சிறப்புக் கட்டுரைகள்

ஜல்லிக்கட்டு தொடங்கி கரோனா வரை இணைந்த கைகள்!

தினமணி

குடும்ப உறவுகள் மேம்பட மாமியார்-மருமகள் உறவு வலுவாக அமைய வேண்டும். மாமியார் - மருமகள், அம்மா-மகள் போல நல்ல தோழியாக இருந்தால் ஆனந்தம் விளையாடும் வீடு தான்.

கடல் நீர் வற்றினாலும், காகம் வண்ணம் மாறினாலும் மாமியார்-மருமகள் உறவு ஒன்றோடு, ஒன்று முரண்பட்டது என்பது பேச்சு வழக்கு. அம்மா- மகள் என்ற உறவு என்பது இயற்கையாக உருவானது என்பதால் பாசப் பிணைப்பையும் இயற்கையே கொடுத்து விடுகிறது.

மாமியார்-மருமகள் உறவில் அம்மா-மகள் உறவை செயற்கையாக உருவாக்க முயலும் போது, அது செயற்கையான பாசப் பிணைப்பைதான் உருவாக்கும் என்பது குடும்ப வாழ்வில் அனுபவம் பெற்றவர்களின் கூற்றாக உள்ளது.

இருப்பினும், இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார்-மருமகள் ஒரே வீட்டில் வசிப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு இடத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே உள்ள சின்ன புரிதல்தான், பெரிய சிக்கல் எழாமல் தடுக்கிறது.

மனைவி அமைவது மட்டுமல்ல, மாமியார் அமைவதும் இறைவன் கொடுத்த வரமாகத்தான் பார்க்கப்படுகிறது. இத்தகைய வரத்தைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அத்தகைய வரத்தைப் பெற்று இணைந்த கைகளாக செயல்பட்டு வருபவர்கள்தான் ஜெயலட்சுமியும், பிரகதாவும்.

பிரகதா-ஜெயலட்சுமி

திருச்சியைச் சேர்ந்த இந்த இருவர்தான், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும், கரோனா தொற்றின் பொதுமுடக்கத்திலும் பலருக்கும் வயிறு நிரம்ப அன்னமிட்டு மகிழ்ந்தனர். இத்தோடு நிற்கவில்லை இவர்களது சமூக சேவை. தனது மகன் அறக்கட்டளை தொடங்கவும், ஆண்டுதோறும் சிறார்களுக்கான தீபாவளி கொண்டாட்டம், ஆதரவற்றோர் இல்லத்துக்கான உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி, ரத்ததானம், மருத்துவ முகாம் என பல தொண்டுகளை செயல்படுத்துவதில் காரண கர்த்தாவாக விளங்குகின்றனர்.

கணவர் (மோகன்) உடன் சுற்றிய நாள்களைவிட மாமியார் (ஜெயலட்சுமி) உடன் சுற்றிய நாள்கள்தான் அதிகம் என்கிறார் பிரகதா. பி.காம். பட்டதாரியான இவர், தனது 19 ஆவது வயதில் (2002இல்) திருமணம் முடித்து கணவர் வீட்டுக்கு வந்தார். இதற்கு அடுத்த 19 ஆண்டுகளும் மாமியார் (அம்மாச்சி) அன்புக் கடலில் மூழ்கி மூச்சு மூட்ட நிற்கிறார். அம்மாச்சி என்பது அம்மாவின் அம்மாவை அழைப்பதற்கான பெயர். தனது அம்மாச்சியான காசியம்மாளைப் போன்று, மாமியார் (ஜெயலட்சுமியும்) சிறு வயது முதலே தெரிந்த முகம் என புன்முறுவல் பூக்கிறார் பிரகதா.

மாமியார் ஜெயலட்சுமியுடன் பிரகதா.

மாமியார் தினத்தை முன்னிட்டு அவர் அளித்த சிறப்புப் பேட்டி

எனது வீடும், எனது கணவரின் தந்தை வீடும் அருகருகே இருந்தது. அதோடு மட்டுமின்றி எனது கணவரின் தாயான ஜெயலட்சுமி தபால்துறையில் உதவியாளராக பணிபுரிந்தார். எனது, தந்தையும் தபால்துறையில் பணிபுரிந்தவர்தான். எனவே, சிறு வயது முதலே அம்மாச்சி (மாமியாரான ஜெயலட்சுமி) அறிமுகம் உள்ளது. திருமணத்துக்குப் பின்பும் அம்மாச்சி என்றுதான் அழைக்கிறேன். எனது, மகன் சுஜித் பட்டப்பிடிப்பு பயின்று வருகிறார். மகள் சுஜிதா 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். எனது, குழந்தைகளின் பராமரிப்புக்காகவே பாதியிலேயே விருப்ப ஓய்வு பெற்றார் அம்மாச்சி.

பின்னர், நானும், அம்மாச்சியும் இணைந்து வீட்டின் ஒரு பகுதியில் பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடை வைத்து குடும்ப வருமானத்துக்கு முடிந்த பங்கை அளிக்கத் தொடங்கினோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது திருச்சி நீதிமன்ற சாலையில் இளைஞர்கள் பலர் கூடி தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது, போராட்ட நாள்கள் முழுவதும் நானும், அம்மாச்சியும் உணவு தயார் செய்து கொண்டு சென்று போராட்டத்தில் பங்கேற்றோருக்கு வழங்கினோம். கரோனா பொதுமுடக்கத்திலும் இதேபோல களம் இறங்கி பணியாற்றினோம். எங்களுக்கு ரோல்மாடலாக இருந்தது எனது கணவரும், அவருடைய மகனுமான மோகன்தான். ஏனெனில், அவர்தான் தனது நண்பர்கள் வட்டத்தை இணைத்து சேவை அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அவரைப் பார்த்து நாங்களும் சமூக சேவைக்கு வந்தோம். எனது, கணவருடன் ஊர் சுற்றிய நாள்களைவிட, அம்மாச்சியுடன் சுற்றிய நாள்கள்தான் அதிகம். கோயில், சுற்றுலாத் தலங்கள், கோடை வாசஸ்தலங்கள், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு என சுற்றி வந்துள்ளோம். பெரும்பாலான சுற்று பயணத்தில் பணிநிமித்தம் கணவர் இடம்பெற முடியாது. நானும், அம்மாச்சி மற்றும் குழந்தைகள்தான் குதூகலமாக சுற்றி வருவோம். அம்மாச்சி இன்றி ஓரணுவும் எனது குடும்பத்தில் அசையாது. எனக்கு ஆடைகள் தேர்வு செய்வது தொடங்கி எனது ஒவ்வொரு விருப்பத்தையும் கேட்டு கேட்டு நிறைவேற்றுவார். எனக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரது தேவைகளையும் கேட்டு தட்டாமல் நிறைவேற்றித் தருவதில் முக்கிய பங்கு அம்மாச்சிக்கு உண்டு. பல, குடும்பங்களில் மாமியார்-மருமகள் உறவு சிக்கலாக இருக்கும் சூழலில், ஆண்டுதோறும் மாமியார் தினம் கொண்டாட வேண்டும் என்பது அவசியமானதுதான். அக்டோபர் மாதத்தின் 4ஆவது ஞாயிற்றுக்கிழமை மாமியார்களுக்கு மகத்துவம் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தினத்தை கொண்டாடுவதை தவிர்த்து எல்லா நாளுமே மாமியார்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

கூட்டுக் குடும்பங்கள் அரிதாகி, பெரும்பாலும் தனிக்குடும்பங்கள் என்றாகிவிட்டன. அதிலும், சிங்கிள் பேரண்ட் என்பதை பெருமையாகக் கூறிகொள்ளும் இன்றைய இளம்தலைமுறையால் வாரிசுகளை வளர்த்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்த முடியாது. எதிர்கால தலைமுறைக்கு அன்பையும், பண்பையும், நமது பண்பாட்டையும் கற்றுத் தருவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் மாமியார் (எனது அம்மாச்சிப் போன்று) ஒருவர் அவசியம். கூட்டுக் குடும்பம் என்ற வார்த்தைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மகனைப்பெற்ற தாய் மட்டுமே குடும்பத் தலைவியாக இருந்து வழிகாட்ட முடியும். அந்தக் குடும்பத் தலைவியின் மறுபெயர்தான் மாமியார். மாமியாரைப் போற்றுவோம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்கிறார் பிரகதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT