சிறப்புக் கட்டுரைகள்

'மாமியாரும் அம்மாதான்' - மருத்துவ மருமகள்கள் பெருமிதம்!

எம்.மாரியப்பன்

இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று…கடவுள் அமைத்து வைத்த மேடை…ஆம் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து புதிய குடும்பத்திற்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மகிழ்ச்சி, துக்கம் அனைத்திலும் கணவர் வீட்டினுரோடு உறுதுணையாக இருப்பவர்கள் மருமகள்கள் எனும் மகள்கள்.

நெற்றிப் பொட்டு பிறந்த வீட்டின் அடையாளமாகவும், உச்ச நெற்றிப் பொட்டு(வகிடு பகுதி) புகுந்த வீட்டின் அடையாளமாகவும் பெண்களுக்கு கருதப்படும். இதில் உச்ச நெற்றிப் பொட்டையை பெரும்பாலும் பெண்கள் இட்டுக் கொள்வர். தாங்கள் திருமணமானவர் என்பதற்கான அடையாளச் சான்றும்கூட.

பெற்ற தாய், தந்தை வளரும் காலம் வரை, மாமனார், மாமியார் என்பது ஆயுள் முடியும் வரையில் என்பதுதான் பெண்ணினத்துக்கான வரம். ஒரு சில இடங்களில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களுக்காக அனைவரையும் குற்றம் சாட்டலாகாது. அத்தையும், அன்னையைப் போன்றவர்தான். அவருடைய அன்பு கிடைத்துவிட்டால், புகுந்த வீட்டுக்கு செல்லும் மருமகள்கள் வாழும் வீடு சொர்க்கத்துக்கு நிகரானது.

மல்லிகா குழந்தைவேல்

தாங்கள் புகுந்த வீடு அன்பாலும், அமைதியாலும் உருவான அழகான கோட்டை என்கின்கிறனர் நாமக்கல்லில் அமைந்துள்ள பிரபல தங்கம் புற்றுநோய் மருத்துவமனையின் மூன்று மருத்துவ மருமகள்கள்.  

இந்த மருத்துவமனையின் தலைவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த மருத்துவர் குழந்தைவேல். இவரது மனைவி மல்லிகா குழந்தைவேல். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இருவரும் மருத்துவர்கள். மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் காதலித்து மணம் புரிந்து கொண்டனர்.

இவர்களுக்கு சரவணன், தீபன், கார்த்திக் ஆகிய மூன்று மகன்கள். மூன்று பேரும் மருத்துவர்கள். குஜராத்தைச் சேர்ந்த தீப்தி மிஸ்ராவை சரவணன் மருத்துவம் பயிலுகையில் காதல் மணம் புரிந்தார். கோவையைச் சேர்ந்த மருத்துவர் சுபா–தீபன், ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் மகாலட்சுமி–கார்த்திக் மற்ற இரு தம்பதிகள். மூன்று மகன்கள் மட்டுமல்ல, மூன்று மருமகள்களும் மருத்துவர்களே. இவர்களை அரவணைத்து வாழும் மருத்துவத் தம்பதிகள் குழந்தைவேலும், மல்லிகா குழந்தைவேலும்.

மாமியார் தினமான இன்று, நாமக்கல் தங்கம் மருத்துவமனையின் மூன்று மருமகள்கள் தங்களுடைய மாமியார் மல்லிகாவை பற்றி பகிர்ந்து கொண்ட சுவையான தகவல்கள் இதோ:  

தீப்தி மிஸ்ரா சரவணன்       

முதலில் மூத்த மருமகளான தீப்தி மிஸ்ரா, 'நான் பிறந்து வளர்ந்தது அனைத்தும் குஜராத்தில் தான். எனது கணவர் சரவணன், இருவரும் காதல் மணம் புரிந்து கொண்டோம். என்னுடைய மாமனார், மாமியார் இருவரும் மற்றொரு அன்னை, தந்தை போன்றவர்கள். மொழி தெரியாத மாநிலத்தில் திருமணமாகி வந்த நிலையில், எனக்கு ஆதரவளித்தது மாமியார் மல்லிகா தான். நல்ல தாய் அமைவதும், மாமியார் அமைவதும் இறைவன் வழங்கும் வரம். தமிழகத்தில் எனக்கொரு நல்ல அம்மா கிடைத்திருப்பது இயற்கை தந்த பரிசு. மாமியார் என்பவர் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல, ஆணிவேரும் கூட. பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இருந்து எங்களை வழிநடத்துகிறார். அவரும் மருத்துவர், நானும் மருத்துவர் என்பதால், ஒரு ஆசிரியை, மாணவியைப் போன்ற உறவும் எங்களிடையே உண்டு. மல்லிகை மணம் எவ்வாறு மாறாதோ, அதேபோல் எனது மாமியார் மல்லிகாவின் குணம் என்றும் மாறாது. மாமியார் என்று சொல்வதைவிட அம்மா என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்' என்றார் தன்னுடைய மழலை குஜராத்திய தமிழில் தீப்தி மிஸ்ரா. 

சுபா தீபன்

இரண்டாவது மருமகள் சுபா, 'தாய் என்பவர் மாமியாராகவும், மாமியார் என்பவர் தாயாகவும் மாற முடியுமா என்று கேட்டால் முடியும் என்பேன். ஏனென்றால் அவரும் ஒரு வீட்டின் மருமகளாக இருந்து மாமியாரானவர். அவருக்கும் மருமகள்களின் தேவை என்னவென்பது நன்றாகவே தெரியும். என்னைப் பொருத்தவரை பல நேரங்களில் அவரை எனது அம்மாவாகத் தான் பார்க்கிறேன். அத்தை என்று அழைத்த நாள்களை காட்டிலும் அம்மா என்று அழைத்த நாள்கள் அதிகம். மகன்களையும், மருமகள்களையும், பேரன்களையும் அரவணைத்து, அன்பு செலுத்தி குடும்பத்தை நகர்த்தி செல்லும் அவருடைய பாங்கு எங்களுடைய இளமையில் நாங்கள் கற்க வேண்டிய பால பாடம், அவருக்கு மாமியார் தின வாழ்த்துக்களை அன்புடன் பகிர்ந்து கொள்கிறேன்' என்றார் மகிழ்ச்சி புன்னகையுடன் சுபா .          

மகாலட்சுமி கார்த்திக்

 மூன்றாம் மருமகள் மகாலட்சுமி, 'ரத்த சம்மந்தமே இல்லாத ஒரு புனித உறவு பெண்ணுக்கு எதுவென்றால் அது மாமியார் உறவு தான். புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாமியார் என்பவர் மற்றொரு அன்னையாவார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. எங்களுடைய அத்தை மல்லிகா, பெயருக்கு ஏற்றவாறு குணங்களைப் பெற்றவர். இதுவரை அவர் பிறரை கண்டித்து நான் பார்த்ததில்லை. அமைதிக்கு மறுபெயர் என்னவென்று கேட்டால் எனது அத்தையை தான் குறிப்பிடுவேன். அத்தை மட்டுமின்றி, மாமாவும் அன்பாலும், நகைச்சுவைப் பேச்சாலும் இல்லத்தை அலங்கரிப்பவர். தங்கம் மருத்துவமனை குடும்பத்தின் மருமகளானது ஆண்டவன் எனக்கு அளித்த வரம்' என்றார் மகாலட்சுமி.

மூன்று மருமகள்களையும் வாழ்த்தியபடி நம்மிடையே மாமியார் மல்லிகா குழந்தைவேல் கூறியதாவது: னக்கு ஒரு மகள் இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்தது. குடும்பத்திற்கு ஒரு பெண் வாரிசு இல்லாமல் போனதை என்ற கவலை எட்டிப்பார்த்த நாள்கள் அதிகம். பெண்ணாக இருந்தால் தலைவாரி, பூச்சூடி, நகைகளை அணிவித்து, கண்ணுக்கு மை தீட்டி அழகு பார்க்கலாம். அதற்கான வாய்ப்பு இல்லையே என அவ்வப்போது வருத்தப்படுவேன். மகன்கள் மூவருக்கும் திருமணம் நடைபெறும் வரையில் தான் இருந்தது. அதன்பின் மூன்று மருமகள்கள் அழகு பதுமைகளாக வந்து என் வீட்டை அலங்கரிக்கின்றனர். எனது மகள்களாக அவர்களை பார்ப்பதால் நான் பட்ட கவலையெல்லாம் காணாமலே போய்விட்டது. ஆல்போல் தளைத்து, அருகுபோல் வேரூன்றி, வாழையடி வாழையாக மகன்களும், மருமகள்களும், பேரன், பேத்திகளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே  எனது விருப்பம் என்றார்.

1,

2, சுபா தீபன்

3.மகாலட்சுமி கார்த்திக்.

4. மல்லிகா குழந்தைவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT