சிறப்புக் கட்டுரைகள்

சாப்பாடு மட்டுமல்ல, செட்டிநாடு ஸ்நாக்ஸும் ஸ்பெஷல்தான்!

எஸ். மயில் வாகனன்

காரைக்குடி: தரம், சுகாதாரம், சுவை இதனை தாரக மந்திரமாகக் கொண்டு செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளை காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், கண்டனூர், அழகாபுரி, பள்ளத்தூர், புதுவயல், பொன்னமராவதி, புதுக்கோட்டை மற்றும் கானாடுகாத்தான், செட்டிநாடு போன்ற பகுதிகளில் குடிசைத் தொழிலாக பலர் தயாரித்து வருகின்றனர்.

'செட்டிநாடு' என்றாலே சாப்பாடுதான் நினைவுக்கு வருவது வழக்கம். அதே வரிசையில் செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளுக்கும் அந்த இடம் கிடைத்திருப்பதால் பல ஊர்களில் வசிக்கின்றவர்கள் இதற்கென தனியாக ஆர்டர் செய்து செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளை பெற்று சுவைத்து வருகின்றனர்.

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன வணிகர்கள் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கின்ற பகுதி நகரத் தோற்றத்தை பெற்றிருப்பதால் இவர்களை நகரத்தார்கள் என்றும் கூறுகின்றனர். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்த்தால் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளை குடிசைத்தொழிலாக மேற்கொண்டு தயாரித்து வருகின்றனர். 

செட்டிநாடு ஸ்நாக் வகை தேன்குழல்

பெரும்பாலும் நகரத்தார் பெண்கள் சிலரும், ஆண்கள் சிலரும் உதவியாளர்களை பணிக்கு அமர்த்திக்கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டு இதன்மூலம் தங்களது குடும்ப வாழ்வாதாரத்திற்குத் தேவையான வருவாயை ஈட்டியும் வருகின்றனர். 

பொதுவாக செட்டிநாடு ஸ்நாக்ஸ் என்பது தேன்குழல் (பெரிய அளவிலான முறுக்கு) சுற்றுமுறுக்கு, சீப்புச்சீடை, அதிரசம், மணகோலம், மாஉருண்டை, தட்டை போன்றவையே தயாரிக்கின்றனர்.

காரைக்குடியில் கீழத்தெருகண்டனூர் சாலையில் பாரம்பரிய முறையில் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் என்றும் இடியாப்ப மாவு, சத்து மாவு, சிவப்பு அரிசி இடியாப்ப மாவு, புட்டு மாவு, ஆடிக்கூழ் மாவு, வத்தல்கள் என 38 வகையான பொருள்கள் தயாரித்து வருகின்றனர்.

நாச்சு ஸ்நாக்ஸ் என்ற குடிசைத்தொழில் நிறுவனம். இதனை நிர்வகித்து வருபவர் 58 வயதான எஸ். அடைக்கம்மை என்ற பெண்மணி. 

தினமும் காலை 9 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை தயாரிப்பிலும், விற்பனையிலும் பரபரப்பாக இருப்பதாக தெரிவிக்கிறார் அடைக்கம்மை.
அவரது பணியினூடே நம்மிடம் கூறியதாவது: 

எனது கணவர் சேவுகன் செட்டியார், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். எங்களதுமுன்னோர்களை பின்பற்றியே அவர்கள் கற்றுத்தந்ததை செட்டிநாடு ஸ்நாக்ஸ், வத்தல், மாவுகள், பொடிவகைகளை இங்கு தாயாரிக்கிறோம். 

செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளில் தேன்குழல் (பெரிய அளவிலான முறுக்கு) சுற்றுமுறுக்கு, சீப்புச்சீடை, அதிரசம், மணகோலம், மாஉருண்டை, தட்டை போன்றவைகளுடன் 'கைச்சீடை' என்ற ஸ்பெஷல் வகை இங்கு மட்டுமே தயாரிக்கிறோம். இதற்கான மாவு தாயாரிப்பில் கவனம் செலுத்துகிறோம். சுவையாக மொறுமொறுவென்று இருக்கும் இந்த சீடையை வெளிநாட்டில் உள்ளவர்கள் விரும்பி வாங்குகின்றனர். 

தரமான அரிசி, உளுந்து மற்றும் சேர்க்கப்படும் மளிகைப் பொருள்களை வாங்கி அதனை பக்குவமாக காயவைத்து பின்னர் மாவாக்குவதில்தான் இதன் ருசியும், நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மையையும் பெறுகிறது. அந்தவகையில் தரத்திற்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளை தயாரித்து வருகிறோம். 

இங்கு தனியாக இயந்திரம் கொண்டு மாவு வகைகளை தயாரித்து வருகிறோம். வெள்ளை அரிசி மூலம் இடியாப்ப மாவு தயாரிக்கின்றோம். இதில் ஸ்பெஷலாக சிவப்பு அரிசி இடியாப்ப மாவு, சத்து மாவு, புட்டு மாவு, ஆடிக்கூழ் மாவு போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. சிவப்பு அரிசி இடியாப்ப மாவு எங்குமே கிடைக்காதது. இதில் இடியாப்பம் தயாரித்தால் ருசி மிகுந்தாக இருக்கும்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்பதற்கு உகந்ததாக கேப்பை பால்வத்தல் (கேழ்வரகு) தயாரிப்பு எங்களின் சிறப்புத் தயாரிப்புகளில் ஒன்று. அதாவது கேழ்வரகை நன்றாக ஊறவைத்து அதிலிருந்து பால் எடுத்து சுத்தமான சுகாதாரமான முறையில் தயாரிப்பதுதான் கேப்பை பால்வத்தலாகும்.

மசால் வத்தல் தயாரிக்கிறோம். இதில் பச்சைமிளகாய், சீரகம், மிளகு, கருவேப்பிலை, தக்காளி போன்றவை சேர்க்கப்படுகிறது. ஆடிக்கூழ் மாவு (கும்மாயமாவு) பாசி பருப்பு, உளுந்தம்பருப்பு மாவாக தயாரிக்கப்படுகிறது. இதனை கருப்பட்டி, சாப்பாடு நெய் சேர்த்து சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனைச் சாப்பிடலாம். இதனை சமையல் கலைஞர்கள் அதிகம் வாங்கிச் செல்கிறார்கள்.

அரிசி உப்பு மாவு என்பது புளுங்கல் அரிசி, மிளகாய், சீரகம், பெருங்காயம், துவரம்பருப்பு போன்றவை கலவையாக்கி தயாரிக்கப்படுகிறது. அனைவரும் இதனை சாப்பிடலாம்.

கற்வடகம் என்பது வெங்காயம், உளுந்து, மிளகாய், கருவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு போன்றவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் கத்தரி வத்தல், மாவத்தல், அவரை வத்தல், மிளகு பொடி (சாதத்தில் சேர்த்து உண்பது), இட்லி பொடி, கருவேப்பிலை பொடி, சுண்ட வத்தல், மிதுக்கவத்தல், கொத்தவரை வத்தல் என 38 வகையான தயாரிப்புகளை தரமானதாகவும், உடல்நலத்துக்கு உகந்ததாகவும், சுகாதாரமானதாகவும் தயாரிக்கின்றோம். உடல்நலத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும் மைதா மாவு, அஜினோமேட்டா, சோடாமாவு,  டால்டா இந்த நான்கையும் எங்கள் தயாரிப்புப் பொருள்களில் சேர்ப்பதே இல்லை. 

அனைத்துவகைப் பொருள்களும் தினந்தோறும் தயாரிக்கப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து பலர் வாங்கிச் செல்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் தொடர்புகொண்டு பொருள்கள் கேட்பார்கள். அவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், நகரில் முக்கியப் பிரமுகர்களான அழகப்பா கல்வி நிறுவனங்களில் உள்ளவர்கள், டாக்டர் உமையாள் ராமநாதன், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, ஆசிரியர்கள் என பலர் எங்கள் செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளை வாங்குகிறார்கள்.

அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா என வெளிநாடுகளிலிருந்தும் தொடர்பு கொண்டு கேட்பவர்களுக்கு செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகளை அனுப்பி வைக்கிறோம். 

கரோனா பெருந்தொற்று கால பொதுமுடக்கத்தில் வீட்டில்உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிட்டு வந்தனர். முக்கியமாக இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆர்டர்கள் தருகிறார்கள். அதனையும் ஏற்று உரிய நேரத்தில் தயாரித்து தந்து கொண்டிருக்கிறோம். செட்டிநாடு ஸ்நாக்ஸ் தேவைக்கு 94429 42275, 93844 46158 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார் அடைக்கம்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT