சிறப்புக் கட்டுரைகள்

பெண்கள் நினைத்தால் ஆட்டோ ஓட்டியும் சாதிக்கலாம்

தினமணி


பெண்கள் இல்லாத துறையே இல்லை எனக் கூறலாம். ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். என்றாலும், சில கடினமான துறைகளுக்கு வர பெண்களிடையே தயக்கம் நிலவுகிறது. குடும்பம், சமூகச் சூழல் உள்ளிட்டவையே இதற்குக் காரணம்.

இச்சூழ்நிலையிலும், தஞ்சாவூரில் ஆட்டோ ஓட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்துள்ளார் ம. விஜயலட்சுமி. அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூரில் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையும் இவரையே சாரும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி எதிரேயுள்ள தமிழ் நகரைச் சேர்ந்த இவர் ஏறத்தாழ 40 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சி அளித்து, உரிமமும் பெற்றுக் கொடுத்து ஓட்டுநராக்கியுள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி தொடர்கிறார்...

எனது கணவர் பெயர் பி. மணிமோகன். எங்களுக்கு 1988-இல் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மகள், இரு மகன்கள் பிறந்தனர். கணவர் செய்து வந்த தொழிலில் மிகக் குறைந்த வருமானமே கிடைத்தது. இதை வைத்து குடும்பத்தை நடத்த முடியாத நிலை. எனவே, குடும்ப வருவாயைப் பெருக்க நானும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. ஆனால், மற்றவர்களிடம் வேலைக்குச் செல்வதை விட சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

அப்போது, 1990 ஆம் ஆண்டுகளில் சென்னையில் பெண்கள் ஆட்டோ ஓட்டுவது குறித்த செய்திகள் தூர்தர்ஷனிலும், பத்திரிகைகளிலும் வந்தன. இதைப் பார்த்த பிறகுதான் பெண்களாலும் ஆட்டோ ஓட்ட முடியும் என்பதை அறிந்தேன். நாமும் ஆட்டோ ஓட்டலாம் என்ற ஊக்கமும் கிடைத்தது.

தஞ்சாவூரில் உள்ள தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளி மூலம் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் பெறச் சென்றபோது முதல் சுற்றிலேயே தேர்ச்சி பெற்றேன்.

இதன் பின்னர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிதியுதவியுடன் ஆட்டோ வாங்கினேன். இதற்கு அப்போதைய ஆட்சியர் ராமநாதன் ஊக்கமும், உதவியும் அளித்தார். இதையடுத்து, 1999 ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதலாவது வாயில் அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஏற்கெனவே இருந்த 7 ஆட்டோக்களுடன் எனது ஆட்டோவும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

ஆனால், முதலில் எனக்கு சவாரி கிடைக்கவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நான் பெண்ணாக இருப்பதால், என்னால் ஆட்டோவை விபத்தில்லாமல் சரியாக ஓட்ட முடியுமா என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களிடம் இருந்தது. இதனால், எனது ஆட்டோவில் பயணிக்க வாடிக்கையாளர்கள் தயங்கினர். ஆண் ஓட்டுநர்களின் ஆட்டோவிலேயே பயணம் செய்வர். எனவே, எனக்கு தினமும் வருமானமும் மிகவும் குறைவாகவே கிடைத்து வந்தது.  

ஒரு நாள் காலை முதல் இரவு வரை காத்திருந்தும் ஒரு சவாரி கூட கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடனும், விரக்தியுடனும் வீட்டுக்குச் சென்றேன். இந்த நிலைமை தொடர்ந்தால் எப்படி வாழ்க்கையை நடத்துவது என்ற கேள்விக்குறி தொடர்ந்து கொண்டே இருந்ததால், இரவில் எனக்குத் தூக்கமும் வரவில்லை. அப்போது, ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, வேறு ஏதாவது தொழில் செய்யலாமா என்ற சிந்தனையும் மனதில் ஓடியது.

இதன் பிறகு மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அப்போது, எனது பிள்ளைகளும் சிறு குழந்தைகள். பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலம். அவர்களை ஆட்டோவில் அழைத்து சென்று, பள்ளியில் விட்டுவிட்டு, மீண்டும் ஆட்டோவிலேயே அழைத்து வருவேன்.

இதேபோல, எனது வீட்டு அருகே உள்ளவர்களிடமும் ஆட்டோவில் குழந்தைகளை அழைத்துச் செல்வதாகக் கூறினேன். ஏற்கெனவே, எனது குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் செல்வதைப் பார்த்த அவர்கள் தங்களது குழந்தைகளையும் அனுப்புவதற்கு முன் வந்தனர். இதன் மூலம் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. காலையிலும், மாலையிலும் 3 நடைகள் கூட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றேன். இதிலிருந்து வாடிக்கையாளர்கள் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் நிலையம், பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கு எனது ஆட்டோவில் தைரியமாக ஏறத் தொடங்கினர்.

நான் பெண்ணாக இருப்பதால், பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதி எனது ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். என்னை குடும்பத்தில் ஒரு நபரைப் போல நினைத்து, வழி நெடுகிலும் என்னுடன் மிகவும் இயல்பாகவே பேசி வருகின்றனர். இதனால், எனது ஆட்டோவில் வருவதற்கே விரும்புகின்றனர்.

தொடர்ந்து 21 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். இதிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்துதான் எனது குழந்தைகளைப் படிக்க வைத்தேன். எனது மூத்த மகளை பி.ஏ., பி.எட். படித்து ஆசிரியராகியுள்ளார். இவருக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டேன். அடுத்து இரு மகன்களையும் பட்டயப்படிப்பு படிக்க வைத்தேன். இதன் மூலம் இருவரும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன். இதற்கு ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருவாய்தான் காரணம். ஒரு நாளைக்கு செலவு போக ரூ. 500 கிடைக்கிறது. எனது கணவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். தொடக்கம் முதல் நான் ஆட்டோ ஓட்டுவதற்கு முழு ஒத்துழைப்பும் அவர் அளித்து வருகிறார்.  இருவரும் இணைந்தே குடும்பத்துக்கு வருவாயைப் பெருக்கியுள்ளோம்.

இதன் மூலம் மனதளவில் தைரியம் கிடைத்து, பொது வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினேன். மேலும், சமூகத்துக்காகப் போராடும் எண்ணமும் ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தில் மாவட்டச் செயலராகவும் உள்ளேன்.

இதனிடையே, என்னைப் போல மற்ற பெண்களுக்கும் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுக்க முடிவு செய்தேன். இதுவரை 40 பெண்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். மருத்துவக் கல்லூரி இரண்டாவது வாயிலில் புதுமை புரட்சி ஆட்டோ நிறுத்தத்தை உருவாக்கினோம்.  

ஆனால், இப்போது 10 பெண்கள்தான் ஆட்டோ ஓட்டுகின்றனர். இது கத்தி மேல நடக்கிற மாதிரி. ஆட்டோ ஓட்டுநர் என்றாலே சமூகத்தில் அந்தஸ்து கிடைக்காது. ஏளனமாகவே பார்ப்பர். அதுபோல பெண் ஆட்டோ ஓட்டுநர்களையும் பார்க்கின்றனர். மனதளவில் பலவீனமாகிவிடுவதால் பெண்கள் தொடர்ந்து ஆட்டோ ஓட்டாமல் விட்டுவிடுகின்றனர். ஆனால், பெண்களாக இருந்தாலும், துணிச்சலாக ஆட்டோ ஓட்டினால் நிச்சயமாக சாதிக்கலாம் என்றார் விஜயலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT