சிறப்புக் கட்டுரைகள்

கோவையைக் கலக்கும் பாகுபலி சிக்கன் தோசை

த. சித்தார்த்

சாலையோர தோசைக் கடை என்றால் உடனடியாக நமது மனதில் தோன்றுவது ஒரு தள்ளுவண்டிக் கடையும் இட்லி, தோசை மற்றும் அதிகபட்சமாக பரோட்டா தான். ஆனால், இந்த இலக்கணத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது கோவையில் உள்ள கபாலி தோசை கடை. பேர் மட்டும் வித்தியாசமாக இல்லாமல் மெனு கார்டும் படு கலக்கலாக உள்ளது. 

கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் உள்ள ஒரு சிறிய சந்தில் அமைந்துள்ளது கபாலி தோசை கடை. மாலை 6 மணிக்குத் தொடங்கும் கடையில் இரவு 10 மணி வரை கூட்டம் அள்ளுகிறது. கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இளைஞர்களும், காரில் குடும்பத்துடனும் வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். தள்ளுவண்டி கடைக்குத் தான் வந்துள்ளோமா என்ற தலைசுற்ற வைக்கும் அளவுக்கு சுமார் 20 வகை தோசைகள் இங்கு விற்கப்படுகின்றன.

கபாலி சிக்கன் தோசை, பாகுபலி குடல் பரோட்டா, பாகுபலி குடல் தோசை, பிக்பாஸ் மட்டன் தோசை, ஓவியா வெஜ் தோசை, ஜல்லிக்கட்டு தோசை, குக் வித் கோமாளி தோசை என பெயர்கள் அனைத்தும் வித்தியாசமாக கேட்போரையும், சாப்பிடுவோரையும் கவரும் வகையில் ட்ரெண்டியாக வைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் சிக்கன் தோசை, மட்டன் தோசை, பூண்டு சிக்கன் தோசை, பட்டர் குடல் தோசை, நெய் மட்டன் தோசை, சிக்கன் கலக்கி தோசை, மட்டன் சப்பாத்தி, குடல் சப்பாத்தி, மட்டன் கலக்கி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விலையும் அதிகபட்சமாக ரூ.50 மட்டுமே. கபாலி தோசை, பாகுபலி தோசை போன்ற ஸ்பெஷல் தோசைகள் அனைத்தும் ரூ.50-க்குள் அடங்குகிறது.

வெஜ் வகைகளில் மல்லி தோசை, ஆனியன் தோசை, பட்டர் பூண்டு தோசை, வெஜ் ஓவியா தோசை என அனைத்தும் ரூ.30-க்கு வழங்கப்படுகிறது. சட்னி, சாம்பார் என வழக்கமானது மட்டுமல்லாமல் சிக்கன், மட்டன், குடல், இறால், மீன், கருவாட்டு குழம்பு என குழம்பு வகைகளும் படுஜோராக உள்ளது. பட்ஜெட் ஃப்ரெண்ட்லி கடை என்பதால் குடும்பத்தினருடன் சென்றாலும் பர்சுக்கு சேதாரம் இல்லாமல் வீடு திரும்புவதற்கு கியாரண்டி.

கபாலி தோசை கடையின் உரிமையாளர் சிப்பிக்குள் முத்து (52) பேசியதாவது: 

எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. காதலித்து திருமணம் செய்துகொண்ட நான் 1993ஆம் ஆண்டு கோவையில் செட்டிலாகிவிட்டேன். மும்பை உள்ளிட்ட இடங்களில் உணவகங்களில் வேலை செய்த அனுபவம் இருந்ததால் லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே இட்லி கடை தொடங்கி பிழைப்பைத் தொடங்கினேன். தொடக்க காலத்தில் 30 பைசாவுக்கு இட்லியும், தோசையும் மட்டுமே விற்று வந்தேன். 

பின்னர் எந்த தள்ளுவண்டிக் கடையிலும் இல்லாத மாதிரி பரோட்டாவை அறிமுகப்படுத்தினேன். அப்போது 70 பைசாவுக்கு பரோட்டாவை விற்கத் தொடங்கினேன். பரோட்டா அப்போது தான் பிரபலமடையத் துவங்கிய உணவாகவும், ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கும் உணவாக இருந்ததாலும் எனது கடைக்கு கூட்டம் கூடத் தொடங்கியது. இதையடுத்து நெய் தோசை, பூண்டு தோசை, மல்லி தோசை என வெரைட்டிகளை அறிமுகப்படுத்தினேன் அது மெல்ல மெல்ல மக்களிடம் வரவேற்பை பெற்று ஹிட்டானது என்றார்.

சிப்பிக்குள் முத்து என்ற தனது வித்தியாசமான பெயர் போலவே தனது கடையில் விற்கப்படும் தோசைகளுக்கும் பெயர்களை வித்தியாசமாக வைப்பதில் கில்லாடி. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு தோசை, பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவின் ரசிகர்களைக் கவரும் வகையில் ஓவியா தோசை, பாகுபலி குடல் தோசை என ட்ரெண்டுக்கு ஏற்றவாறு பெயர் வைத்து கஸ்டமர்களைக் கவர்ந்திழுத்துள்ளார்.

நியாயமான விலைக்கு தரமாகவும், சுவையாகவும் தோசை வகைகளை வழங்குவதால் தினசரி புதிய வாடிக்கையாளர்களும் கடைக்கு வருகின்றனர் என்கிறார் சிப்பிக்குள் முத்து. 1990களில் நெய் தோசை, மசால் தோசை எல்லாம் உயர்தர சைவ உணவகங்களில் மட்டுமே கிடைத்து வந்தன. அடித்தட்டு மக்களுக்கு போக்கிடமாக இருந்த தள்ளுவண்டிக் கடைகளிலும் இந்த வெரைட்டிகள் கிடைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. 

இதன் காரணமாகவே புதிய புதிய தோசை வகைகளை உருவாக்கினேன். காலத்துக்கு ஏற்றவாறு தோசை வகைகளுக்கு பெயர் வைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய உணவுகளை முயற்சி செய்யும் ஆர்வம் ஏற்படுகிறது. இது ஒரு வகையில் என்னையும் தொய்வில்லாமல் சிந்திக்க வைத்து, தொழில் போட்டிகளை சமாளிக்க உத்வேகமாக உள்ளது. குறைந்த விலையில் நிறைவான சுவை, தரமான உணவை வழங்க வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம் என்கிறார் முத்து. 

கோவைவாசிகள் மட்டுமல்லாமல் கோவைக்கு வந்து செல்லும் அனைவருக்கும் கபாலி தோசைக் கடை ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

படங்கள்: வே.பேச்சிகுமார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT