சிறப்புக் கட்டுரைகள்

மாலைநேர சிற்றுண்டியாக மாறிவரும் பர்மா கௌசா

16th Oct 2021 06:00 AM | வி.என்.ராகவன்

ADVERTISEMENT

பர்மாவின் பாரம்பரிய உணவு வகையான கௌசா, பர்மாவிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மக்களுக்காகத் தயாரிக்கப்பட்டுப்  பிரபலமாகி இப்போது எல்லாருக்குமாகிவிட்டது. 

பர்மாவிலிருந்து 1960-களில் அகதிகளாக வந்த தமிழர்கள் பல்வேறு மாவட்டங்களில் குடியேறினர். இதுபோல, தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள பர்மா காலனியில் (தற்போது அண்ணா நகர்) குடியேறிய மக்களில் சிலர் சிறிய அளவில் உணவகத்தையும் தொடங்கினர். கூலி வேலை செய்து வந்த அகதிகளுக்கு இந்த உணவகம் உதவியாக இருந்தது. இங்கு பிரதானமாக பர்மா கௌசா தயாரித்து வழங்கப்பட்டது.

கடந்த 1960-களில் ஓரிரு கடைகளே இருந்த நிலையில், காலப்போக்கில் நகரம் முழுவதும் பரவியது. தற்போது புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறு கடைகளாகவும், சாலையோரம் தள்ளுவண்டியிலும் ஏறத்தாழ 50 கடைகள் உள்ளன என்கிறார் அண்ணா நகரில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கௌசா கடை நடத்தி வரும் ஆர். மோகன்.

சாப்பிடத் தயாராகும் கௌசா

இதை எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

அரை கிலோ மைதா மாவு, கால் தேக்கரண்டி சோடா உப்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்குத் தேய்ப்பதுபோல தேய்க்க வேண்டும். உலர் மைதா மாவில் லேசாகப் புரட்டி எடுத்து, நூடுல்ஸ் அச்சில் இட வேண்டும். இதை வெந்நீரில் இடியாப்பத்தைக் கொதிக்க வைப்பதுபோல வேக வைக்க வேண்டும். பின்னர், தண்ணீரை வடிகட்டிவிட்டு, இரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு 2 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், 3 வரமிளகாயைப் போட்டுத் தாளிக்க வேண்டும். பின்னர், 100 கிராம் நறுக்கிய வெங்காயம், 50 கிராம் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, இந்தக் கலவையை அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். இதனுடன் நூடுல்ஸ், ஒரு கைப்பிடி பொட்டுக்கடலைப் பொடி, நூறு கிராம் துருவல் செய்யப்பட்ட முட்டைக்கோஸ், ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டுப் பிசைந்தால் கௌசா தயாராகிவிடும்.

இட்லிக்குச் சட்னி, சம்பார் போல 'கௌசா'வுக்கு வாழைத்தண்டு சூப் பொருத்தமானது. கௌசாவில் வாழைத்தண்டு சூப்பை ஊற்றி அதற்குள் ஒரு மசால் வடையையோ அல்லது வேக வைத்த முட்டையையோ கலந்து சாப்பிடலாம்.

ஆர்வமுடன் சாப்பிடும் வாடிக்கையாளர்கள்

வாழைத்தண்டு சூப்:

வாழைத்தண்டு சூப் செய்ய 100 கிராம் வாழைத்தண்டு, தேவையான அளவு புளி, உப்பு, தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, பொட்டுக்கடலை பொடி ஆகியவை தேவைப்படும்.

முதலில் புளிக் கரைசலில் உப்பு, பொட்டுக்கடலைப் பவுடர், எலுமிச்சைச் சாறு கலந்துகொள்ள வேண்டும். வாழைத்தண்டை வேக வைத்து சுத்தமான பருத்தித் துணியில் வைத்து வடிகட்ட வேண்டும். இதைப் புளிக் கரைசலில் சேர்த்தால் வாழைத்தண்டு சூப் தயாராகிவிடும்.

மாலை நேரத்தில் நூடுல்ஸ், பானி பூரி கடைகளைப் போன்று கௌசா கடைகளும் பரவலாகக் காணப்படுகிறது. எனவே, பாஸ்ட் புட் போன்று மாலை நேர சிற்றுண்டியில் பர்மா கௌசாவும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதை அனைத்து தரப்பு மக்களும் தேடி வந்து சாப்பிடுகின்றனர். 

படங்கள் - எஸ். தேனாரமுதன்

Tags : Food Day Special food day world food day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT