சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப்படாத கதைகளும் காட்டப்படாத கதாபாத்திரங்களும்: அட்டக்கத்தி முதல் சார்பட்டா வரை

எஸ். மணிவண்ணன்

இட்லியாக இருங்கள் என்ற சொலவடை எத்தனை பெரிய அபத்தம். அது யாருக்கு சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. குழியில் ஊற்றினாலும் வெந்து உப்பி வெளியே வாருங்கள் என்ற உவமேயமும், எல்லா பக்கங்களும் ஒரே மாதிரியாக இருங்கள் என்ற உவமையும் வாசிக்க மட்டும் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால், நிதர்சனத்தில் அடியில் வைத்த சூட்டுக்கு ஏற்ப வெந்த தோசைகளாகத்தான் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் தமிழ் சினிமா எனும் தோசையின் ஒரு பக்கத்தை பார்த்து ருசித்துவந்தவர்கள் ’அட்டக்கத்தி’க்கு பிறகு மறுபக்கத்தின் சுவையை அறியத் தொடங்கியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மறுபக்கம் ’சார்பட்டா’ திரைப்படத்தில் மொறுமொறுவாகத் தொடங்கியுள்ளது. 

கலையின் தொடக்கமே அரசியல்தான். சினிமா கலையின் ஓர் அங்கம். அதில் ஆரம்பம் முதலே நாம் பரவலாக அரசியல் பேசி வருகிறோம். ஆனால் எந்த அரசியலுக்கானதாக அந்த கலை மாறியது என்ற கேள்வி காலம் செல்லச் செல்லதான் எழுந்தது.

அனைத்து தரப்பினருக்குமான அரசியல் கலையின் வாயிலாக பேசப்பட்டது என்றாலும், அது மற்றவர்களால் ஏற்கப்பட்டதா அல்லது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதா என்பதே கேள்வி.

தமிழ் சினிமாவில் அரசியல் திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டியிருந்தாலும், அதே கருத்தியலில் பயணித்துத் திரைப்படங்களை இயக்கும் படைப்பாளிகள் அவ்வளவாக உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

90 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் அரசியல் படம் என்றாலே பெரும்பாலும் மணிவண்ணன் மட்டுமே எல்லோருக்கும் நினைவுதட்டுகிறார். சினிமாவை தொடர்ந்து கவனிப்பவர்களும் செல்வமணி, வேலு பிரபாகரன், எஸ்.பி. ஜனநாதன், ராஜுமுருகன் போன்ற சில படைப்பாளிகளை மட்டுமே சினிமா வாயிலாக அரசியல் பேசும் படைப்பாளிகளாக விரல் விட்டு எண்ணுவார்கள். 

பொதுப்புத்தி அரசியல் படங்களை இயக்கும் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குநர்களிடையே பெரியாரிசம், கம்யூனிசம், தமிழ்த் தேசியம், இந்துத்துவம், பெண்ணியம் போன்றவற்றை இழையாகக் கொண்ட திரைக்கதைகளை கட்டமைத்து படங்களை இயக்கும் படைப்பாளிகள் தலைமுறைக்குத் தலைமுறை உருவாகிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால் அவர்கள் தீரத்தோடு அவற்றைக் கையாளவில்லையோ என்றுதான் தோனறுகிறது.

சினிமா அழகியலைத் தவிர்த்துவிடக்கூடாது என்பதற்காக சொல்ல வந்த அரசியல் கருத்தியலைத் தெளிவாக பேசாமலேயே முடிந்த திரைப்படங்களும் உண்டு. எடுத்துக்கொண்ட சித்தாந்தத்தைப் பேச வேண்டும் என்று சினிமாவுக்கு உண்டான அழகியலைத் தவறவிட்டு பிரசாரங்களாக மாறிப்போன படங்களும் உண்டு.

அரசியல் நிலைப்பாட்டுடன் திரை மொழியைச் சரிவிகிதமாகக் கையாளாத திரைப்படம் தேக்கமடைந்துவிடுகிறது. அதனை எடுக்கும் படைப்பாளியும் வணிகரீதியாகப் பின் தங்கிவிடும் நிலைதான் உள்ளது. இவ்வாறு பின் தங்கும் படைப்பாளிகள் ஓரிரு படங்களுடன் தேங்கிவிடும் சூழல்தான் படைப்புகளுக்கு உண்டான துரதிருஷ்டம். 

தமிழ் சினிமாவில் அரசியல் திரைப்படங்களை எடுத்தால் அதிக அளவிலான விமர்சனங்களையும், நேரடியான எதிர்ப்பையும், வணிக ரீதியான பின்தங்கலையும் எதிர்கொள்ள அஞ்சியே பெரும்பாலான கதைகள் திரைவடிவம் பெறாமலேயே நின்றுவிட்டன. திரைவடிவம் பெற்ற பின்பும், அவை வெளிவராத சூழலில் சிக்குண்ட அரசியல் படங்களும் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகாது சோதனை முயற்சியில் வெளிவந்த திரைப்படம்தான் அட்டக்கத்தி. புறநகர் பகுதி மக்களை பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்டு பகடி நாயகன் மூலம் காதல் மீது இருந்த புனிதத்தன்மையை நோக்கி கேள்வி எழுப்பிய படம். ஆனால் படம் முழுக்க நிராகரிப்பின் வலி நிழலாடிக்கொண்டே இருக்கும்.

அதுவரையிலான தமிழ் சினிமாவில் ரெளடிகளாகவும், சமூக விரோதிகளாகவும், கல்வியில் பின்தங்கியவர்களாகவும், திருத்தப்பட வேண்டியவர்களாகவும் காட்டியே பழக்கப்பட்ட சினிமாவிற்கு, அட்டக்கத்தி புதிய திரை மனிதர்களை அறிமுகம் செய்து வைத்தது.

அம்பேத்கர், அயோத்திதாசர், சாவித்ரிபாய் புலே ஆகியோரது பெயர்களும், படங்களும் சிறைகளிலும், நீதிமன்றங்களிலும் மட்டுமே காட்டி பழக்கப்பட்ட தமிழ் சினிமா, அம்மனிதர்களின் நிஜ வாழ்வின் தேவைகளிலும் அவர்களின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டியது.

சமூக பாதிப்புகளிலிருந்து உருவாகும் படைப்புகள்தான் மெருகேற்றாத உண்மையான வரலாற்றைத் தாங்கி நிற்கும் என்பதை அதன் பிறகு வந்த மெட்ராஸ் திரைப்படம் நிரூபித்தது. வடசென்னை மக்களை அரசியல்வாதிகள் கைப்பாவையாகப் பயன்படுத்திக்கொள்வதைப் படம் பேசியது.

இவ்விரண்டு படங்களையும் இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், ரஜினி போன்றதொரு பெரிய பிம்பம் கிடைத்தும், தனது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகாது இயக்கிய மூன்றாவது படம்தான் கபாலி.

தலித் அரசியலை மையமாக வைத்து எழுதப்படும் திரைக்கதைகள் வணிக ரீதியில் கல்லா கட்டாது என்ற தமிழ் சினிமாவின் எழுதப்படாத சரித்திரத்தை மாற்றி அமைத்தது. சினிமாவிற்கு சொல்லப்படாத கதைகளும், காட்டப்படாத கதாபாத்திரங்களும்தான் முக்கியமே தவிர மனிதர்கள் அல்ல.

மதவாதத்துக்கு எதிரான அரசியல் திரைக்கதையை ஒரு பெரிய நடிகரை வைத்தே இயக்கி, பொருத்தமான திரை அழகியலுடன் அதனை வணிக ரீதியாக வெற்றி பெறவும் செய்ததற்கு உதாரணமாய் நிற்கிறது காலா.

மக்களை அரசியல்படுத்த வேண்டுமென்றால் நேரடியாக அரசியல் பேச வேண்டும். சினிமாவை கருவியாகக் கொண்டு தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்துள்ளது சார்பட்டா பரம்பரை.

முன்பு சொன்னதுபோல சினிமா எனும் கலைக்கு சொல்லப்படாத கதைகளும், காட்டப்படாத கதாபாத்திரங்களும்தான் முக்கியமே தவிர வேறு எதுவும் அல்ல. கலைத்தன்மைக்கு சமரசமின்றி உருவாகும் எந்த அரசியல் படைப்பும் பலதரப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் தமிழ் சினிமாவின் அந்த இன்னொரு பக்கம்.

அந்தப் பக்கத்தில் தற்போது இளம் தலைமுறை படைப்பாளிகள் ஏராளமானோர் பயணிக்கத் தொடங்கியுள்ளது ஆரோக்கியமான சூழலையே காட்டுகிறது. எல்லோர் கதைகளும் ஆவணமாக்கப்பட வேண்டும். எல்லோர் அரசியலும் விவாதிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT