சிறப்புக் கட்டுரைகள்

கரூரின் தொன்மைப் பலகாரம் வெள்ளியணை அதிரசம்

ஏ. அருள்ராஜ்

உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க மிகவும் தொன்மையான பாரம்பரியம், கலாசாரத்திற்கு சொந்தக்காரர்கள் தமிழர்களாகிய நாம். உணவு, உடையிலும் சங்ககாலம் முதல் தனி முத்திரையை பதித்து வந்துள்ளோம்.

உணவு முறையில்கூட நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், சீரகம், கடுகு, மிளகு, திப்பிலி போன்ற அருமருந்து பொருள்களையே இன்றும் பயன்படுத்தி வருவதால்தான் உலகையே ஆட்டிப்படைக்கும்  கரோனா தொற்றுக்கூட நம் தமிழகத்தை பெருமளவில் பாதிக்கவில்லை எனலாம்.  இதைத்தான் திருமூலர் 'உணவே மருந்து' என்றார்.

இத்தகைய தொன்மைவாய்ந்த உணவின் அங்கமாக விளங்கும் பலகாரங்களில் ஒன்றான அதிரசம் தயாரிப்பில் கடந்த மூன்று தலைமுறைகளாக கரூர் அடுத்த வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்த முத்து(84) என்பவரது குடும்பம் சிறந்து விளங்கி வருகிறது.

இதுதொடர்பாக முத்து நம்மிடம் கூறுகையில், 110 வருடங்களாக தொன்றுத்தொட்டு அதிரசம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். எனது தந்தை கோபாலநாயக்கர் இந்த தொழிலைத் தொடங்கினார். அப்போதெல்லாம் காலணா, அரையணா என காசுக்கொடுத்து வாங்குவார்கள். அதுவும் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் சுமார் 60 வருடங்களுக்கு முன் நாளொன்றுக்கு சுமார் ரூ.150 வரை விற்பனையாகும்.

பச்சரிசி மாவு, வெல்லம், எள் ஆகியவற்றின் கலவையைப் பதமாக தயாரித்து, அவற்றை சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை பயன்படுத்தி சுடும்போது உருவாகும் வாசனை பக்கத்து தெருவையே இழுக்கும். இப்பகுதியில் உள்ள நீரின் தன்மையும் இதன் சுவைக்கு முக்கியக் காரணம். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை நல்ல வியாபாரம் இருந்தது. நாளொன்றுக்கு 5,000 அதிரசங்களை விற்போம். 

ஆனால் உலகமயமாக்கல் கொள்கை வந்து நாடெங்கும்  அந்நிய தேசத்தின் உணவுப் பொருள்கள் இறக்குமதியானதோ அன்றே நம் நாட்டின், குறிப்பாக தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளும் அழியத் தொடங்கிவிட்டன. இப்போது நாளொன்றுக்கு சுமார் 500 அதிரசங்களே விற்பனையாகின்றன.

5 அதிரசத் துண்டுகள் கொண்ட' ஒரு பாக்கெட் ரூ.25-க்கு  விற்கிறோம். அதை வியாபாரிகள் வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்பார்கள். சம்பிரதாயத்திற்கு என்று திருவிழா, வீட்டு விஷேசம் போன்றவற்றிற்கு வாங்குகிறார்கள். முன்பெல்லாம், அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பண்டமாக அதிரசம் இருந்தது. ஆனால் இன்று அதிரசத்தை உண்டால்தான் அதிசயம் என்ற நிலைக்கு மாறிவிட்டது. பல்வேறு வண்ணங்களில் ரசாயன கலவையால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளின் தின்பண்டங்கள் நம் நாட்டிற்குள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

நம் முன்னோர்கள் கண்டறிந்த உணவு ஒவ்வொன்றிலும் அத்தனை அதிசயங்கள் புதைந்து கிடக்கிறது என்பதை நாகரீக மோகத்திற்கு அடிமையானவர்களுக்கு தெரிவதில்லை. பீட்சா, பர்க்கர் போன்ற வெளிநாட்டு துரித உணவுகளை உண்டு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல்பருமன் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உடல் அளவால் மட்டுமின்றி, மனதளவிலும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது நாகரீக சமுதாயம்.

அதிரசத்தில் கலக்கப்படும் பச்சரிசி மாவு உடல் வலிமைக்கு உரியது. இயற்கையில் தயாரிக்கப்படும் வெல்லம், எள் ஆகியனவும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதனால்தான் அதிரசம் என்ற உண்மையான ரசனையை நம் முன்னோர் உணவுப்பொருள்களில் ஒன்றாகப் பயன்படுத்தி வந்தனர். நாகரீக மோகத்தை கைவிட்டு, நம் முன்னோர் தந்த இயற்கை உணவுப் பண்டங்களான அதிரசம் போன்ற பொருட்களை நம் உணவில் பயன்படுத்தத் தொடங்கினால் எந்த நோயும் நம் அண்டாது என்பது நான் அறிந்த உண்மை. இன்று வரை இயற்கையான உணவு முறைகளை கடைப்பிடிப்பதால் இந்த வயதிலும் இந்த தொழிலை எனது மகன்கள் மற்றும் மருமகள்கள் உதவியுடன் தொடர முடிகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT