சிறப்புக் கட்டுரைகள்

திருச்சி பெரிய கடை வீதியின் மூங்கில் கூடை பெரிய பூந்தி!

16th Oct 2021 08:30 AM | ஆர். முருகன்

ADVERTISEMENT

திருச்சியின் அடையாளம் மலைக்கோட்டை மட்டுமல்ல, மூங்கில் கூடை பூந்தியும்தான். பெயரிலேயே பெரிதாக கவனம் ஈர்த்த இந்த கடையின் சிறப்பே பெரிய பூந்திதான். அதுவும் மூங்கில் கூடையில் வைத்து வழங்குவது இரண்டாவது தனிச் சிறப்பு.

105 ஆண்டுகளை பூர்த்தி செய்து மூன்று தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாகவும் நங்கூரமிட்டு ஒரே இடத்தில் நிலைத்து நிற்கிறது யானை மார்க் மிட்டாய் கடை. கடை இருப்பது பெரிய கடை வீதியில். இங்கு தயாரிக்கப்படும் பூந்தியும் பெரிசு. கடையின் பெயரும் பெரிசு (யானை).
கடையின் பெயரிலேயே மகத்துவம் இருப்பதுதான் சிறப்பம்சம்.

இனிப்பு பலகாரங்களை அதிகம் குழந்தைகள்தான் விரும்பி உண்ணுவர். எனவே, குழந்தைகளை கவர வேண்டும். அதேநேரத்தில் தெய்வாம்சமாகவும், கம்பீரமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடேசன் பிள்ளையின் உள்ளத்தில் உதயமானதுதான் 'யானை மார்க்' என்ற பெயர். இந்த பெயருக்கு ஏற்றார்போல கடையில் யானை பொம்மைகளும் அழகு சேர்க்கின்றன.

ADVERTISEMENT

1916இல் இதர இனிப்பு பலகராங்கள் விற்பனை செய்யும் கடையைப் போன்றுதான் தனது கடையையும் தொடங்கினார் நடேசன் பிள்ளை. ஆனால், தனது கடைக்கு ஒரு தனிச் சிறப்பு வேண்டும் என்ற ஆவலில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பெரிய பூந்தி (குண்டு பூந்தி).  வழக்கமாக கராம் மற்றும் இனிப்பு வகைகளில் கிடைக்கும் பூந்தியைப் போன்று சிறிய உருண்டை வடிவில் இல்லாமல் பெரிய வடிவில் (பெருவெட்டு)  பூந்தியை அறிமுகப்படுத்தினார். வீட்டில் செய்த நெய்யில், கடலை பருப்பை அரைத்து மாவாக்கி, அத்துடன் அரிசி மாவு, சர்க்கரை கலந்து தயாரித்தார்.

இந்த பூந்தி தயாரிப்பதற்காகவே இரும்பு அடிக்கும் பட்டறையில் சொல்லி பெரிய கண் (துளை) உடைய கரண்டியை செய்து வாங்கி, மாவை இதில் தேய்த்து நெய்யில் பெரிய, பெரிய வடிவில் பூந்தியாக சுட்டு எடுப்பதுதான் யானை மார்க் ஸ்டைல். 

திருச்சி பெரிய கடை வீதியில் பெரிய, பெரிய கடைகள் பல இருந்தாலும் சுட்டிக் குழந்தையும் சுட்டிக்காட்டும் இந்த யானை மார்க் கடையை. நடேசன் பிள்ளைக்கு பிறகு அவரது வாரிசு பாக்கியராஜ் கடையை நடத்தினார். இப்போது, பாக்கியராஜின் வாரிசுகளான கண்ணன், ரவிச்சந்திரன் என இரு சகோதரர்களும் கடையை நடத்தி வருகின்றனர். மூன்றாவது தலைமுறையான கண்ணனின் வாரிசுகளான (நான்காம் தலைமுறை) சந்திரகிஷோர், கார்த்திக் ஆகிய இருவரும் கணினித்துறையில் பட்டம் பெற்று வல்லுநர்களாக பெங்களூரு, சென்னையில் பணிபுரிகின்றனர். இருப்பினும், கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணி என்றான சூழலில், யானை மார்க் மிட்டாய் கடையையும் பொறுப்பேற்று நடத்தினர். 

நான்கு தலைமுறைகளாக பெயர் சொல்லும் இந்த மூங்கில் கூடை பூந்தியின் பின்னணியை விவரிக்கிறார் கண்ணன்.

1916-இல் எங்கள் தாத்தா நடேசன் பிள்ளையால் தொடங்கப்பட்டது இந்தக் கடை. இப்போது, 105 ஆண்டுகள் கடந்துவிட்டோம். தொடக்கத்தில் கடை இருந்த இடத்திலேயேதான் இப்போது வரைக்கும் கடையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். வழக்கமாக தயாரிக்கும் இனிப்புகளில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற ஆவலில், வீட்டிலேயே தயார் செய்யப்படும் நெய்யினை கொண்டு பூந்தி செய்யலாம் என முடிவு செய்தார். ஆனால், வழக்கமான வடிவிலான பூந்தியாக இல்லாமல், பெருவெட்டாகச் செய்தார். மக்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்ததால், இன்று வரையிலும் நாங்களும் அப்படியே பூந்தியைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

தாத்தா காலத்த்தில் வாழை இலையைக் காய வைத்து, அதில்தான் தின்பண்டங்களை வைத்து நாரில் கட்டிக் கொடுப்போம். இதற்காக மதுரையில் இருந்து காய வைத்த வாழை இலை வந்தது. பின்னர், திருச்சி பகுதியிலேயே மூங்கில் கூடை செய்யும் தொழிலாளர்களிடம் பெரிய பூந்திக்கென பிரத்யேகமான கூடையை தயார் செய்தார் தாத்தா. அந்த வழக்கம் டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். எங்களது சிறப்பே பெரிய பூந்தியும், மூங்கில்கூடையும்தான். எனவே, இரண்டையும் பிரிக்க முடியாது. இதற்காகவே தனியாக மூங்கில் கூடைகளைச் தயார் செய்யச் சொல்லி வாங்கிப் பயன்படுத்துறோம்.

இதுபோன்ற பெரிய வடிவிலான பூந்தி முதன்முதலில் திருச்சியில் நம் கடையில்தான் அறிமுகம். அதுவே நிலைத்துவிட்டது என்கிறார் பெருமையாக.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் தங்களது இல்ல விழாக்கள், விஷேச நிகழ்வுகளுக்கு இந்த பூந்தியை வாங்கிச் செல்கின்றனர்.

திருச்சியிலிருந்து சென்று பணிநிமித்தம் அமெரிக்கா, அமீரகம், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா உள்ள நாடுகளுக்கு உறவினர்கள் மூலம் பார்சலில் பறந்து செல்கிறது இந்த பெரிய பூந்தி. 

படங்கள்: எஸ். அருண்

Tags : world food day food day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT