சிறப்புக் கட்டுரைகள்

கரோனா:  இரண்டாம் அலை உணர்த்தும் பாடங்கள்

6th Jun 2021 05:00 AM | நசிகேதன்

ADVERTISEMENT

 

இரண்டாம் அலை கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும்,  நோய்த்தொற்றைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும்  முழு ஊரடங்கு  நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலும்  நோய்த் தொற்றைக்  கட்டுப்படுத்தப்பட முடியாமல் கடந்த வாரம் முதல்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழகம் முழுவதும் ஒரு முழு ஊரடங்கிற்கான எந்த அடையாளத்துடனும் நகரங்களோ,  சாலைகளோ காணப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அறவே இல்லையென்று கூறுவதற்கு சாத்தியங்கள் இல்லாத நிலையே இன்றும் நீடித்து வருகிறது. வெறிச்சோடிக் காணப்பட்டது என்பதன்றி அனைத்துச் சாலைகளிலும் பரபரப்பான ஒரு வேலை நாளுக்குரிய வாகன  நடமாட்டங்களும் வாகன நெரிசல்களும் மக்கள் நடமாட்டமாகவே காணப்படுகின்றன.

விதிமுறையை மீறும் வாகன ஓட்டுநர்கள், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனங்கள் செல்லக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தாமாக எடுத்து வழிகளை ஏற்படுத்திக்கொண்டு ஊரடங்கு விதிமீறல்களை மீறுவது நாள்தோறும் அரங்கேறும் காட்சிகளாகவே உள்ளன. காவல்துறையினரின் பார்க்கவே இந்தக் காட்சிகள் அனைத்தும் அரங்கேறுகின்றன. கட்டுப்பாடு என்கிற விதிமுறைகள் எதுவும் காவல்துறையினரின் கட்டளைகளிலோ, மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவுகளிலோ புதைந்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்களது எச்சரிக்கைகள், அபராதங்கள், வாகனங்கள் பறிமுதல் என எவ்வித நடவடிக்கையும் பொதுமக்களை அச்சுறுத்தவில்லை. அதை மிகவும் அலட்சியத்துடன் அணுகி வருகின்றனர்.

கரோனா நோய்த்தொற்றுக்காக வீடுகளுக்குள் முடங்குங்கள் என்று கெஞ்சாதவர்கள் இல்லை. கேட்காதவர்கள் இல்லை. காவல்துறையினர்  தங்களது குடும்பம் மறந்து வீதிகளில் பாதுகாப்பில் உள்ளனர், மருத்துவத் துறையினர் தங்களது வீடு துறந்து மருத்துவமனைகளில் வாழ்கின்றனர். துப்புரவுப் பணியாளர்கள் கடந்த 15 மாதங்களாகவே நமது குப்பைகளை அள்ளி வருகின்றனர்... என இவர்களை உதாரணங்காட்டி வீடுகளுக்குள் இருந்து நோயை ஒழிப்போம், விரட்டுவோம் என்கிற வேண்டுகோள்களை யாரும் கேட்பாரில்லை.

ADVERTISEMENT

நோய் பாதிப்புற்று மருத்துவமனையை நாடி வருபவர்கள் படுக்கைகள் இல்லையென்றும், நல்ல உணவில்லையென்றும், நல்ல தண்ணீர் இல்லையென்றும் போராடுவது மட்டும் எங்கும் தவறவில்லை. நோய்ப் பாதிப்புக்கு முன்னதாகவே பாதிப்பை ஒழிக்க முன்வைத்த கோரிக்கைகள் குறித்து இங்கு பேச்சில்லை... கவலையில்லை. வந்த பிறகான தேவைகளே முக்கியமாகிறது.

மக்களின் மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அனைவரும் உணர முடிகிறது. பொதுநலம் என்பது மறைந்து சுயநலம் தலைவிரித்தாடுவதும், அனைவரிடையேயும் இருந்து வந்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொண்டாட்ட மனநிலையிலேயே முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்கும் பாங்கு மக்களுக்குப் பழக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கான, இரண்டு வாரத்திற்கான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள எப்போதும் பெரிய பைகளுடன் அறிவிப்பு வந்தவுடன் குடும்பத்துடன் தயாராகி விடுகின்றனர்.

யாருக்கும் வெட்கமில்லை, காத்திருப்பதை யாராவது பார்த்து விடுவார்களோ என்று கெளரவமாக செல் போனைப் பார்ப்பது போல் நடித்துச் சமாளிக்கிறோம். நமது குடும்பம் முக்கியம், நமது மனைவி முக்கியம், நமது குழந்தைகள் முக்கியம், அவர்களது விருப்பம் முக்கியம், அவர்களது தேவை முக்கியமென்று கருதிதான் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்காக அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே அந்த இறைச்சிக் கடையில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். நீண்ட விடுமுறைக்காகவோ, குடும்பத்துடன் சுற்றுலாவுக்கோ செல்லும் மனநிலையே நம் அனைவரிடையேயும் பதிந்து விட்டிருக்கிறது.

வீடுகள் முடக்கம் என்பதை இந்தாண்டு முழு ஊரடங்கில் யாராலும் எந்தக் கட்டுப்பாடுகளாலும், விதிமுறைகளினாலும் நிறைவேற்ற முடியவில்லை. மாநகரின் அனைத்துச் சாலைகளிலும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் எதற்காக செல்கின்றன என்பதை ஊகிக்க முடியாமல் சென்றுகொண்டே இருக்கின்றன. வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமையோ அல்லது வாரத்தின் வேலை நாள் சனிக்கிழமையோ என்று யோசிக்கக் கூடிய அளவில் அனைத்து நாள்களிலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.

ஆதரவற்றவர்கள் தங்களது தினசரி இருப்பிடமான சாலையோரங்களில் தங்களுக்கு அறிமுகமானவர்களுடன் பேசிச் சிரித்து நேரம் போக்கி வருகின்றனர். வீடுகளுக்கு செல்ல முடியாதவர்களோ, புதிதாக வீட்டை விட்டு வெளியேறியவர்களோ அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் வேடிக்கை பார்த்தோ வெறுமனே  கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருக்கின்றனர். வீடுகளின் தொந்தரவு தாங்க முடியாதவர்கள் பிரதான சாலைகளில் அமர்ந்தபடி வேடிக்கையைப் பிரதானமாக்கி தான் சும்மா இருக்கிறோம் என்பதை யாரும் பார்த்து விடக் கூடாது என்று நான்கு நாளைக்கு முந்தைய தினசரிகளைப் படிப்பது போல் நடித்து வருகின்றனர். ஆதரவற்றவர்கள் பலரும் தமிழகம் மறந்துபோனதை நினைவூட்டி மீண்டும் அடையாளப்படுத்திய கரோனா புகழ் தாயக்கட்டை உள்ளிட்ட விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்   

பாதுகாப்புக்காக இருக்கும் காவலர்களிடம் பேரிடர் காலத்தில் செல்வதாகக் கூறியபடி ஒரு வாகனத்தில் மூன்று பேர் செல்வது சர்வசாதாரண காட்சியாக மாறியுள்ளது. அத்தியாவசிய காரணமின்றி சாலைகளில் நடமாடுவதையோ வாகனங்களில் கடப்பதையோ / குற்ற உணர்ச்சியின்றி செய்கிறோம். யாருக்கும் தவறு செய்கிறோம், நோய்ப் பரவலுக்கு காரணமாகிறோம்… நோய்த் தொற்றுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறோம்.. நாள்தோறும் நோய்ப்பரவல் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறதே என்ன செய்யலாம்… மாவட்ட நிர்வாகம் என்ன செய்யும்… காவல்துறையினர், மருத்துவத் துறையினர் காலில் விழாக்குறையாக கெஞ்சுகிறார்களே… நாம் அனைத்தையும் காலில் மிதித்துக்கொண்டே கடக்கிறோமா… என்கிற கவலை யாருக்காவது இருக்கிறதா.. இல்லை. அனைவரும் தங்களின் பாடு முக்கியம். பிறர் பாடு குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. யாரோ எப்படியோ போகட்டும் என்கிற போக்கில்தான் தனது பேத்திகளுடன், பேரன்களுடன் வாகனத்தில் கடந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பயணம் தமக்கும் ஆபத்து, தங்களது குடும்பத்துக்கும் ஆபத்து என்பதை இதுவரை யாரும் உணரவில்லை.  

நாம் பயின்ற காலத்தில் வெப்பக் காலங்களில் கடும் நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் தாமாக தனது தன்மையிழக்கும், செயலிழந்து போகும். சுயமிழக்கும். விளைவுகள் புரியாது என்று அறிவியலில் படித்தது நினைவுக்கு வந்தாலும் கடந்த மே மாதம் கடுமையான வெப்பக் காலத்தில்தான் கரோனா வைரஸ் தாக்கப்பட்டு பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா அறிவியலைப் பொய்யாக்கித் தன்னை நிரூபித்துள்ளது. இதுகுறித்து யாரும் விவாதிக்க முன்வரவில்லை. எப்படி இது சாத்தியம் என யாரும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களுக்கு அடுத்த வாரத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டு விடுமா என்பதுதான் முக்கியமான விவாதமாக இருக்கிறது.

இந்தப் பார்வைகளுடனே நமக்கான உள்மனது பார்வைகளையும் மொத்தமாக கரோனா அழித்து வருவதை நம்மால் உணர முடிகிறதா, இல்லை உணரத் தேவையில்லையென முடிவு செய்து விட்டோமா? கரோனா பூதம் நமது மனிதாபமானம், இரக்க குணம், அடிப்படையாகப் பிறர் மீது காட்டும் பிரியம், அன்பு என சின்னச் சின்ன இயல்புகளைப் பொசுக்கிக் கொண்டே இருக்கிறது. குட்டிச்சாத்தானாக வந்த கரோனா தற்போது நம்மை விழுங்கி ஏப்பமிடும் பூதமாக உருமாறியிருக்கிறது.

நமக்கு அறிமுகமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் இறப்பதை மிகவும் சாதாரணமானதாக தினசரிகளில் இயற்கை அஞ்சலி விளம்பரங்களைப் பார்ப்பது போல் எடுத்துக் கொள்ளும் உணர்வை கரோனா வளர்த்துள்ளது. இதனை பெரும் ஆபத்தாக நம்மால் உணர முடியவில்லை. உணரத் தவறியிருக்கிறோம். இதுவரை வழக்கத்திலிருந்த வாடிக்கையான பழக்கமாகவழக்கமாக நமது முன்னோர் காலத்திலிருந்து இருந்து வந்த நடைமுறைப் பழக்கம் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதும், நம்பிக்கை தெரிவிப்பதும்தான். ஆனால், அந்த நிலையை எட்ட முடியாத தன்மைக்குக் கொண்டு சென்று நமக்கான இயல்பை கரோனா சிரித்துக்கொண்டே அழித்து வருகிறது.  

நமக்கு என்ன ஆனாலும், என்ன நிகழ்ந்தாலும்  அட, நண்பர் இருக்கிறார்கள். தினசரி நமது வீட்டுக்கு வந்து தினசரி படித்துத் தேநீர் குடித்துப் போவாரே அந்த பக்கத்து வீட்டுக்காரர் இருக்கிறார். தினசரி நம்மைப் பார்த்து சிரிப்பாரே அந்த எதிர்த்த வீட்டுக்காரர் இருக்கிறார் என்கிற நம்பிக்கைகளைக் கரோனா முடித்துக் கட்டியிருக்கிறது. யாராலும் எங்கும் செல்ல முடியவில்லை.  வேடிக்கை மட்டுமே பார்க்கும் வெற்றுப் பார்வையாளர்களாக  மாற்றியிருக்கிறது கரோனா.

கரோனா முடிவுக்கு வந்த பின்னர் நமது மனநிலைகளை நமது உணர்ச்சிகளை புத்துருவாக்கம் செய்து கொள்ள முடியுமா... அதற்கு வாய்ப்பிருக்கிறதா….யோசிப்பதற்கான நேரமிது.

முழு ஊரடங்கு முடிந்து அனைவரையும் பார்த்துவிட வேண்டும். அவர்களிடம் தினசரி பேசி  விட வேண்டும்... அவர்களிடம் வியாபாரம் செய்துவிட வேண்டும்... கடந்த மாதம் வாங்கிய கடனை அவர்களிடம் கேட்க வேண்டும், நாம் வாங்கிய கடனை அவர்கள் கேட்பதற்குள் கொடுத்துவிட வேண்டும்… நாம் இயல்பு கட்டாயத்திற்குள் நம்மைக் கொண்டு வர முடியுமா? கரோனா முடிவுக்கு வரட்டும், நமக்குள் அழிந்து,   கெட்டுப்போன உணர்வுகளை மீட்டுருவாக்கம் செய்துவிட முடியுமா? கரோனா ஆபத்தைவிடவும், நாம் உயிருடன் இருக்கும் ஆபத்தைவிடவும் நாம்  நம் இயல்புகளை இழந்திருப்பதுதான் மிகமிக அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது.

Tags : lessons Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT