சிறப்புக் கட்டுரைகள்

பெண்ணை இகழ்தல் ஆண் நலனுக்குத் தீங்கானது!

ஆர்.சரவணன்

வாழ்க்கையில் உங்களை ஏற்றி விட்டு உங்களின் உயர்வை பார்த்து மலைக்காமலும், நீங்கள் உயரும் போது பாராமாக இருக்கிறோம் என நினைக்காமலும் நம்முடன் பயணம் செய்த, பயணித்துக் கொண்டிக்கின்ற, மற்றும் பயணிக்கப் போகும் அனைத்து விதமான பெண்களுக்கும் என் முதல் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

என்னப்பா.. எப்பவுமே கடைசியா தான் வாழ்த்து சொல்லுவ இன்னைக்கு என்ன முதல்லயே சொல்லிட்ட'னு ஆச்சரியப்பட வேண்டாம்.. பெண்கள் என்றுமே எதிலுமே முதல் தான். ஆகையால், முதலிலேயே வாழ்த்துக்கள் கூறிவிடுகிறேன்.

என்றும் எதிலும் முதன்மை தான் என்று நாம் ஏற்க வேண்டிய பெண்களை இன்றைய காலங்களில் எவ்வாறு உலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது மில்லியன் டாலர் கேள்வி!.

விளம்பரங்களில் ஒரு பொருளை வாங்குவதற்கு கூட அவர்களை ஒரு போகப் பொருளாகத் தான் உபயோகிக்கிறார்கள். கேட்டால் மாடலிங் என்று கூறுவார்கள்!.

சரி.. மாடலிங் இன்றைய பெண்கள் விரும்புகின்ற ஒரு துறையாக இருந்தாலும் எத்தனை பேர் அதை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிக்கிறோம்?. 

விளம்பரங்ளில் பெண்களை கவர்ச்சியாக காண்பிப்பது தேவையில்லை என்று நீங்கள்  கருதினால், மாடலிங் போன்ற துறைகளில் இந்தியப் பெண்களை ஏன் தேர்வு செய்ய தயங்குகிறீர்கள்?.

நம் கலாசாரங்களைப் போற்றும்படியான மாடலிங் தான் தேவை. ஆனால் விளம்பரங்கள் இந்திய கலாசாரசத்திற்கு ஏதுவான மாடலிங்கை விரும்புவதில்லை.. பின் எவ்வாறு மாடலிங் துறையில் பெண்கள் முதலில் வர முடியும்?.

சமஉரிமை பற்றி மைக்கில் கூக்குறலிடும்  ஆட்கள் எத்தனை பேர் தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளோம்?.

பொருளாதாரத்தில் சில வீடுகளில் சமஉரிமை கொடுக்கப்பட்டாலும் எத்தனை வீடுகளில் வீட்டு வேலைகளை ஆண்கள் சம உரிமையுடன் எடுத்துள்ளோம்?.

இன்றும் நாம் அவர்களை அடுப்பாங்கரையில் தானே பூட்டி வைத்துள்ளோம்? 
ஆக.. சம உரிமையும் மறுக்கப்படுகிறது.

பெண்களின் பலமே கண்ணீர் தான் என சில ஆண்கள் தவறாக கூறி வருகின்றனர். உண்மையில் அவர்களின் பலம் பொறுமை. ஆண் எவ்வளவு கத்தினாலும் அதை பொறுமையாக கேட்டு வழிநடத்துவது பெண்கள் தானே?.

நாம் எத்தனை பேர் அவர்களின் பலத்தை பற்றி நம் வீட்டு சபைகளில் பேசியிருப்போம்?. பெண்களின் பலத்தை பற்றியும் சபைகளில் பேச வேண்டும்!.

உங்கள் உதடு வழியே நுழைந்து நாக்கில் ஏறும் உங்கள் வீட்டுப் பெண்களின் சமையலை என்றாவது புகழ்ந்து அவர்களை ஊக்கப்படத்தியுள்ளீர்களா? ஊக்கப்படுத்திப் பாருங்கள் அவர்களின் சமையல் வேற லெவலுக்கு போகும்.

பொதுவாக பெண்களுக்கு பிரச்னை என்பது அவர்களின் பள்ளி படிப்பின்போதே தொடங்கிவிடுகிறது. சிலருக்கு குடும்ப வறுமை. சிலருக்கு பாலியல் சீண்டல். 

எங்கள் ஊர் சிவகாசியில் பள்ளி விடுமுறை நாளில் பெண் குழந்தைகள் அவர்களின் குடும்ப வறுமையை போக்க வீட்டில் தீப்பெட்டி ஒட்டுதல், தீக்குச்சி அடுக்குதல் போன்ற வேலைகளை செய்து தங்களை வறுமையில் இருந்து மீட்டுக் கொள்கின்ற அளவு திறமையானவர்கள்.

ஆனால், அவர்களால் இன்றும் பாலியல் சீண்டல் பிரச்னைகளை சமாளிக்க முடிவதில்லை. இந்த நல்ல நாளிலே அரசுக்கு என் சிறிய வேண்டுகோள், பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் அதில் இருந்து அவர்களை விடுவிக்கவும், பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குபவருக்கு உடனடியாக தண்டனையையும் கொடுக்கும் படியும் விதி எண் 110-ன் படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் பெண்கள் தினத்திற்கு அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெண்கள் தின பரிசாக கொண்டாடப்படும். 

பெண்ணைப் பற்றி நினைக்காமல் பேசாமல் எந்த ஒரு மனிதனின் ஒரு நாளும் கழிந்தது இல்லை.ஒரு நாளின் முக்கியத்துவத்தை அறிந்து இருக்கும் வெகு சிலரைப் போல் பெண்களின் இருப்பையும் இன்றியமையாமையும் சிலரே உணர்ந்துள்ளனர்.

நம்முடனே பயணிக்கும் பெண் என்பவள் யார்?  என்று சிந்திக்க மறந்த, மறுத்த ஆண்களுக்கும் தன்னையே தொலைத்து வாழும் பெண்களுக்கும் விடை தருவதாக அமைந்த நூல் "இந்த நதி நனைவதற்கல்ல".

பெண்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்படும் வன்முறையும் அதற்கு காரணமானவர்களையும் அதற்கு மௌன சாட்சியாய் துணை நின்றவர்களையும் அநீதிகளுக்கு நீதி தராத, சிறு எதிர்ப்பு குரல் கூட கொடுக்காத அரசியல்வாதிகளையும் துணிந்து சரியாக சாடியுள்ளார் ஆசிரியர் தமயந்தி.

பெண்களைப் பற்றி பேசும் பொழுது ஒரு பெண்ணாக தன்னையும் உற்று நோக்கி தன்னைப் பற்றிய சுய அலசலையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. தனக்கென ஒரு வாழ்வு உண்டு என்ற அடிப்படை உரிமையை உணராத பெண்கள் அனேகம்.

அவர்களின் உணர்வற்ற சகிப்புத்தன்மையால் தான்  பெரும்பான்மை ஆண்கள் சமுதாயத்தில் நல்லவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இந்த உரிமையை நான் உனக்குத் தருகிறேன் வைத்துக்கொள் என்று கூறுவதையே உரிமையாகக் கருதும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு அவற்றை ஆண்கள் எடைபோடும் விதத்தையும் உரத்து உரைத்துள்ளார் ஆசிரியர் தமயந்தி.

இன்றும் பெண்ணானவள் அறிவால், ஆளுமையால், திறமையால் அடையாளப்படுத்தப்படுவதை விட உடலை மையப்படுத்தி உடல் ரீதியாகவே பார்க்கப்படுகிறாள்.

பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதன் நீட்சியே மைமூன் சர்மிளா என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை, தீபா என்ற என்ற பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை என முடிவில்லாமல் பட்டியல் நீள்கிறது.

பெண்ணுடலை தான் வளர்க்கும் மிருகத்தை காட்டிலும் கேவலமாக நினைக்கும் மனோபாவம் இந்த சமூகக் கட்டமைப்பின் அடிநரம்பு என்ற தமயந்தியின் கூற்று முற்றிலும் சரி.

போர் சார்ந்த பாலியல் வன்முறைகள் வரலாற்றுப் பிழைகளாக இன்றும் தொடர்கின்றன. இனக் கலவரம் முதல் இடத்தகராறு வரை பெண்ணே அதீத வன்முறைகளுக்கு ஆட்கொள்ள(ல்ல)ப்படுகிறாள். 

அதற்குச் சாட்சியாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற இளம் பெண்களின் சேலையை இழுத்து அவர்களை தவறான முறையில் கையாண்ட கும்பல் தண்ணி வேணுமா உங்களுக்கு? என்று சிறுநீரை வாயில் பீச்சியும், செருப்பு காலால் பிட்டத்தில் உதைத்தும் கொடுமைப்படுத்தியவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற கேரள காவல்துறையிடம் தமிழக காவல்துறை கெஞ்சிக் கொண்டிருந்த நிகழ்வை வாசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் கோபம் வரும்.
அந்த கோபம் சுமூகமாக முடிந்த பிரச்னை என்று அரசியல்வாதிகள் தரும் வாக்குமூலத்தில் நீர்த்துப்போகும்.

"நான் நிர்வாணப்படுத்தப்பட்ட பொழுது மகாபாரதத்தில் கிருஷ்ணன் வந்து திரௌபதியை காப்பாற்றியது போல் யாராவது காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அப்படி எனில் என்னை காப்பாற்றுவதற்காக நான் யாரை அழைத்திருக்க வேண்டும்?" என்று இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் பார்த்து சோனா சோரி கேட்கும் கேள்வி நம்மை இன்னும் வெட்கப்பட வைத்திருக்க வேண்டும் என தமயந்தி வாதாடும் சோனா தண்டிவாடா என்னும் பழங்குடிகளுக்கான பள்ளி ஆசிரியை.

அவரின் தந்தையோ காவல்துறையினரோடு நெருக்கமாக இருக்கிறார் என்று நக்சல்களால் சுடப்பட்டவர். சோனாவோ  நக்சல் அமைப்போடு தொடர்பு இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சத்தீஸ்கர் காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அவரை சித்திரவதை செய்த அங்கிட் கார்க் அவரை நிர்வாணப்படுத்தி "நீ ஒரு வேசி. மாவோயிஸ்டுகளுக்கு சதையை விற்பவள்" என்று வார்த்தைகளால் அவமானப்படுத்தியதோடு அவருக்கு மின் அதிர்ச்சிகள் கொடுத்து  மயங்கி விழ செய்த நிலையில் அவரின் பிறப்புறுப்பில் இரண்டு கற்கள் உள்ளே புகுத்தப்பட்டது சித்திரவதைக்கு ஆளானார். 

இத்தகைய  சித்திரவதைகள் எல்லோரின் பார்வைக்கும் சென்ற பிறகும் அங்கிட்டுக்கு குடியரசு தினத்தன்று விருது கொடுத்து கெளரவித்தது அரசு. சோனாவின் கடிதத்தில் "யார் இந்த உலகை படைத்தது? யோசிக்கும் திறன் வாய்ந்த மனிதர்களை யார் பெற்றெடுத்தார்கள்? பெண்கள் இல்லாவிட்டால் இந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்குமா?. நான் ஒரு பெண். எனக்கு ஏன் இது நேர்ந்தது. பதில் சொல்லுங்கள்." என்று கேட்கும் கேள்விகளுக்கு நாம் என்று என்ன பதில் சொல்லப் போகிறோம். 

அநீதிகளுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு  தனிமனிதனின் தயக்கம் தான் பல வன்முறைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணமாகிறது. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு அந்தப் பெண்ணின் மீது தவறு இல்லை என்னும் நம்பிக்கை தந்து எதிர்த்துப் போராடும் வல்லமையை நம் சமூக கட்டமைப்பு ஏன் தரவில்லை? 

நவீன உலகில் மதிப்பீடுகளில் கல்வி என்பது மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே வாழ்வியல் குறித்த மதிப்பீடுகள் இன்று ஏதுமில்லை. நம் கலாச்சார பிம்பமான  கலைகளும் அப்படித்தான் இருக்கிறது. கணவன் மனைவியை அடிப்பதும் வன்முறைதான் என்ற புரிதல் இல்லாமல் பலர் வாழ்கிறார்கள். 

இவற்றைப் போல பெண்கள் எங்கு எவரால்  எப்படி எல்லாம் பாதிப்படைகிறார்கள் என அறச்சீற்றமாக எழுதியுள்ளார் தமயந்தி. நூலைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் இதிலுள்ள ஏதாவது ஒன்றை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மதிப்பளிக்க ஆண்களுக்கு உணர்த்தும் நூல். இறுதியாக பெண்களை போற்றும் விதமாக ஒரு படத்தில் வரும்  வசனத்துடன் நிறைவு செய்கிறேன்.

"போகட்டும் சார் பொண்ணுங்க...
ஸ்கூலுக்கு போகட்டும்,
காலேஜ்க்கு போகட்டும்,
வேலைக்கு போகட்டும்,
நிம்மதியா."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT