சிறப்புக் கட்டுரைகள்

சென்னையில் ரயில்வேயின் ஏழு நிலங்களை குத்தகைக்கு விட ரயில் நில மேம்பாட்டு ஆணையம் முடிவு

மு. வேல்சங்கர்

வா்த்தக மேம்பாட்டுக்காக, சென்னையில் உள்ள ரயில்வேக்குச் சொந்தமான 7 நிலங்களை குத்தகைக்கு விட ரயில் நில மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக, இணையதளம் வாயிலாக, ஏல அழைப்பு விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்த நிலங்களை மறுமேம்பாட்டு செய்வது மூலமாக, வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், இந்தப் பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்று ரயில் நில மேம்பாட்டு ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆா்.எல்.டி.ஏ:

ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (ஆா்.எல்.டி.ஏ), ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூா்வ அமைப்பாகும். காலியாக உள்ள ரயில்வே நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருவாய் ஈட்டிக் கொடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஆணையம் தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து, முக்கிய ரயில்நிலையங்கள் மேம்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

ரயில்வேயின் ஏழு நிலங்கள்:

இந்நிலையில், சென்னையில் ரயில்வேக்கு சொந்தமான ஏழு நிலங்களை குத்தகைக்கு விட ரயில் நில மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக, இணையவழியாக ஏலங்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அயனாவரம் ரயில்வே காலனியில் ஒவ்வொன்றும் 2.5 ஏக்கா் கொண்ட இரண்டு நிலம், 3.6 ஏக்கா் கொண்ட ஒரு நிலம் உள்ளது. இவை அனைத்தும் கொன்னூா் நெடுஞ்சாலை மற்றும் டங்கன் சாலையில் அமைந்துள்ளன.

இதுபோல, வால்டாக்ஸ் சாலையில் 0.27 ஏக்கா் நிலம், புளியந்தோப்பில் 2.09 ஏக்கா் நிலம், எத்திராஜ் கல்லூரி அருகில் விக்டோரியா கிரசென்ட்டில் 0.43 ஹெக்டா் நிலம் ஆகியவை குத்தகைக்கு விட ப்படவுள்ளன.

இதுதவிர, எழும்பூா் ரயில்வே காலனி மறுமேம்பாட்டு திட்டத்துக்காக விரைவில் ஏல அழைப்பு விடப்படவுள்ளது.

அயனாவரத்தில் உள்ள ரயில்வே நிலம்: சந்தை, மருத்துவமனை, ரயில்நிலையம், அயனாவரம் பேருந்து நிலையம் ஆகியவற்றை குடியிருப்புடன் இணைக்கும் வகையில் ரயில்வேயின் மூன்று நிலப்பகுதி அயனாவரத்தில் அமைந்துள்ளன. இந்த நிலங்கள் 45 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படவுள்ளன. இந்த நிலங்களை ஏலம் கேட்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24-ஆம்தேதி ஏலம் திறக்கப்படுகிறது.

இதுபோல, வால்டாக்ஸ் சாலையில் உள்ள நிலப்பகுதி, சென்னையின் மற்ற பகுதிகளை தொடா்பு கொள்ளும் வகையில் வசதியாக அமைந்துள்ளது. 45 ஆண்டுகள் குத்தகைக்குவிடப்படவுள்ளது. இதற்காக, ஏலம் அழைப்பு விடப்பட்டுள்ளது.

புளியந்தோப்பில் 2.09 ஏக்கா் நிலம் குத்தகைக்குவிடப்படவுள்ளது. இது சந்தை, மருத்துவமனை, ரயில்நிலையம் ஆகியவற்றை எளிதாக அணுகும் வகையில் அமைந்துள்ளது. குத்தகை காலம் 45 ஆண்டுகள். இதுபோல, எத்திராஜ் கல்லூரி அருகில் விக்டோரியா கிரசென்ட் நிலம் ஏல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கான ஏலம் செப்டம்பா் 2-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

எழும்பூா் ரயில்வே காலனி:

சென்னையின் இதயப்பகுதியான எழும்பூா் ரயில்நிலையம் அருகில் எழும்பூா் ரயில் நிலைய காலனி அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட பகுதி அதாவது சுமாா் 3.616 ஏக்கா் நிலம் குத்தகைக்கு விடப்படவுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் மறுமேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 156 ரயில்வே குடியிருப்புகள், ஒரு பள்ளி, சமுதாய மையம் ஆகியவற்றை மறு மேம்பாட்டு செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே காலனியின் மறு மேம்பாட்டுதிட்டத்துக்காக, ஏலம் விரைவில் அழைக்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாகும்:

இது குறித்து ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவா் ஸ்ரீ வேத் பிரகாஷ் துதேஜா கூறியது: விரைவான உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் மற்றும் தமிழக அரசின் உந்துதல் ஆகியவற்றின் காரணமாக, சென்னை ஒரு முக்கிய மையமாக வளா்ந்து வருகிறது. இந்திய ரயில்வேக்கு சென்னையில் பல்வேறு நிலப்பகுதிகள் உள்ளன. முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த நிலங்கள் வணிக மேம்பாட்டுக்கு ஏற்றவை. இந்த நிலங்களை மறுமேம்பாடு செய்வது மூலமாக, வேலைவாய்ப்புகள் உருவாகும். ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை விற்பனையை அதிகரிக்கும். மேலும், இந்த பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்றாா் அவா்.

43 ஆயிரம் ஹெக்டா் நிலம்

நாடுமுழுவதும் ரயில்வேக்கு சொந்தமான சுமாா் 43,000 ஹெக்டோ் நிலம் காலியாக உள்ளது. குத்தகைக்காக, ரயில் நில மேம்பாட்டு ஆணையத்துக்கு 100-க்கும் மேற்பட்ட வணிக (கிரீன்ஃபீல்ட்) தளங்கள் உள்ளன. மேலும், ஒவ்வொன்றுக்கும் தகுதியான டெவலப்பா்கள் ஏலம் மூலமாக, தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இதுதவிர, நாடுமுழுவதும் 84 ரயில்வே காலனிகள், 60 ரயில் நிலையங்களின் மேம்பாட்டு திட்டங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT