சிறப்புக் கட்டுரைகள்

சிதம்பரத்தின் பெருமிதம் சம்பா சாதமும் கத்தரி கொத்ஸும்

ஜி. சுந்தர் ராஜன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினமும் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 100-150 கிலோ அரிசி போட்டு சம்பா சாதம் தினமும் செய்கிறார்கள்.

நைவேத்யம் ஆன பிறகு, இந்த சாதத்தை கோவிலிலுள்ள அனைத்து தீட்சிதர்களுக்கும் பங்கிட்டு கொடுத்துவிடுவார்கள். சுவாமி பிரசாதம் என்பதைத் தவிர, வழக்கமாகவே சம்பா சாதமும், கொத்ஸும் மிக மிக ருசியாக இருக்கும்.

சம்பா சாதம் (மிளகு சாதம்)

தேவையானவை: 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், 2 டேபிள் ஸ்பூன் நெய், 200 கிராம் அரிசி, 10 முந்திரி பருப்பு உடைத்து நெய்யில் வறுத்தது, உப்பு.

செய்முறை: அரிசியை நன்கு அலசிவிட்டு, குக்கரில் தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு, சாதம் வேகவைத்துக்கொள்ளவும். சாதம் உதிரிஉதிரியாக இருக்க வேண்டும். மிளகு, சீரகத்தை வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். சாதத்தில் நெய் விட்டு, மிளகு, சீரகப் பொடியையும், முந்திரிப் பருப்பையும் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கொத்ஸுவுடன் சேர்த்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

கத்தரிக்காய் கொத்ஸு

தேவையானவை:  கத்தரிக்காய் -250 கிராம், புளி - ஒரு எலுமிச்சை அளவு, மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை கொஞ்சம், கொத்ஸு பொடி 5 டீஸ்பூன் (செய்முறை கீழே உள்ளது) நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், வெல்லம் (துருவியது), 1/2 டீஸ்பூன் உப்பு

கொத்ஸு பொடி: கொத்தமல்லி விதை -3 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், துவரம் பருப்பு -2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்), சிகப்பு வரமிளகாய்-5. மேற்குறிப்பிட்ட பொருள்களை ஒரு வாணலியில் ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து எடுத்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய்விட வேண்டாம்.

கொத்ஸு செய்முறை:  ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும். கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கி தண்ணீரில் போடவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காய் துண்டங்களை (நீரை இறுத்து விட்டு)போடவும். பின்னர் கறிவேப்பிலை போடவும். கத்தரிக்காய் 5 நிமிடம் வதங்கிய பிறகு ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும். 3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.

அதன்பின்னர் உப்பு போட்டு மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும். மரக்கரண்டியால் கத்தரிக்காய்களை மசிக்கவும். கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, உறைப்பு, புளிப்பு எது குறைகிறதோ, அந்த சுவையைக் கூட்டவும். பின்னர் வெல்லம் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் மேலே வந்தவுடன், அடுப்பை அணைத்துவிடலாம். இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன்கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை கெடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT