சிறப்புக் கட்டுரைகள்

பொசஸிவ்னஸ் போட்டியில் தோற்கடிக்கப்படும் மாமியார்கள்!

24th Oct 2021 05:45 AM | சவி.குமார்

ADVERTISEMENT

உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை மாமியார்கள் தினமாக கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஆனால் இது அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரர்கள் தினம் உள்ளிட்ட மற்ற தினங்களைப் போல சிறப்பாக கொண்டாடப்படுவது இல்லை.

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் திரித்துக் கூறப்பட்ட இந்த கோஷத்தை தூக்கி சுமக்கப் போகிறீர்கள். மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பதுதான் அந்த பழமொழி. 

இப்படி சமூகம் முழுவதும் மாமியார்களுக்கு எதிராக பரவிக் கிடக்கும், செய்திகளும், சொல்லாடல்களும், கதைகளும், திரைப்படங்களும், குறிப்பாக சீரியல்களும் தொடர்ந்து அவர்களை இரக்கமற்றவர்களாகவே நிறுவி வந்துள்ளது. குறிப்பாக சிறைச்சாலையை "மாமியார் வீடு" என அழைப்பது எல்லாம் அந்த உறவுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையின் உச்சம்.

உலகில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணாதிக்கச் சிந்தனை சூழ்ந்த இந்திய சமூகத்தில் பெண்கள் இன்றளவும் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த தவறான கட்டமைப்புகள், பெண்கள் பிறக்கும்போது பெற்றோரைச் சார்ந்தும், வளரும்போது உடன் பிறந்தவர்களைச் சார்ந்தும், திருமணத்துக்குப் பின் கணவனைச் சார்ந்தும், குழந்தைகள் பிறப்புக்குப் பின் அவர்களைச் சார்ந்தும், பிள்ளைகளின் திருமணத்துக்குப் பின் அவர்களது பேரக் குழந்தைகளைச் சார்ந்தும் வாழ வைக்கிறது.

ADVERTISEMENT

இந்த கட்டமைப்பின் காலச் சக்கர சுழற்சியில், ஒருமுறை அதிகாரம் செலுத்தும் நிலையை பெண்கள் எட்டும் நிலையே  மாமியார் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களுக்கான பணிவிடைகளைச் செய்ய பழக்கப்படுத்தப்பட்ட பெண்கள், வீட்டுக்கு வரும் மருமகள்களை தனக்கு கீழானவராக பாவித்து நடந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் தான் மாமியார்களை அந்நியப்படுத்துகிறது. 

இந்தியா முழுவதும் 1970கள் தொடங்கி 1990களின் தொடக்கக் காலம் வரை நாளிதழ்களில் வரதட்சணைக் கொடுமை சாவுகள் குறித்த செய்திகள் நீக்கமற நிறைந்திருந்தன. அதன் பின்னர் நடந்த சமூக மாற்றம், கடுமையாக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளால்  ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரம் காதல் திருமணங்களும், உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் வரதட்சணை போன்ற சமூக அவலங்களைத் தடுத்து நிறுத்தின.

ஆனால், ஆதிக்கக் கட்டமைப்பின் கற்பிதங்களை உள்வாங்கிய மாமியார்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சமூகம், குடும்பம், உணவு, சொத்து, நம்பிக்கை உள்ளிட்டவற்றை கட்டிக் காக்கும் பணிகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சடங்குகளின்போது மகனுக்காக வரதட்சணைகளைக் கேட்டு வாங்கவும், மகளுக்காக வரதட்சணைகளைக் கொடுக்கவும் செய்கின்றனர்.

மாமியார் என்பவரும் ஒருகாலத்தில் மருமகளாக இருந்தவர்தான். இதனை மனதளவில் உணராததாலோ என்னவோ அவர்களுக்கு எதிரான உளவியல் தாக்குதல்கள் இன்றளவும் கூர்மைபடுத்தப்படுகிறது. ஒரு 25-30 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் குடும்பத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படும்போது ஏற்படுகிற பொசஸிவ்னஸ் பாலிடிக்ஸ்தான் மாமியார் - மருமகள் முரண்களுக்கான அடிப்படைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

அதுவரை அம்மா சமைத்ததை உண்டு, துவைத்ததை உடுத்தி, சம்பளம், சேமிப்பு, கடன், செலவு என எல்லாத்துக்கும் அம்மாக்களைச் சார்ந்திருக்கும் மகன்களது வாழ்க்கை, மருமகள்களின் வரவால் தடம் மாறும். இதனால் ஏற்படும் பொசஸிவ்னஸ் பாசப் போராட்டத்தில் வீழ்த்தப்படுவதோ என்னவோ மாமியார்கள்தான்.

மருமகள்களின் வரவால் தங்களது அதிகாரம் பறிக்கப்பட்டதாக உணரும் மாமியார்களுக்கு எதிர்காலம் குறித்த கவலைத் தொற்றிக் கொள்கிறது.
இதனால் ஏற்படப் போகும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அந்த வீட்டுக்கு வந்த மருமகள்களுடன் முரண்பாட்டை உண்டாக்குகிறது. இந்த முரண்களை சாதகமாக்கிக்கொள்ளும் இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் கையிலெடுக்கும் பிரம்மாஸ்திரம் தனிக்குடித்தனம்.   இந்த முடிவு ஒரு சில இடங்களில்  மாமனார் மாமியார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பியும் விட்டது. 

இந்த நிலையில் தற்காலத்தில் ஒரு சிலர் மாமியரை 'அம்மா' என அழைக்கும் போக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத் தகுந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாம் வாழும் வீடுகளின் பரப்பு குறைந்து, பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அந்த சிறிய பரப்பை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் தேவையிருப்பதால், மாமியார் உள்ளிட்ட வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கான முன்னுரிமையை இழந்து வருகின்றனர். அதேவேளையில் குழந்தை, அம்மா, அக்கா, மாமியார் இன்னும் எத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பெண்களை அடிமைப்படுத்தும் தீண்டாமைகள் ஹைபர்சோனிக் ஏவுகணைகளைப் போல் துல்லியமாக்கப்பட்டிருக்கிறது
என்பதே நிதர்சனம்.

Tags : mother-in-law day motherinlaw day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT