சிறப்புக் கட்டுரைகள்

'இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் மகன்' - தந்தை உருக்கம்!

எம்.மாரியப்பன்

நாமக்கல்: கடந்த 2008 செப். 20 திருக்கழுக்குன்றத்தில் இருந்து சென்னை நோக்கி விரைந்த விபத்தில் மறைந்த 15 வயது சிறுவன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளுடன் அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸை சாலையோரம் நின்றபடி வியந்து பார்த்த மக்கள் ஏராளம்.

ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள், 9 வயது சிறுமி அபிராமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. மறைந்த ஹிதேந்திரன் அன்று புதியதாகப் பிறந்தார் என்றே கூறலாம். அவர் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு, 12 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் உடல், உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இங்கு பலரிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

கோவை, மதுரை, சேலம் என பல மாவட்டங்களிலும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள், எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு பொருத்துவதற்காக விரைந்து செல்கிறது. இறந்த பின்னரும் வாழும் அந்த நல்ல உள்ளங்களின் குடும்பத்தினர் மனதளவில் வேதனையுற்றாலும் நம்மை விட்டு மகனோ, மகளோ செல்லவில்லை என்ற ஆறுதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உடல் உறுப்புகளை பொருத்தியவர்கள் யாரென்பது தானமாக வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு தெரிந்தும், பலருக்கு தெரியாமலுமே உள்ளன.

தானங்களில் பலவகை உண்டு. ஆனால் ஓர் உயிருக்கு, உயிர் கொடுக்கக் கூடியவற்றில் ரத்ததானம், கண் தானம் போன்று தற்போது உடல் உறுப்பு தானமும் இணைந்துவிட்டது.

அந்த வகையில் செல்லமாக வளர்த்த மகன் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டு இறக்க நேரிட, வாழ்ந்தபோதே ரத்ததானம் செய்து பலருடைய பாராட்டுக்களை பெற்ற தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி சிலருக்கு வாழ்வளித்துள்ளார் நாமக்கல் என்ஜிஓஓ காலனியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி(52).

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியது:

மனைவி சாந்தி, மகன்கள் அஜீத்குமார், பிரபாகரன், மகள் பிரபாவதி. இதுதான் எனது குடும்பம். கட்டட ஒப்பந்ததாரர் வேலையுடன், திமுக நகர கிளைச் செயலாளருமாக உள்ளேன். எனது மூத்த மகன் அஜீத்குமார்(25). பி.டெக் படித்த அவன், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தான். 2018 டிசம்பர் மாதம் இருசக்கர வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டான். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நலம் தேறினான். இதன்பின்னர் ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக தொடர்ந்து செய்து வருகிறேன். 

அந்த விபத்துக்குப் பின், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தான். கரோனா பாதிப்பால் நிறுவனம் விடுமுறை அளிக்க நாமக்கல்லுக்கு வந்தான். நண்பர்களுடன் கொல்லிமலை சென்று விட்டு திரும்பிய அவன், ஒருநாள் இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே சென்றபோது போக்குவரத்து காவலர் ஒருவர் இரு சக்கர வாகன சாவியை பறித்துக் கொண்டார். இதனால் பதற்றமடைந்த அவன் திடீரென மயங்கி விழுந்தான். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள நியூரோ மூளை நரம்பியல் மருத்துவமனையிலும் அனுமதித்தோம். ஜூலை 30-இல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மூளைச்சாவு நிகழ்ந்து இறந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் என்ன செய்வதென தெரியவில்லை. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எனது சகோதரர்  சங்கர் என்பவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது மாற்று கல்லீரல் கிடைத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். அந்த பாதிப்பு என் மனதில் தோன்றியது. இதேபோன்று மற்றவர்களுக்கு உறுப்புகளை வழங்கினால் அவர்கள் வாழ்வில் வெளிச்சம் கிடைக்குமே என்று தோன்றியது.

இந்த நிலையில், சென்னை குளோபல் மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவ செலவினங்களை வழங்கிவிடுகிறோம். உறுப்புகளை வழங்க முடியுமா எனக் கேட்டனர். ஆனால் பணத்திற்கு மகனின் உடல் உறுப்புகளை வழங்க எனக்கு மனமில்லை. சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனையில்தான் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த வந்த குழுவின் மூன்று கட்ட ஆய்வுக்குப் பின்னரே உறுப்புகளை தானமாக வழங்குவதற்கான ஒப்புதலை வழங்கினர்.

மகன் அஜீத்தின் சிறுநீரகம், இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், முதுகு எலும்பு, தோல் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டன. அவை எங்கு சென்றது, யாருக்கு பொருத்தப்பட்டது என்பது தெரியவில்லை. நாங்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை. சிறுநீரகம் மட்டும் கரூரில் உள்ள ஒருவருக்கு பொருத்தப்பட்டதாக தகவல் வந்தது. உறுப்புகளை தானமாக வழங்கிவிட்டு அவர்களை சந்திக்க நேரிட்டால் தேவையில்லாத கவலையும், வேதனையும் தான் மிஞ்சும். அதனால் அதைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பவில்லை. ஆசையாக வளர்த்த மகன், ஆயுள் முழுவதும் துணையாக நிற்பான் என்று நானும், எனது மனைவியும் எண்ணியிருந்தோம். ஆனால், முன்னதாகவே ஆண்டவன் அவனை அரவணைத்துக் கொண்டான். அவன் இறந்தாலும், தானமாக வழங்கிய உறுப்புகள் மூலமாக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான் என்றார் கண்ணீர் பெருக்கோடு…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT