சிறப்புக் கட்டுரைகள்

இந்திரா காந்தி என்னும் மாமியார்!

24th Oct 2021 05:30 AM | மோகன ரூபன்

ADVERTISEMENT

இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இரு மருமகள்களுக்கு மாமியார் என்ற பதவியையும் அந்தக் காலத்தில் வகித்திருக்கிறார். அந்த இரு மருமகள்கள் சோனியா காந்தி, மேனகா காந்தி என்பதை சொல்லவே தேவையில்லை. அனைவருக்கும் தெரியும்.

நெருக்கடி நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி பிரதமர் பதவியை இழந்தபின் அவரது வீட்டு நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக மாறிப்போனது. வீடு கொஞ்சம் குழப்பத்தில் இருந்தது. வீட்டில் வேலைக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது. மருமகள்கள் இரண்டு பேர்களுக்குமே வீட்டின் அந்த மாதிரியான சூழ்நிலை ரொம்ப புதியது.

அந்த காலகட்டத்தில் முன்னாள் பிரதமரின் வீட்டில் திடீர் திடீரென ரகசியக் கூட்டங்கள் நடைபெறும். காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து இந்திரா காந்தியுடன் பேசிவிட்டுச் செல்வார்கள்.

இந்த சூழ்நிலையில் வீட்டின் சமையல் உள்பட நிர்வாகப் பொறுப்பை சோனியாவே பெரும்பாலும் ஏற்றிருக்கிறார். மேனகா இதற்கு நேர்மாறாக இருந்திருக்கிறார்.

ADVERTISEMENT

வயதில் சோனியாவைவிட இளையரான மேனகா காந்தி, வீட்டு வேலைகளை விட அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார். இந்திரா காந்தி என்னதான் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் என்றாலும் மருமகள் மேனகாவின் அரசியல் நடவடிக்கைகள் இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. ஆக, வழக்கமான ஒரு மாமியாராகத்தான் இந்திரா காந்தியும் இருந்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் அரசியல் கிசுகிசுக்களைத் தாங்கி வந்த சூரியா என்ற இதழுக்கு எடிட்டர் வேலையை மேனகா செய்து வந்திருக்கிறார். இதுவும் இந்திராகாந்திக்குப் பிடிக்கவில்லை.

இந்திரா காந்தியின் இரு மருமகள்களில், மேனகா ஆரம்பத்தில் இருந்தே இந்திராவுடன் ஒருவகை எதிர்ப்புணர்வுடனேயே இருந்திருக்கிறார். மாமியாருக்கும் அவருக்கும் எப்போதுமே நல்லிணக்கம் இருந்ததில்லை. அதுபோல சோனியாவுடனும் மேனகா அதிகம் பேசுவதில்லை. மாமியாரை நேருக்கு நேர் சந்திக்க விரும்பினால் கணவர் சஞ்சய் காந்தியின் துணையுடன் எதிர்கொள்வதே மேனகாவின் வழக்கம். 

ஆனால், விமான விபத்தில் சஞ்சய் மரணமடைந்தபிறகு மாமியாரை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய நிலை மேனகாவுக்கு உருவாகி விட்டது.
இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் குஷ்வந்த்சிங் சஞ்சய், மேனகா இருவருக்குமே நன்கு தெரிந்தவர். நல்ல நண்பர்.

‘சஞ்சய் விபத்தில் இறந்து ஐந்தாவது நாளில், இந்திராகாந்திக்கும், மேனகா காந்திக்கும் இடையே மிகப்பெரிய அளவில் புரிதல் இல்லாமல் போனதாக குஷ்வந்த்சிங்க் குறிப்பிட்டிருக்கிறார்.

சஞ்சய் காந்தி தொடர்பாக மேனகா தயாரித்த ஒரு புத்தகத்துக்கு இந்திராகாந்தி முன்னுரை எழுதித் தர முதலில் ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு நேரமில்லை என்று கூறி இந்திராகாந்தி முன்னுரை தர மறுக்க, மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையில் கடும் மனத்தாங்கல் ஏற்பட்டதாக குஷ்வந்த் குறிப்பிடுகிறார். 

சஞ்சய் இறந்தபோது மேனகாவுக்கு 23 வயது. கிட்டத்தட்ட அதே வயதில்தான், 1941 ஆம் ஆண்டு, ஃபெரோஸ்கான் திருமணம் தொடர்பாக தந்தை நேருவுடன் இந்திராகாந்தி பிணங்கினார். ஆனால், மருமகள் மேனகாவின் இதுபோன்ற பிணங்கல்களை மாமியாராக மாறிய இந்திராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

லக்னெளவில் இந்திரா காந்திக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் எதிர்ப்புக் கூட்டம் நடத்திய போது, அதில் மாமியாரின் கண்டனத்தையும் மீறி பங்கேற்றவர் மேனகா.  இதனால் வீட்டை விட்டு துரத்தப்பட்டார் மேனகா.
வீட்டில் இருந்த காலத்தில்கூட, தான் யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் தொலைபேசி இணைப்பை இந்திரா காந்தி துண்டித்து வைத்திருந்ததாகவும், மகன் வருண் காந்தியை  தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருந்ததாகவும் மேனகா பின்னாளில் குற்றம் சாட்டினார்.

இந்திரா காந்தியோ அவர் பங்குக்கு, மேனகாவுக்கும் அவருக்கும் இடையில் கலாச்சார ரீதியான வேறுபாடு இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ‘மேனகா மாறுவதுக்கு தயாராக வேண்டும், இல்லாவிட்டால் அம்மா வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்’ என்பதுதான் இந்திராகாந்தியின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.

மேனகாவின் கதை இப்படியிருக்க, சோனியா காந்தியோ அந்தக் காலத்தில், ‘மாமியார் மெச்சிய மருமகளாக’ இருந்திக்கிறார். வீட்டு வேலைகளை சோனியா கவனித்துக் கொண்டார். பிள்ளைகளை சரியாகப் பார்த்துக் கொண்டார். அரசியலில் சோனியா காந்தி ஆர்வம் காட்டவில்லை. இதனால் முதல் மருமகளை இந்திராகாந்திக்கு மிகவும் பிடித்துப் போனது.

இந்திரா காந்திக்கு இளைய மகன் சஞ்சய் மீது நிறைய பாசம் உண்டு. சஞ்சய்யின் மரணத்துக்குப்பிறகு அவரது பாசம் சோனியா மீது திரும்பியது என்றுதான் சொல்ல வேண்டும். 80களில் மருமகளாக இருந்த சோனியா மெல்ல மெல்ல இந்திராகாந்தியின் மகள் போல மாறினார் என்று சொன்னாலும்கூட அது மிகையில்லை.

Tags : Indira Gandhi mother-in-law day motherinlaw day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT