சிறப்புக் கட்டுரைகள்

வாயூற வைக்கும் பரமத்தி வேலூர் வாத்து இறைச்சி

என்.செந்தில்குமரன்

வாத்து இறைச்சி உணவு, விற்பனைக்கு பெயர் பெற்றது பரமத்திவேலூர். பொதுமக்கள் மட்டுமல்லாது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் விருப்ப உணவு இது. 

பரமத்தி வேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறையில் வாத்து இறைச்சி பிரபலம். பொதுமக்களின் வரவேற்பைப் பெற்ற வாத்து வறுவல் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளையும் கவர்ந்துள்ளது. இதனால் வாத்துக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்பகுதிகளில் வீடுகளில் மட்டும் சமைத்து வந்த வாத்து வறுவல் காலப்போக்கில் இறைச்சி பிரியர்களையும் கவர்ந்துள்ளது. முன்னதாக, பரமத்தி வேலூரில் உள்ள அசைவ உணவகங்களில் ஆடு, கோழி மற்றும் மீன் மட்டும் சமைத்து வந்தனர். ஆனால் தற்போது வாத்து மிக முக்கியமான உணவாக மாறியுள்ளது. வாத்து இறைச்சி மிகவும் சுவையாக சமைத்துக் கொடுப்பதால். கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பரமத்திவேலூர், பாலத்துறை பகுதிக்கு வந்திருந்து சாப்பிட்டும், வாங்கியும் செல்கின்றனர்.

வாத்து இறைச்சி மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் நிறைந்த வாத்து முட்டையினை சாப்பிடுவதால் மூச்சிறைப்பு ,சளி உள்ளிட்ட நோய்கள் குணமாகும் எனவும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாத்து குஞ்சுகளை பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வரை ஓட்டிச் சென்று பட்டிகள் அமைத்து வாத்துகளை வளர்த்து முட்டைகளையும், வாத்துகளையும் விற்பனையும் செய்து வந்தோம். ஆனால் தற்போது வாத்துகளின் தேவை அதிகரித்துள்ளதால் ஆந்திரம், விழுப்புரம், கேரள மாநிலம் கொல்லம், வேலூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாத்துகளை கொண்டு வரும் மொத்த விற்பனையாளர்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாக வாத்து உணவகம் மற்றும் வாத்து விற்பனை செய்து வரும் நாச்சிமுத்து தெரிவித்தார்.

ரூ.10 க்கு விற்பனை செய்து வந்த வாத்து முட்டை தற்பொழுது ரூ.13 வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்போது புரட்டாசி மாதம் என்பதால் ரூ.1 குறைந்து ரூ.12-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

பாரம்பரியமாக வாத்துகளை வளர்த்து வருவோரில் சிலர் தினந்தோறும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பருவம் வந்த பிறகு இனப்பெருக்கம் செய்தும் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வருடங்களாக ரூ. 200 முதல் அதிகபட்சமாக ரூ.250 ரூபாய் வரை மட்டுமே விற்பனையான சேவல் மற்றும் பெட்டை வாத்துகள் தற்பொழுது ரூ.250 முதல் 280 வரை விற்பனையாகி வருகிறது.

வாத்துகளின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாத்தின் வரத்து குறைந்துள்ளதாலும் வாத்துகள் விற்பனையாகிறது எனவும், சமைத்து தரும் ஒரு வாத்து ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், அரை வாத்து ரூ.180 முதல் ரூ.200 வரையிலும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருவதாகவும், வாத்து உணவுகளை சாப்பிடுவதற்காகவே பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வதாக வாத்துக்கடை உணவக உரிமையாளர் நாச்சிமுத்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT