சிறப்புக் கட்டுரைகள்

மதுரை மண்ணிலே மணக்கிறது கறிதோசை

சிவ. மணிகண்டன்

வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வருவோர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கமாட்டார்கள். அதேபோல, அவர்களது அடுத்த தேடலாக இருப்பது மதுரைக்கே உரித்தான சிறப்பு உணவு வகைகளைத்தான்.

ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமாக ஒரு உணவு வகையைக் கூறமுடியும். ஆனால், மதுரைக்கென விதவிதமான பல அசைவ உணவு வகைகளை சொல்லலாம். புதிய புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்வதில் மதுரையில் உணவகம் நடத்துவோரை யாராலும் மிஞ்ச முடியாது.

மதுரை நகரின் பல இடங்களில் தற்போது செயல்படும் முன்னணி உணவகங்களில் பல, இதற்கு முன்பு மாலை நேர சிறிய அசைவ உணவகங்களாக ஆரம்பிக்கப்பட்டவை. சிறிய உணவகங்களாக இருந்தாலும், அவற்றின் பிரத்யேக ருசியும், வியாபார உத்திகளும் தற்போது பெரிய உணவகங்களாக உயர்த்தியிருக்கின்றன. வேறெங்கும் கிடைக்காத  தனிச் சுவையுடன் கூடிய புதுவித உணவுகள்தான் இதற்கு காரணம்.  கறிதோசை, நண்டு ஆம்லெட், அயிரை மீ்ன் குழம்பு இவையெல்லாம் மதுரையின் தனித்துவம் மிக்க அசைவ உணவுகளாகும்.
 
தமிழகத்தி்ல் பல இடங்களில் உள்ள உணவகங்களிலும் இவை தற்போது அறிமுகமாகி வந்தாலும், மதுரையின் ருசிக்கு ஈடுகொடுக்க முடியாது என்கின்றனர் அசைவ உணவுப் பிரியர்கள். மதுரையின் காரசாரமான கைப்பக்குவமானது, உணவுகளின் ருசியையும், மணத்தையும் கூட்டுகிறது.

மதுரையின் அசைவ உணவுகளில் பெயர் பெற்றதாக இருப்பது கறிதோசை. சிம்மக்கல் பகுதியில் உள்ள கோனார் கடை என்ற உணவகத்தில்தான் முதன்முதலில் கறிதோசை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கறிதோசைக்காக, பல ஊர்களில் இருந்து மதுரைக்கு வருபவர்கள் அதிகம். அதேபோல, மதுரைக்கு வருவோர் கறிதோசையை சுவைப்பதைத் தவறவிடுவதில்லை. தற்போது மதுரையின் முன்னணி உணவகங்கள் அனைத்திலும் கறிதோசை கிடைக்கிறது. இந்த உணவகங்கள் தங்களுக்குரிய பிரத்யேக செய்முறையில், வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

கறிதோசை செய்முறை குறித்து மதுரை தல்லாகுளம் குமார் மெஸ் உரிமையாளர் த.ராமச்சந்திர குமார் கூறியது:

மதுரையில் அசைவ உணவு என்றவுடன் நினைவுக்கு வருவது கறிதோசை தான். சிம்மக்கல் கோனார் கடை அறிமுகம் செய்த கறிதோசை, தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

கறி தோசைக்கு முதலில் தோசை மாவுடன், முட்டை கலந்து அடித்து ஊத்தப்பம் அளவுக்கு தோசை ஊற்றப்படும். தோசை வேகும்போதே, அதன் மேல் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் சுக்காவை வைத்து நன்றாக எண்ணெய் ஊற்றி வேக வைக்கப்படும். எண்ணெய்யில் மொறு மொறுவென வேகும்போது மிளகு-சீரகப் பொடி தூவி எடுத்தால் மட்டன் கறிதோசை தயார். இதேபோல, கோழிக்கறி பிரியர்களுக்கு சிக்கன் வறுவலைப் பயன்படுத்தி செய்யப்படும் சிக்கன் கறி தோசையும் பிரபலம்.

எத்தனை ஊருக்குச் சென்றாலும் உணவுப் பிரியர்களுக்கு மதுரையின் கறிதோசையை மறக்கமாட்டார்கள். கறிதோசைக்குப் பயன்படுத்தக் கூடிய தோசை மாவு, மட்டன் அல்லது சிக்கன் கறி, மசாலாப் பொருள்கள், எண்ணெய் என ஒவ்வொரு பொருளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தயார் செய்கிறோம். இதன் காரணமாகவே, மதுரையின் கறிதோசைக்கு தனிச்சுவை கிடைக்கிறது. பொதுவாக  அசைவ உணவுகளுக்காக பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் மசாலாப் பொருள்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. எங்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்  மசாலாப் பொருள்களையே அனைத்து உணவுகளுக்கும் பயன்படுத்துகிறோம். இதுவே தனிச்சுவைக்கு காரணமாக இருக்கிறது என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT