சிறப்புக் கட்டுரைகள்

ரூ.750-க்கு 25 வகையான அசைவ உணவு வகைகள்

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள யூபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு என்ற ஹோட்டலில் வெறும் ரூ.750-க்கு 25 வகையான உணவுகளை சமைத்து ஈரோடு தம்பதி அசத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சீனாபுரம் அருகே ஆர்.கே.புரம் என்ற இடத்தில் கணவர்-மனைவி நடத்தும் ஹோட்டலில் இந்த உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. 

பெருந்துறையிலிருந்து 7.2 கி.மீ. தூரத்திலும், கோவை, சேலத்திலிருந்து 79 கி.மீ. தூரத்திலும். குன்னத்தூரில் இருந்து 12.3 கி.மீ. தூரத்திலும் இந்த ஹோட்டல் உள்ளது. அதற்கு பெயர் நம்ம வீட்டு சாப்பாடு.

பெயருக்கு ஏற்ப பார்ப்பதற்கும் நம்ம வீட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. ஹோட்டலை நிர்வகிக்கும் கருணைவேல்(63)-ஸ்வர்ணலட்சுமி (56) தம்பதியினர் ஹோட்டலுக்கு வரும் பெண்களை நெற்றியில் குங்குமமிட்டு மிகவும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.

8 அடியிலான இலை:

வந்தவர்களை உபசரித்துவிட்டு அவர்களை அன்போடு அமர வைத்து, அவர்களுக்கு 8 அடியிலான இலை பரிமாறப்படுகிறது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 அல்லது 6 பேர் அமர்ந்து உண்ணலாம். சிறிய இலை கேட்டாலும் அதையும் கொடுக்கின்றனர். அதில் முதலில் உப்பு வைக்கப்படுகிறது. பின்னர் சாதம், குழம்பு, அசைவ வகைகள் என வரிசையாக பரிமாறப்படுகின்றன.

கருணைவேல் - ஸ்வர்ணலட்சுமி தம்பதியர்

என்னென்ன வகைகள்: 

மட்டன், சிக்கன், மீன், வான்கோழி, புறா என 25 உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அனைத்து உணவுகளையும் தம்பதியே தயாரித்து பரிமாறுகின்றனர். இவற்றுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.750 வசூலிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்சம் கேட்டால் அது ரூ.1,000 வரை செல்கிறது. அங்கு ஒரு உண்டியல் வைத்து விடுகின்றனர். சில சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தொகையை அதில் செலுத்துமாறு தம்பதி அறிவுறுத்துகின்றனர். சாப்பாட்டால் ஏற்பட்ட திருப்தி காரணமாக நியாயமான தொகையை உண்டியலில் செலுத்துகின்றனர்.

முன்பதிவின் படி சாப்பாடு:

வாரத்தில் 7 நாள்களும் இவர்களின் கடை திறந்திருக்கும். உணவுக்கு வரும் குடும்பத்தினர் முன்கூட்டியே பதிவு செய்து விட்டு எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரத்தையும் சொல்லி விட வேண்டும். அந்த முன்பதிவை தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் செய்ய வேண்டும். உணவு அருந்த பகல் 12.30 மணி முதல் 3.30 மணி வரை இவர்களின் வீட்டுக்கு வர வேண்டும்.
9362947900 அல்லது 04294 245161 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யலாம். அங்கு கூட்டத்தின் தன்மைக்கேற்ப வரிசையில் நின்றிருந்து ஒரு குடும்பத்தினர் வெளியே வந்தவுடன் மற்றொருவர் சென்று உணவு அருந்துகின்றனர். திருமண விருந்து போல் ஒவ்வொரு குழுவாக சாப்பிடுகின்றனர். இறுதியில் வெற்றிலை பாக்கும் வழங்கப்படுகிறது.

இது குறித்து அத்தம்பதி கூறுகையில், வாரந்தோறும் 150 பேர் வரை எங்கள் வீட்டுக்கு உணவு அருந்த வருகின்றனர். அவர்கள் சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட 150 கி.மீ. முதல் 200 கி.மீ. வரை தூரத்தில் இருந்து வருகை தருகின்றனர். வார நாட்களில் 50 பேர் வரை வருகின்றனர். உணவு அருந்திவிட்டு அவர்கள் புன்முறுவலுடன் வெளியே செல்வதைப் பார்க்கும் இன்னும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை எங்களுக்கு தோன்றுகிறது. மட்டன் குழம்பு, ரத்த பொரியல், குடல் கறி, தலை கறி, கல்லீரல் கறி, பிராய்லர் சிக்கன், நாட்டுக் கோழி சிக்கன், மீன் குழம்பு, சாதம், ரசம், தயிர் உள்ளிட்டவையும் பரிமாறுகிறோம். குழந்தைகளுக்கு காரம் குறைவாக உள்ள உணவு வகைகளை வழங்குகிறோம்.

நாங்கள் இருவரும் சைவம்:

ஊருக்கே இத்தனை வகையான அசைவ வகைகளை அளிக்கும் நாங்கள் இருவரும் சைவ உணவுதான் உண்போம். அசைவத்தை உண்ணமாட்டோம். முட்டைக் கூட சாப்பிட மாட்டோம். எங்கள் வீட்டுக்கு வருவோர் யாரையும் எங்கள் தாத்தா, பாட்டி வெறும் வயிறோடு அனுப்பமாட்டார்கள். அதேபோல் நாங்களும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் எதையாவது உண்ண வைத்துதான் அனுப்புவோம். எங்கள் ஹோட்டலில் அசைவம் மட்டும்தான் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது தெரியாமல் யாராவது சைவ உணவு உட்கொள்வோர் வந்து விட்டு பசியோடு செல்லக் கூடாது என்பதற்காகவே 5 பேர் உண்ணும் அளவுக்கு சைவ சாப்பிடும் தினந்தோறும் சமைப்போம்.

எங்கள் முக்கிய நோக்கமே ஒரே இலையில் அமரவைத்து குடும்ப உணர்வை கொண்டு வருவதுதான். அனைவரும் எங்கள் சொந்த பந்தம் போல் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். இதுதான் எங்களுக்கு தேவை. காசு, பணம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அன்பு, தொழில், உழைப்பு, பண்பு இவைதான் முதலில் தேவை. கடந்த 1992-93இல் எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில் கேண்டீன் ஆரம்பித்தோம். 6 ஆண்டுகள் நடத்தினோம். அதன்பின்னர் இதை நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று வீட்டில் சேவையாக நடத்தி வருகிறோம் என்றனர் அந்த தம்பதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT