சிறப்புக் கட்டுரைகள்

கரூரைக் கலக்கும் சுவையான கரம்

16th Oct 2021 07:30 AM | அ. அருள்ராஜ்

ADVERTISEMENT


தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்கள் அந்நகரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. மதுரைக்கு மல்லிகையும், திருநெல்வேலிக்கு அல்வாவும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பால்கோவாவும் போல கரூருக்கு கரம் என்ற உணவுப்பொருள் பெயர் பெற்று விளங்கி வருகிறது. தட்டுவடை, சட்னி வகைகள், பீட்ரூட்,  கேரட்,  உள்ளிட்ட மூலப்பொருள்களுடன் தயாரிக்கப்படும் இந்த துரித உணவு பல ஆண்டுகளாக கரூரில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

இதுதொடர்பாக கரம் தயாரித்து விற்பனை செய்யும் கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்த எம்.சரண்யா கூறுகையில், நாங்கள் இரு தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். முட்டைக்கரம், முறுக்கு நொறுக்கல், முட்டை எள்ளடை நொறுக்கல், முறுக்கு மல்லி, பூண்டு, புதினா நொறுக்கல், கார கடலை மசால் நொறுக்கல், செட் வகைகளான அப்பளம் செட், இனிப்பு தட்டு செட், முட்டை செட், சம்சா போண்டா செட், காளான்,  நாட்டுக்கோழி முட்டை செட், மாங்கா இஞ்சி செட், தக்காளி செட், கர வகைகளான அப்பளம், பூந்தி, கார்ன், போண்டா, சம்சா, பூண்டு, புதினா,  முட்டை கரங்கள் அதிகம் விற்பனை செய்கிறோம். 

முட்டை கரம் என்பது 2 தட்டுவடை, கொஞ்சம் வறுத்த நிலக்கடலை, சிறிது வெங்காயம், பீட்ரூட், கேரட் துகள்கள் மற்றும் ஒரு டம்ளர் பொரி, ஒரு முட்டை ஆகியவற்றை நன்கு சில்வர் சட்டிக்குள் போட்டு நன்கு கலந்து கொடுப்போம். இதை ரூ.20-க்கும், சாதா கரம் வகைகள் ரூ.10-க்கும், 6 எல்லடை செட் ரூ.20-க்கும், நாட்டுக்கோழி முட்டை கரம் ரூ.30-க்கும், மாங்காய் இஞ்சி செட் ரூ.15-க்கும் விற்பனை செய்கிறோம்.

மற்ற மாவட்டங்களில் கிடைக்கும் உணவுப்பொருட்களை அப்பகுதியினர் விரும்பி உண்ணுவதைப் போன்று கரூர் கரத்தையும் கரூர் நகர மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். தள்ளுவண்டித் தொழிலாளாகவும், சிலர் சிறிய கடைகளை வைத்தும் கரம் தொழிலை நடத்துகின்றோம். பெரும்பாலும் பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டாலும், அவர்களது வாழ்க்கைத்தரம் உயர, அதாவது தொழிலை மேம்படுத்த போதிய நிதியில்லாமல் தடுமாறுகின்றனர்.

ADVERTISEMENT

அரசு தாட்கோ மூலமாகவோ அல்லது சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பல்வேறு சமூகத்தினருக்கு தொழில் துவங்கிட அந்தந்த துறை மூலம் உதவி செய்ய முன்வந்தாலும், பெரும்பாலான வங்கியாளர்கள் கடன்கொடுக்க முன்வருவதில்லை. இதனால் பெயரளவுக்கு வியாபாரிகள் கரம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து எங்களுக்கும் உதவி செய்ய முன்வந்தால், இந்த தொழிலை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.

Tags : world food day food day Food Day Special
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT