சிறப்புக் கட்டுரைகள்

நீலகிரியில் வீட்டுத் தயாரிப்பு சாக்லேட்கள்!

16th Oct 2021 09:10 AM | ஜான்சன் சி. குமார்

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில்  உணவுப் பொருள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிப்பது வீட்டுத் தயாரிப்பு சாக்லேட்கள், சரளமாகப் புழக்கத்திலுள்ளதைப் போல ஹாேம் மேட் சாக்லேட்கள். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள், தங்கள் சுய தேவைகளுக்காக அவரவர் வீடுகளிலேயே சாக்லேட்டை தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டிய வழிதான், இன்றைக்கு நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள நீலகிரி ஹோம் மேட் சாக்லேட்.

தமிழகத்தில் நீலகிரி  கொடைக்கானல் உள்ளிட்ட குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் மட்டுமே ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், மலைப்பகுதிகளில் நிலவும் இயற்கையான சீதோஷ்ண நிலை. 

கொக்கோ, வெண்ணெய் கலந்த சாக்லேட் பார்களை சுமார் 40 டிகிரி வெப்பநிலையில் உருக்கி கூழாக வரும்போது, அதில் நமது விருப்பத்தின்படி தேவையானவற்றை சேர்த்தோ, தனியாகவோ, இயற்கையாக குளிர வைத்தாலே ஹோம் மேட் சாக்லேட் தயார். நீலகிரி கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அல்லாமல், மற்ற பகுதிகளில் இத்தகைய சாக்லேட்களை தயாரித்தால், அவற்றை உறைய வைக்க பிரம்மாண்ட குளிர்ப்பதன அரங்குகள் தேவைப்படும். ஆனால், இயற்கையில் உறைவதில் கிடைக்கும் சுவை, அதில் இருக்காது. 

ADVERTISEMENT

ஆங்கிலேயர்கள் கற்றுத்தந்த சாக்லேட் தொழில்நுட்பம், இன்றளவும் நீலகிரியின்  சாக்லேட் பெருமைகளை உலகளவில் பேசுகிறது. நீலகிரியில் இருந்து மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களுக்கும் சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'ஹோம் மேட்' சாக்லேட்களில் நட் ராக்ஸ், புரூட் அண்டு நட், ஒயிட் சாக்லேட்கள் மிகவும் பிரபலமானவை. அதேபோல, மோல்டட் ரகத்தினாலான சாக்லேட்களைத்தான் ஆங்கிலேயர்கள் அதிக அளவில் விரும்புவதால், அவர்களின் ரசனைக்கேற்ப டிரபஃபூள், ரம் அண்ட் ரெய்சன்ஸ் ஆகியவையும் முன்னணியில் உள்ளன.

மேலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் சுகர் ஃப்ரீ சாக்லேட்கள், எக்லெஸ் சாக்லேட்கள், ஜெயின் சாக்லேட்கள் என பல்வேறு ரகங்களிலும் விற்பனைக்கு உள்ளன. ஒரு கிலோ ரூ. 300 முதல் ரூ. 3,500 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

‘ஹோம் மேட் சாக்லேட்' என்பது, தற்போது நீலகிரியில்  குடிசைத் தொழிலாகவே பரவி வருகிறது. தொடக்கத்தில் சிலர் மட்டும் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 1000-க்கும் மேற்பட்டோர் ஹோம் மேட் சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச பிராண்டுகளில் சாக்லேட்கள் வெளியானாலும், அவற்றின் உற்பத்தி செலவு, சந்தைப்படுத்துதல், விளம்பரச் செலவு ஆகியவற்றால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால், ஹோம் மேட் சாக்லேட்களுக்கு அத்தகைய செலவுகள் ஏதுமில்லை. அவரவர் கண்முன்பாகவே தயாரிக்கப்படும் சாக்லேட்களை சுவையும், மணமும் மாறாமல் சுவைப்பதையே சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

இங்கு ஆண்டுக்கு ரூபாய் 12 கோடி வரை சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நீலகிரி ஹோம்மேட் சாக்லேட் என்ற பேரில், போலிகள்  உருவாகாமல்   இருக்க ஹோம்மேட் சாக்லேட்க்கு புவிசார் குறியீடு வழங்கினால், போலி  உற்பத்தியாளர்கள் தடுக்கப்படுவார்கள் என்கின்றனர் சாக்லெட் தயாரிப்பாளர்கள். 

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில்  தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லெட்டிற்கு புலிசார் குறியீடு வழங்க வேண்டும் என சாக்லெட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது. 

Tags : world food day Food Day Special food day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT