாழச்செய்ய வேண்டும். 

"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே....
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே...."

என்ற பாரதியின் வரிகள் சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்ட தமிழ் அன்னையின் தமிழ்ப் புத்தாண்டு சித்திரைத் திருநாளில் சேமமுற வேண்டும்!
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்திட வேண்டும்! தேமதுரத தமிழோசை உலகமெலாம் பரவிடச் செய்ய வேண்டும்

என்ற பாரதியின் கனவை நனவாக்கி தமிழ் சித்திரைத்  திங்களாய் நாளும் வளர்ந்து பங்குனி பருவப் பெண்ணின் விரல் பற்றி திக்கெட்டும்

புகழ் மணக்க....
தமிழணங்கே.....
நீடுவாழ்வாய்.....
கதிரும் நிலவும்
பாரினை வலம் வரும்  நாள்வரை......


[கட்டுரையாளர் - என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, கூடலூர், தேனி மாவட்டம்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT