சிறப்புக் கட்டுரைகள்

முத்துநகர் தூத்துக்குடியின் பெருமை மக்ரூன்

தி. இன்பராஜ்

தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில், சில உணவுப் பொருளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் தயார் செய்யப்படும் மக்ரூன் என்ற உணவுப் பொருளுக்கு தனி பெருமை உண்டே என கூறலாம்.

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்ட தூத்துக்குடி மக்ரூன் போர்ச்சுக்கீசியர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற இனிப்பு வகை பலகார உணவுப் பொருள் ஆகும்.

தென் தமிழகத்தில் இருந்த போர்ச்சுக்கீசியர்கள், பிரபுக்கள், வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான முந்திரி கொட்டைகளை, பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருந்து கொல்லம் வழியாக கப்பலில் கொண்டு வந்தனர். அந்த முந்திரி கொட்டைகளுடன், முட்டை, சீனி சேர்த்து மக்ரூன் செய்து சாப்பிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சின்ன நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் பிள்ளை திருச்சியில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்த போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மக்ரூன் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டார். அதன்படி தூத்துக்குடியில் மக்ரூனை தயார்செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.

ஒரு கிலோ மக்ரூன் தயார் செய்ய அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி கொட்டை, 15 முட்டைகளின் வெள்ளைக்கரு ஆகியவை தேவை. அவற்றை முறையாக கையாண்டு சிறிய காகித பொட்டலம் போல தயார் செய்தால் மட்டுமே மக்ரூன் தனிச்சுவையுடன் இருக்கும்.

செய்முறை: முதலில் முந்திரி பருப்பை தனியாக, அதற்கென உள்ள இயந்திரம் மூலம் நன்றாக மாவாக திரிக்க வேண்டும். முந்திரி பருப்பை அரைக்கும் போது தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட முந்திரி பருப்பு பொடியை இயந்திரத்தில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து உள்ளங்கையில் விட்டு விரல்களுக்கு இடையே வெள்ளை கருவை மட்டும் லாவகமாக பிரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். முட்டைகளில் இருந்து வெள்ளை கருவை மட்டும் தனியாகப் பிரித்து அதற்கான பிரத்யேக கிரைண்டரில் 15 நிமிடங்கள் முட்டை கலக்கப்பட வேண்டும். அதனுள் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையை கொட்ட வேண்டும்.

கிரைண்டரில் கலக்கும்போது குப்பென்று மேலே நுரை தள்ளும். அப்போது அது தூய்மையான வெண்மை நிறத்தில் இருக்கும். அது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

தொடர்ந்து வெள்ளை முட்டைக் கரு, சர்க்கரை சேர்த்து கலக்கப்பட்ட கலவையை ஏற்கனவே அரைத்துப் பொடியாக்கி வைக்கப்பட்டுள்ள முந்திரி பருப்புடன் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். இப்போது மக்ரூனுக்கான மாவு தயாராகிறது. இதனை கூம்பு போன்று வடிவில் தயாரித்து வைப்பதற்காக டால்டா தடவப்பட்ட சதுர தகட்டை பயன்படுத்தி அதன் மீது லேசாக மைதா மாவு தூவ வேண்டும். மக்ரூனுக்கு வடிவம் வார்ப்பது தான் முக்கியம். இந்த மக்ரூன் கை தேர்ந்த மாஸ்டர்களால் வடிவமைக்க முடியும்.

ஒரு காகித்தத்தை மளிகைக் கடையில் பொட்டலம் போடுவது போல கூம்பு வடிவில் தயார் செய்து, அதற்குள் ஏற்கெனவே அரைத்து வைக்கப்பட்டுள்ள மாவை வைத்து பொட்டலத்தின் மேல் பகுதியை மூட வேண்டும்.

தொடர்ந்து பொட்டலத்தில் அடிப்பகுதியில் கத்திரியால் சிறிய துவாரம் போட்டு ஏற்கெனவே டால்டா, மைதா தடவி வைக்கப்பட்டுள்ள தகரத் தட்டில் கோலம் போடுவது போல மாவை பிழிய வேண்டும். அவ்வாறு பிழியும் போது கூம்பு வடிவத்தில் மக்ரூன் ரெடியாகிறது.

பின்னர், பேக்கரிக்கு என்றே உருவாக்கப்படும் அடுப்பில், மக்ரூன் வைக்கப்பட்டுள்ள தட்டுகள் அடுக்கப்படுகின்றன. மக்ரூன் கருகி விடாமல் இருக்கும் வகையில் அடுப்புக்கரியால் உருவாக்கப்பட்ட நெருப்பு தனலே மக்ரூனை வேக வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் மிதமான சூட்டில் வெந்த பிறகு வெளியே எடுக்க வேண்டும்.
மிதமான சூட்டில் வைத்து எடுத்தால்தான் சுவையான மக்ரூன் கிடைக்கும்.

பின்னர் அந்த மக்ரூன் காற்று புகாத பெரிய டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகிறது. தயாரிக்கப்பட்ட மக்ரூன் 100 கிராம் முதல் ஒரு கிலோ என பல்வேறு எடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மக்ரூன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் கூறுகையில், மக்ரூனை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் 15 நாள்கள் முதல் 20 நாள்கள் வரை கெடாமல் இருக்கும். மக்ரூனை காற்றுப்படும்படி வெளியே வைத்தால் சிறிது நேரத்தில் சவ் மிட்டாய் போல் ஆகிவிடும் என்றனர்.

தயார் செய்யப்பட்ட மக்ரூன் 100 கிராம், 200 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ என பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ மக்ரூன் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளுக்கு ஏற்றால் போல விலை வித்தியாசம் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT