சிறப்புக் கட்டுரைகள்

பல் மருத்துவம்: வினோத  உண்மைகள்

பேரா. சோ. மோகனா

பல் மருத்துவம் என்பது பழமையான மருத்துவத் தொழில்களில் ஒன்றாகும். இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. கி.மு 7000களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன்கூட காணப்படுகிறது. இருப்பினும்கூட கி.மு  5000  வரை இது ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை. அதன் பின்னரே பல் மற்றும் பற்சிதைவு தொடர்பான தகவல்கள்/பதிவுகள் கிடைத்தன. சமீப காலமாகத்தான், பல்லின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

பல்மருத்துவத் துறையே வேறு. இது பொதுவாக மருத்துவத்தின் கீழ் முன்பெல்லாம் கொண்டுவரப்படுவதில்லை. பல் மருத்துவர் மற்றும் மருத்துவர் இருவரும் வேறு வேறு படிப்பை மேற்கொள்ளுகின்றனர். பெரும்பாலும் எக்ஸ் கதிர்கள் மற்றும் பல் பராமரிப்பு போன்றவை மருத்துவ திட்டங்களின் கீழ் இல்லை.

உலகின் முதல் பல் மருத்துவர்

கிமு 2686களில் எகிப்தில் வாழ்ந்த டாக்டர் ஹெஸி-ரா(Dr Hesy-Ra)  என்பவரே 2017, ஜூன் 18ல் பதிவிட்ட தகவலின்படி உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவர் ஆவார்.

பல் மருத்துவத்தின் தந்தை

வால்ஷ் ஜே. ஃபசார்ட்(Walsh J . Fauchard)

இந்தியாவில் பல் மருத்துவத்தின் தந்தை 

ரபியுதீன் அகமது. இவரே இந்தியாவில் நவீன பல் மருத்துவத்தின் தந்தை என்று நினைவுகூரப்படுகிறார்.

பழங்கால பல் மருத்துவம் பற்றிய வினோத  உண்மைகள்

கி.மு. 7000 முதல் பல் மருத்துவம் நடைமுறையில் உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

  • ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படும் வரை, பல்லில் ஏற்படும் குழிகள்/துளைகள் மற்றும் பல வேறுவகை பற்சிதைவுகள் எல்லாம் பல்லுக்குள் வளரும்  ஒரு ‘பல் புழு’ வாலேயே ஏற்படுவதாக கருதினர்.
  • பல் பராமரிப்புக்கான துவக்க கால சான்றுகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து விவசாய கிராமமான மஹர்கரில் (இப்போதைய பாகிஸ்தானில்) இருந்து கிடைத்துள்ளன. சுமார் 7,500 முதல் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒன்பது மனிதர்களின் 11 பற்கள் அங்கிருந்து கிடைத்து, தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இந்த பற்களில் கூர்மையான பொருட்களால் துளையிடப்பட்ட துளைகள் இருந்தன.
  • பண்டைகால சீனர்கள் வலிமிகுந்த பற்களைச் சுற்றி சிறிய காகிதத் துண்டுகளைக் கொண்டு மூடினார்கள். ஆனால், அந்த காகிதங்கள் அனைத்திலும் பிரார்த்தனைகள் மற்றும் மந்திரங்கள் இருந்தன.
  • பண்டைய கிரேக்கர்கள் பற்களைப் பிடுங்க நல்ல கூர்மையான இடுக்கி வைத்திருந்தனர்.
  • பண்டைகால கலாசாரங்களில் மக்கள் பற்களை சுத்தம் செய்ய மரங்களின் மெல்லிய கிளைகள்/குச்சிகள் அல்லது வேர்களை மென்று சுத்தம் செய்தனர்.
  • இடைக்காலத்தில், பற்சிதைவைத் தடுக்க, நாய்களின் பற்களை ஒயினில்  போட்டு  கொதிக்க வைத்து, பின்னர் அதனைக் கொண்டு வாய் கொப்பளித்தனர். இது பற்சிதைவு தடுக்கும் சிறந்த நிவாரணி என்று மக்கள் நம்பினர்.
  • சுமார்  5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் பற்பசையைப் பயன்படுத்தினர்.
  • இருண்ட காலங்களில் (கி.பி 400-1400) பலர் வேறொருவரிடமிருந்து பெறப்பட்ட பல்  ஒன்றை "பொருத்துவதன்" மூலம் ஒரு புதிய பல் வளர்க்க முடியும் என்று பலமாக நம்பினர். இதனால் தூக்கிலிடப்பட்ட குற்றவாளியிடமிருந்தும பல் பிடுங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
  • பிரபல ஸ்பானிஷ் கலைஞரான பிரான்சிஸ்கோ கோயா, “பல் வேட்டை" என்ற ஓவியத்தில் அவரது காலத்தின் பல் தொடர்பான ஒரு மோசமான வழக்கத்தை சித்தரிக்கிறார். சமீபத்தில் இறந்தவர்களிடமிருந்து திருடப்பட்ட நேரடி பற்களை பல் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளின் பற்கள் இருக்கும் இடத்தில் வைத்தனர்.
  • பண்டைய காலங்களில் இருந்த சில பொதுவான பழக்கங்கள் விநோதமானவை.அவை: 1. பல்வலி /பற்சிதைவுக்கு மருந்தாக  மண்புழுக்களை எண்ணெயில் கொதிக்க வைத்து அதனை பல்லில் மற்றும் எண்ணெய் சொட்டுகளை காதுகளில் விடுவது என்ற பழக்கம் இருந்தது. ௨2.மேலும் பல் வலியின்போது, உங்கள் தாடையில் ஒரு தவளையையும் வைத்து சேர்த்து பல்லை இறுக்கிக் கட்டுவார்கள்.
  • பண்டைக்கால எகிப்தியர்களில் செல்வந்தர்கள் மட்டுமே பல்வலி நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர்கள் மட்டுமே இனிப்புகளை வாங்க முடியும் என்ற பொருளாதார சூழல் நிலவியது. 
  • உலகில் அறியப்பட்ட முதல் பல் மருத்துவர்களில் எட்ரூஸ்கான்களும் அடங்குவர்.(இத்தாலியில் எட்ரூரியா(Etruriya) என்ற இடத்தில் வாழ்ந்தவர்கள். ஆனால் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கலாசாரத்தின் உச்சியில் இருந்தவர்கள்). இவர்கள் கி.மு .700 ஆம் ஆண்டில், பல்வேறு பாலூட்டிகளின் பற்களை எடுத்து அவற்றைச் செதுக்கி, அவற்றை மக்களிடம் பல்லுக்குப் பதிலாக, மனிதர்களிடம் அவர்கள்  சாப்பிட போதுமான வலிமையான பகுதி பாலங்களை உருவாக்கினர்.
  • ஆதி கால பற்சிதைவு என்பது முதலில் சுமேரியர்களால், பல் புழுக்கள்” என்று விவரிக்கப்பட்டது.
  • கி.மு. 2700 ஆம் ஆண்டில், சீன அக்குபஞ்சர் /குத்தூசி மருத்துவம் பல் வலிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.
  • பண்டைய காலங்களில், எலும்பு, இறகு, வெள்ளி அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை பல் குத்த/காது குடைய  மக்கள் பயன்படுத்தினர். இந்த வகை "பல்மருத்துவங்கள்" சிறந்த குடிமக்களால் கூட இலவசமாகப் பயன்படுத்தப்பட்டன. 
  • கி.பி. 1400 களின் பிற்பகுதியில் முதல் பல் துலக்குகளை கண்டுபிடித்த பெருமை சீனர்களுக்கு உண்டு.
  • ஆரம்பகால வேட்டையாடி சமூக  மனிதர்கள் அவ்வளவாக பல் மருத்துவ துறைக்குப் போயிருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு பல் மருத்துவர்கள்  பயன்பட்டிருக்க மாட்டார்கள். காரணம் அவர்களின் உணவின் தன்மை, புரதம் நிறைந்தது என்பதால். அதனால் அவர்களில் வெகுசிலருக்கே பற்குழிகள் இருந்தன. மேலும் பழங்கால நோயியலாளர்கள் மதிப்பீட்டின் படி சுமார் 14% வேட்டையாடிகளில்  பற்களில் எச்சங்கள் குழிவுகளின் சான்றுகளைக் காட்டியுள்ளன. பலவற்றில் எந்த ஆதாரமும் இல்லை.
  • ஆனால் சுமார்  10,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தின் வருகையால் இவை அனைத்தும் மாறிவிட்டன. விவசாயம் செய்த புதிய மனித உணவில் ஏராளமான தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பி இருந்தன. எனவே, இவை பற்களின் எனாமல் மேல் படிந்தது. பற்களை அழிக்கும் பாக்டீரியாக்களின் புகலிடமாக வாயை மாற்றியது.
  • சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து மீட்கப்பட்ட சான்றுகள், ஆரம்பகால மனிதர்கள் வில் துரப்பணியைப்/கூர் குச்சியைப் பயன்படுத்தி பல் வியாதிகளை குணப்படுத்தியதாகக் கூறுகின்றன. துரப்பணத் துண்டைச் சுற்றி வளைந்த ஒரு எளிய வில் மற்றும் சரம் பண்டைய பல் மருத்துவரை நோயாளியின் பற்களில் துரப்பணியை விரைவாக சுழற்ற அனுமதித்தது. அப்போது பல் பிடுங்கும்போது பயன்படுத்த நவீன மயக்க மருந்து இல்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பற்களைப் பிடுங்கும்போது வலியைத்  தாங்க வேண்டியிருந்தது.
  • மரப்பல் வாஷிங்டன்: அமெரிக்காவின் உருவாக்கத்துக்கு முதன்மையானவர்களில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டன் பல் மருத்துவ வரலாற்றிலும் கணிசமான பங்களிப்பைத் தந்துள்ளார். அவரின் பல் மருத்துவர் பால் ரெவரே தனது பல் சேவைகளை தனது செய்தித்தாளில் விளம்பரப்படுத்தினார்; வாஷிங்டன் தனது வாழ்க்கையின் பல காலகட்டங்களில் பலவிதமான பற்களை அணிந்திருந்தார் என டஃப்ட்ஸ் பல் மருத்துவத்துறையால் (Tufts Dental Medicine) தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 30 வயதிலிருந்து தொடர் பல் பிரச்சினைகள். பலவிதமான பொய்ப்பல்/மாற்றுப்பற்களைப் பயன்படுத்தினார். அவரது பற்கள் உண்மையில் எலும்பு, நீர்யானை தந்தம், மனித பற்கள், பித்தளை திருகுகள், ஈயம் மற்றும் தங்க கம்பி ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்டவை.?
  • அவர் மரத்தாலான பல்லைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அவரின் மரப்பல் உலகப் பிரசித்தம். அவரைப்பற்றி உலவும் தகவல்களில் ஒன்று அவர் பற்களில் அவர் மரத்தினால் ஆன பற்களை வைத்து இருந்தார் என்பதுவே  மரப்பல் பற்றி ஏராளமான தேடல், தகவல்கள் உள்ளன. அவர் காண்டாமிருகத்தின் பல்லைக் கூட வைத்திருந்தாக பதிவுகள் சொல்லுகின்றன.
  • பல்லுக்கு நகை போட்ட மாயன்கள்: உலகில், மனிதர்கள் ஆதிகாலத்தில் அணிகலன்களை கழுத்தில் அணிந்தனர். மனித இனம் பயன்படுத்திய முதல் நகை என்பது, நத்தையின் ஓடுதான். சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் நத்தையின் ஓடுகளைக்  கோர்த்து கழுத்தில் நெக்லசாக அணிந்திருந்தனர். ஆனால் பல்லுக்கு நகை பூட்டிய  மனிதர்கள் பற்றி தெரியுமா? சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் மாயன் நாகரிகத்தில், மாயன்கள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்  தங்களின் பற்களுக்கு, மரகதம், இரத்தினம், தங்கம் போன்றவற்றை, பல்லில் துளையிட்டு, பற்கள் உடையாமல் கன  கச்சிதமாக, துளை போட்டு நிபுணத்துவத்துடன் பொருத்தினர். பற்களுக்கு நகை போட்டு அழகு பார்த்தவர்கள் இவர்கள் மட்டுமே. அதுவும் ஆண் மட்டுமே  பல்லுக்கு நகை போட்டுக்கொண்ட மனிதர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT