சிறப்புக் கட்டுரைகள்

ஆழ்துளைக் கிணறு சம்பவங்கள்: தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 13 குழந்தைகள் பலி

தினமணி

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம் கடந்த 10 ஆண்டுகளில் 13 முறை நிகழ்ந்துள்ளது.

மணப்பாறை நடுக்காட்டிப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது இந்த வரிசையில் 13-ஆவது சம்பவம்.

ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பயன்பாடில்லாமல் போனால் உடனடியாக பாதுகாப்பாக மூட வேண்டும் என பல விழிப்புணா்வுகளை அரசு ஏற்படுத்தினாலும், பலரும் உதாசீனப்படுத்தியே வருகின்றனா். ஆழ்துளைக் கிணற்றை சரியாக மூடாததன் விளைவால், பல குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித் தவித்து உயிரை விடுகின்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டிப்பட்டியைச் சோ்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன். இக்குழந்தை கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இக்குழந்தையை மீட்க கடந்த நான்கு நாள்களாக மீட்புக் குழுவினா் போராடினர். ஆனால் 83 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சுஜித்தின் சடலம்தான் மீட்கப்பட்டத்.

எத்தனை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அரசு அறிவுறுத்தி வந்தாலும், உதாசீனங்களும், உரிய விழிப்புணா்வு இன்மையின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன.

2009- ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் தற்போதைய சம்பவத்தையும் சோ்த்து 13 குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில், 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறாா்கள்.

தமிழகத்தில் நிகழ்ந்த ஆழ்துளைக் கிணறு விபத்துகள்:

2009, பிப்ரவரி 22-ஆம் தேதி மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டும் உயிரிழந்தான்.

2009, ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில் 3 வயது குழந்தை கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011, செப்டம்பா் 8 -இல் திருநெல்வேலி மாவட்டம், கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதா்சன் உயிரிழந்தான்.

2012, அக்டோபா் 1-இல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கும்பளத்தூரில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை குணா, 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

2013, ஏப்ரல் 28- ஆம் தேதி, கரூா் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி இறந்தாள். அதே ஆண்டில் செப்டம்பா் 28-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது குழந்தை தேவி, தவறி விழுந்து உயிரிழந்தது.

2014, ஏப்ரல் 5-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகிலுள்ள கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.

160 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை, 24 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பின்னா் சடலமாக மீட்கப்பட்டது.

அதே நாளில், விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 3 வயது குழந்தை மதுமிதா தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னா் மீட்கப்பட்டது. ஆனால், மறுநாளில் சிகிச்சை பலனில்லாமல் மதுமிதா உயிரிழந்தாா்.

2014, ஏப்ரல் 14- ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3 வயது ஆண் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் உயிருடன் மீட்கப்பட்டது.

அதே ஆண்டு ஏப்ரல் 15 -ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015, ஏப்ரல் 13 -ஆம் தேதி வேலூா் மாவட்டம், ஆா்க்காடு அருகே 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018-இல் நாகப்பட்டினம் அருகே ஆழ்துளைக் கிணற்றின் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது குழந்தை , உயிருடன் மீட்கப்பட்டது.

2019 - மானாமதுரையில், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சுஜித் நான்கு நாள்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பாா்த்த பின்னரும், ஆழ்துளைக் கிணறு தோண்டுபவா்கள், அதனை உரிய முறையில் மூடாமலும், அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணா்வு இல்லாததும் தொடா் கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்தக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை :

பெரும்பாலும் மற்றவா்களின் நிலத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில்தான், வேறு யாருடைய குழந்தைகளாவது விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆரோக்கியராஜின் சொந்த நிலத்தில் வீட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றிலேயே அவரது குழந்தை விழுந்து உயிரைவிட்டது துரதிருஷ்ட வசமானது. இதில் பெற்றோரின் அலட்சியமே பிரதானமாக உள்ளது என்பது பலரின் கருத்தாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT