சிறப்புக் கட்டுரைகள்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

கூத்தலிங்கம்

கவிதை, சொற்களால் கோர்க்கப்படும் ஓர் இலக்கிய வடிவமாக வெளித்தோற்றத்தில் தெரியக் கூடும். ஆனால், அது, இசையைப் போல நுண்ணுணர்வுகளின் சேர்க்கையில் நிகழ்வது என்பது இந்த இரண்டையும் ஒருங்கே அறிந்தோர் அறிவர்.

ஒரு அசாதாரண தருணம் கிளர்த்தும் பூரிப்பை, காதலிசைக்கும் ஆலாபனையை,  உள்ளம் தகிக்கும் துயரார்ந்த வலியை, உயிர் உருக்கும் மோகத்தின் நாதத்தை, உள்ளொளி துலங்கும் பக்தியின் ஆனந்தக் கசிவை இசைக்கருவி வழியாக மீட்டத் தெரியாமல், கையறு நிலையில் திகைத்து நிற்கும் உணர்வாற்றல் மிகுந்த ஒருவனிடம், ஆன்மாவின் இசை, கவிதையாகத் திறப்பு கொள்கிறது.

மார்கழியில், புலரி நிலம் அணைப்பதற்கு முன்பாகத் துயில் களைந்து, பனிசூழ் நெடுந்தடாக நீராடி, எட்டுத் திசைகளிலிருந்தும் வந்து நிறையும் தெய்விகப் பாசுரங்கள் செவியேற்று, வைபவத்தில் வீற்றிருக்கும் இறைவி இறைவன் தொழுது, பிரசாதம் பெற்று வீடு திரும்பி, திண்ணையில் அமர்ந்து கவிஞர் ரவிசுப்பிரமணியனின் கவிதைத் தொகுப்பைக் கையிலெடுத்து விரிக்கிறேன். 

'நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்' 

வடக்கின் பாதையில் நடக்கத் தொடங்கும் மலர்ச்சூரியன் தூவும் இளங்கதிர்கள் காற்றில் கதகதப்பைக் கிளர்த்த, என் கவிதை வாசிப்பு தொடர்கிறது. 

ரவிசுப்பிரமணியனின் இந்த ஆறாவது கவிதைத் தொகுப்பு, பக்தி இலக்கிய வாசிப்பின் மேன்மையான அனுபூதியை எனக்குள் நிறைத்தபடியிருக்கிறது.

தருக்கள் அடர்ந்த கோவில் குளக்கரை, விபூதி மணக்கும் பிரகாரங்கள், அகல் ஒளிகள் சுடரும் மண்டபங்கள், பக்தி நாதம் விரவிப் பெருகும் ஆனந்த வெளி...

இதுவுமல்லாமல் -

தொடர்வண்டியில் இசைக்கும் விழியற்றோர் பாடல்கள், திருநங்கைகளின் ஆலாபனைகள், மழையின் கீதங்கள் மற்றும் தொலையும் இசைக்குறிப்புகள் என இந்தத் தொகுப்பின் கவிதைகள் யாவும் ஆன்மிக வெளியின் கட்புலனாகாச் சரடில் கோர்க்கப்பட்டிருக்கும் விசித்திரம் நிகழ்ந்துள்ளது. 

தனக்கு நேர்ந்த கவிதைத் தருணங்கள் மற்றும் கவிதைக்குள் பங்காற்றும் மாந்தர்களின் நவ பாவனைகள் யாவையையும் ஒரு பெருஞ்சுடராக, நதியாக, பாடலாக, துயர நிழலசையும் நிலமாக, காதலின் நீர்மை மற்றும் காமத்தின் தகிப்பில் விரிவுகொள்ளும் ஆகாயப் பெருவெளியாக உருவகித்துவிடும் பாங்கு தன்னியல்பாகக் கைகூடி வந்திருக்கிறது. 

உண்ணப்படும் பழம் அல்லது தானியம் அருந்தப்படும் தேன் அல்லது ஒரு பானம் செரித்து, குருதியாகி சீர்மை ஒழுங்கில் உடலியக்கத்துடன் வேறுபாடற்று இயைந்து விடுவதுபோல, பலவகை அனுபவங்களில் முகிழ்க்கும் வினோதப் பேருணர்வு அழகான கவிதையாக உருப்பெறுகிறது. அவ்வகையில் பனுவலின் உண்மைத் தன்மையோடு ரவிசுப்பிரமணியனை மிகவும் அண்மைவயப்பட்டவராக ஒரு வாசகன் உணர்ந்துகொள்ளவியலும். 

தொகுப்பின் தொடக்கமாக அமைந்திருக்கும் 'நாதவெளி' என்னும் கவிதையைக்  கவிமொழியில் எழுதப்பட்ட குறுங்கதையாகவும் வாசிக்கவியலும். சொற்கள் இணைந்து காட்சிகளாக அபிநயித்துக் காட்டும் அசைவழகும் அதன் பின்னிசையாக வந்திணையும் ஓசைகளும் கவிதையின் நுழைவாயிலே பரவசப்படுத்துகிறது. 

ஒளிமறைத்து விளையாடும் செவ்வரக்கு மேகங்கள், கற்கோபுரச் சிலைகள் பார்க்கும் அரசமரத்துப் பறவைகள் என அசைவுறும் காட்சிப் பின்னணியில் ஓதுவார் குரல் மெலிதாய் ஒலிக்கும் இந்த மோனத்தின் மீதாக வந்துகவிகிறது நாதஸ்வர சுநாதம்:

சஹானாவின் குழைவுகளில்
துடிதுடிக்கும் சந்நிதிச் சுடர்கள் 
பித்தேறிய உணர்வெல்லாம் பேசுகிறது
சங்கதிகளில் 

இயற்கை கணந்தோறும் கலைச் செயல்பாட்டை நிகழ்த்தியபடியிருக்க,  கலைஞனும் ஒரு கலைச்செயலின் உச்ச பரவசத்தில் அவ்வியற்கையுடன் இணைந்து கலந்துநிற்கிறான். இயற்கையும் கலைஞனும் கொள்ளும் இத்தகைய ஒத்திசைவின் மோனம் பிரபஞ்சத்தை உன்னதமாக்கும் அழகை இந்தக் கவிதை உணர்த்துவதோடு அதன் அடுத்த நகர்வில் மற்றொரு வகையில் விசனம் கொள்கிறது. 

பரதமும் நாதமுமாக இயைந்து நிற்கும் இயற்கையையும் கலைஞனையும் காணுறாமல் செவியுறாமல் தங்களது சாரமற்ற பேச்சுகளிலும் சிரிப்புகளிலும் லயித்துக் கடந்துபோகிறவர்கள் ஏராளம். 

கலைஞனும், ஒரு மேன்மையான கலையைக் கண்டு கேட்டு இன்புறும் தனிச்சிறப்புமிகு மனிதரும் சாதாரண சனங்களைப் போலல்லாமல், பரிணாம  வளர்ச்சியடைந்த  உயர் பண்பாடு உடையவர்கள். ஒருவர் எத்தகைய சமூகப் பின்புலங்களில் பிறந்திருந்தாலும் இது பொருந்தும். 

இயற்கையும் கலைஞனும் தம் கலை அற்புதத்தை இத்தகைய தனிச்சிறப்புமிகு ஒற்றை ஆன்மாவிற்காக நிகழ்த்தியபடியிருப்பதாக இக்கவிதை நம்பிக்கையில் நிறைவு கொள்கிறது: 

சிற்பத்திலிருந்து வெளிவந்த பதுமையென
மலர்ச்சரத்தின் சுகந்தம் வீச
மண்டபத் தூணில் சாய்ந்தபடி 
எதிரே அமர்ந்திருந்தாள் பதின்மள்
இசைபயிலும் அவள் 
வாசிப்பின் முடிவில் 
பிரமாதமென சைகை காட்டி 
வியப்பு நலுங்கும் கண்களோடு 
பணிந்தொரு வந்தனம் செய்தாள். 

'அனுபூதி' என்ற அடுத்த கவிதையும் சங்கீதம் சார்ந்தே பேசுகிறது. இடமும், பொழுதும், பிற உயிர் ராசிகளும் கவிதைக்குள் காட்சிகளாக அசைய, கோவில் பிரகாரத் தூண் அருகில் அமர்ந்து விபூதிப் பூச்சுகளணிந்த, நடுத்தர வயதினன் கந்த சஷ்டி பாடுகிறார். 

பாடுபவனின் தோரணையைச் சொற்களின் வழியாகக் கண்முன் நிறுத்துகிறார்.

தெய்விகப் பாடலை நாவாலிசைக்கும் அவனது முகம், பாடல் வரிகளின் தன்மைக்கேற்ப அடையும், தோற்ற மாறுபாடுகளை வரிசையாகக் காட்சிப்படுத்தும் புனைவுத்திறன் கவிதையைப் படக்காட்சிகள் போல நகர்த்தி விரிக்கிறது. கண்ணீர்க் கசிவு, புன்முறுவல், சன்ன முகச்சுளிப்பு, மௌனம் நிலைத்த முக ரேகைகள் என அவனின் விதவிதமான பாவனைகளைக் காட்சி வடிவங்களாக்கும் நறுக்கான வரிகள். 

வள்ளி மணாளனின் காதுகள் எட்டும்வரை

பாட சங்கல்பமோ

என நிறைவெய்துகையில் அவனது உருகப் பாடும் குரலிலின் உச்ச ஸ்தானம் உணரவைக்கப்படும் அதிசயம் நேர்கிறது. 

சிலவரிகளில் கண்ணீர் கசிய 
ஓரிரு இடங்களில் புன்முறுவல் 
சிலதில் சன்ன முகச்சுளிப்பு
சட்டென மௌனம் நிலைத்து வாட்டும் ரேகைகள் 
விதவிதமாய் நிழலாடத் தொடர்கிறான் மறுபடியும்

அவன் முகமுரசி தரைசேரும் பழுத்த இலை குறித்த பிரக்ஞையற்று, தானே உருவாக்கிக்கொண்ட பக்தி ஆலாபனையின் உணர்வு வெள்ளத்தின் தனிமையில் லயித்து, 

விழி திறக்க விடாமல்
அவனைப் பாட வைப்பது எது

எனத் திகைத்தபடி இங்கேயும் ஓர் இசை ரசிகர் பாடுபவனுக்காகக் காத்திருக்கிறார், கைகளில் பிரசாதத் தொன்னை ஏந்தி. 

தாள்கள் மற்றும் நெகிழிகள் பொறுக்கும் சிறுவனைப் பற்றிய 'மென் முறுவல்' என்ற கவிதையில் அழுக்குச் சட்டை, விரித்துப் படுக்கும் வினைல் போஸ்டர், பழந்துணிப் போர்வை, குடிநீர் சேகரிக்கும் நசுங்கிய பிளாஸ்டிக் பாட்டில் ஆகிய துயரச் சித்திரங்கள் வழியாக அவனது தோற்றத்தை நிழலாட விடுவதோடு, சாலையோரம் பழம் விற்கும் கிழவியும் பூக்கள் வாசனையால் சூல்கொண்டு நிற்கும் மரமும் அச்சிறுவனுக்குச் சிதைந்த கொய்யாப்பழமும் உறங்க இடமும் தந்து உதவுவதைக் கவிதையூடே சொல்வதன் வழியாக அவன், எத்தகு பரிதாபம்மிகு அநாதைச் சிறுவன்! என்ற விவரிப்புகளின் தொடர்ச்சியாக அநாதைச் சிறுவனின் அன்றாட அவலத்தின் இருண்மையின் மீது சிறு கிரணத்தைச் சரிக்கிறது இக்கவிதையின் துயர் அழகியல்:

விசும்பலில் துடிக்கும் வாழ்வை 
ஊசிக் கம்பு கொண்டு குத்திக் குத்தி எடுத்து 
சாக்கில் போட்டுக் கொள்கிறான் 

குப்பை பொறுக்கும் சிறுவன் மகிழ்வடைந்து, அவனது இதழ்கள் பூரிப்பில் மலர்ந்துவிடும் விதமாக, இயற்கை அவனுக்காக ஒரு பரிசைக் கைக்குள் மறைத்துவைத்து, அன்றாடம் மாலைவேளைகளில் அதை அவனுக்குத் தருவதாக, ஒரு செறிவார்ந்த சிறுகதையின் உள்ளடக்கத்துடன் இக்கவிதை நிறைவுறுகிறது.

பெருந்தொலைவுப் பிரயாணத்தில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, கடந்துபோகும் வெளிக்காட்சிகளைக் கவனித்துக்கொண்டிருக்கையில் மைல் கற்கள் நிமிடத்துக்கு ஒரு தடவை நம்மை விட்டு விலகிச் செல்வதைப் போல, வாழ்க்கை ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு எளிதாகத் தாவி விடுகிறது. 'பிராய நதி' என்னும் கவிதை பதின்ம வயதின் பூரிப்பு மற்றும் வயோதிகத்தின் துயர்கலந்த தனிமை இரண்டையும் அருகருகே காட்சிப்படுத்துவதன் வழியாக ஒரே மரக்கிளையின் தளிரும் சருகுமாக  அவை அண்மைவயப்பட்டிருப்பதையும் அவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றமடைவதன் காலத்தை 'நதி' என்ற படிமம் கொண்டு குறியீடு செய்கிறார். நிகழ்காலத்தின் ஓட்டத்திலேயே மூப்பெய்தலின் நிலைமாற்றம் சட்டென நிகழ்ந்துவிடுவதை அடுத்தடுத்த கவிதைப் பத்திகளில் (stanza) யாத்திருப்பதிலிருந்து வயதேறலின் விரைவுச் செயல் அவற்றின் இயல்புகளோடு காட்சி வடிவங்களாக்கப்பட்டுள்ளது. 

கவிதையின் தொடக்கப் பத்திகள், கோயில் பிரகாரத்தின் மரம் மற்றும் காற்றசைப்பில் இறையும் பூக்கள், சருகுகள் என முன்குறிப்புகளுடன் தொடங்கும் கவிதை பதின்ம வயதின் உவகையைச் சொல்ல இரண்டு தோழிகளை உருவகித்துக்கொண்டது, அப்பருவத்தின் நிறங்களொளிரும் மலர்ச்சியைச் சொல்லவே. இருவரும் தொங்கட்டான் அணிந்து ஒரே வண்ணப் பாவாடை, தாவணி அணிந்திருப்பது அவர்கள் வயது, உள்ளக்கிளர்ச்சி மற்றும் உவகையில் ஒத்தவர்கள் என்பதையும் மறைபொருளாகக் கொண்டிருக்கிறது கவிதை: 

விழிவிரிவுக் கதைகளும்
விரலசைவுகளும் சிரிப்பும்
ஆடாத அபிநயங்களும் 
செல்லத் தட்டல்களில் ஒலிக்கும் 
வளையோசையுடன்
அழகொளிர நிகழ்கிறது உரையாடல். 

வயோதிகத்தின் சோகத்தைப் புலனுணர்த்த ஒளிப்படக் கலைஞரின் கலைநேர்த்தியுடன் சாம்பல் நிறம் மற்றும் தேய்நிலா இவற்றைக் காட்சி சட்டகத்துள் பின்னணியாக்குகிறார் கவிஞர்: 

சாம்பல் பூத்த வெளிச்சத்தில் 
பிறைநிலா குனிந்து பார்க்க 
போய்க்கொண்டிருக்கிறது
அந்தி மெல்ல அசைந்து அசைந்து

இக்கவிதையில் பதின்மத்தின் துள்ளலைச் சொல்லும் கவிதைப் பத்தி நளினமாக விரைந்து இயக்கம் கொள்வதையும் வயோதிகத் தனிமை துயர் காட்சியாகும் கவிதைப் பத்தி மெதுவாக அசைந்து நகர்ந்து செல்வதையும் நுட்பமான வாசிப்பில் உணரவியலும். 

உணர்வுகளின் நிறங்களை இசைஞன் தனது உள்ளொளியில் ஒத்திசையும் ஸ்வரங்களின் அதிர்வுகளால் வடிவப்படுத்துகிறான். காலைப் புதுஒளியின் தூய்மை, புல்லிதழில் குந்திய பனித்துளியின் மௌனம், தேனருந்தும் வண்டு உரசலில் பூ அடையும் சிலிர்ப்பு, அதிஅழகைக் காணுந்தோறும் உள்ளம் கொள்ளும் உவகை மற்றும் துயரில் கவியும் காரிருள், துரோகத்தின் தேள் கொட்டு இத்தகைய அரூப அதிர்வுகளை இசைஞன் தன் ஆன்மாவின் வெளிச்சத்தில் இசைப் பிரதிகளாக்கி விடுகிறான். இத்தகைய உன்னத உணர்வுகளின் சேகரமாகிய ஓர் இசைக்குறிப்பைத் தொலைத்துவிட்ட கையறு நிலையின் ஆற்றாமையால் வெளிப்படும் புலம்பல், ஓர் அதியற்புத கவிதையாக விகாசமடைகிறது.

சுழலும் கிராமபோன் வட்டத்தட்டின் மீதாக அதன் இசைத்தடங்களில் பயணிக்கும் ஊசிபோல இசைக்குறிப்பின் ஸ்வரங்கள் மேல் கீறிச் செல்லும் ரவிசுப்பிரமணியனின் கவிதை வரிகள், அந்த இசைக்கோர்வையைக் காட்சிகளாகவும் ஓசைகளாகவும் புலன் உணர்த்திவிடுகின்றன:

பாதங்களில் கசிந்து சூழும்
ஆற்று நீர்ப் புதுவரவாய் சில்லிப்பு

முன்னும் பின்னுமாய் தோய்ந்து அரற்றிய 
நிமிடங்கள் 

யாளித் தூணில் விழும் சூரிய ஒளியாய்
சில படிமங்கள்

பழைய ஆடியின் கலங்கல் காட்சிகளாய் 
தொன்ம ஓவியத்தின் ரூபங்கள்

மீட்டலின் அதிலாவகத்தில்
பாசி செழித்த பாறைகளில் நழுவிச்சென்ற 
மந்திர ஸ்தாயி ஸ்வரங்கள் 

முறுகிய பதத்தின் நாதம்

இசைஞனின் பரவச மோன லயத்தில் தொடுக்கப்பட்ட ஸ்வரங்கள் மற்றும் நாதம் இசைக்கருவிகள் வழியாகப் பொழிவதற்காகக் காத்திருக்கையில், கவிதையால் இடைமறிக்கப்பட்டு, அந்த அழகான இசை வடிவம் தகுந்த சொற்களிணைவால் மீட்டிக் காட்டப்படுகிறது. 

இசைக்குறிப்பைத் தொலைத்த, தன்னை மன்னிக்கும் ஒரு சங்கேதக் குறியீட்டையும், அந்த இசைச் சேர்மானங்களின் கோர்வைக்குள் தற்செயலாக அவன் உணர்ந்துகொள்வதாகக் கவிதை நிறைவடைகிறது. 

ஒருவர் தன்னை எல்லையற்று விரிவு கொண்டவராக உணர்தல் இரு விதங்களில் சாத்தியமாகிறது. முதலாவது ஆன்ம தர்சனத்தின் நித்யத்துவத்தில் மலர்ச்சியடைகையில். இன்னொரு வாய்ப்பு தூய அன்பின் உபாசகனாகி, இணைய விழையும் பேரழகின் சன்னிதானம், பிரார்த்தனையின் பெரும்பேற்றில், சட்டெனக் கண்முன் நிகழ்ந்து விடும்பொழுது. காதல், உடல் வேட்கையின் கீழ்நிலையில் அல்லாது தான் வேண்டி விளைந்த சௌந்தர்ய தர்சனம் ஆன்மிக அனுபூதியின் அருகில் நிறுத்துகிறது: 

பரிசுத்த நீரே 

என்னை மலர்த்திய நீராம்பலே 

துளசியின் மகத்துவமே

இத்தனை யுகங்களாய்

எங்கிருந்தாய்

'வாழ்வே' என்ற தலைப்பிலமைந்த முன் கவிதை தூய காதலின் ஆராதனையில், வான் நிமிர்ந்து சுடரும் யாக நெருப்பின் மாசற்ற ஒளியைக்  கவித்துவப்படுத்துகிறதென்றால், 'பெருந்திணைக்காரி' என்னும் கவிதை மோகப் பெருஞ்சுடரில் பஸ்பமாகி உதிரும் வேட்கையின் சாம்பலை, அதை நோக்கி இட்டுச் செல்லும் படிநிலைகளைக் கதையாடலாக்குகிறது. 

சம்போகத்தின் வேள்விக் குண்டத்தில் தீண்டல்கள் மற்றும் பேச்சுகள் சமித்தாகவும் நெய்யாகவும் வார்க்கப்பட, அது பேருருப் பெற்று வளர்ந்து வளர்ந்து பரவச நிலையின் சிகரம் தொட்டு, அது குற்றவுணர்ச்சியின் பள்ளத்தாக்கில் சட்டென சரிந்து வீழ்வதையும் அது தொடங்கும் விதம், அது இயக்கமடையும் ஒத்திசைவு, பொழிந்து தீர்த்து வெற்றிடத்தின் மௌனத்தை எய்துதல் என அமையும் இச்சீரான போக்கில் பல்லவி, அனுபல்லவி, சரணம் உள்ளடக்கிய இசைப்பாடலின் கட்டமைப்பு கொண்டுள்ளதையும் அழகான படிநிலைகளோடு இயக்கமுறும் இக்கவிதையின் தொடக்கம் சங்க இலக்கியச் சாயல் கொண்டது: 

குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கி 
தாமரை மலர்களையும் 
கெண்டை மீன் சாற்றையும் கொண்டுவந்த 
மருத நிலத்து விறலி 
ஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்று
கீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள் 

வன்சுழல் காற்று யானைத் திரள்கள் போல புகுந்து, மருத நிலத்தின் தென்னைகளையும் வீடுகளையும் இடறிக் கலைத்து சிதறடித்த பெருந்துயர் குறித்த 'கவிழ்ந்து கிடக்கும் தானியக் குதிர்கள்' என்னும் கவிதைப் புலத்தில் ஆவினங்கள், செம்மறிகள் மற்றும் நிவாரணத்திற்காகக் கையேந்தி நிற்கும் குடியானவர்கள், மெழுகுவர்த்திச் சுடரில் நிழல் சித்திரங்கள் காட்டும் சிறுவன், நெற்குஞ்சத்துடன் எடுத்த தற்படத்தைக் காணும் சிறுமி, ஒப்பாரி வைக்கும் பேரிளம் பெண் என அந்நிலத்திற்குரிய கதை மாந்தர்களைத் துயர் ஓலங்களின் பின்னணியில் காட்சிப்படுத்துவதன் வழியாகக் கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட அவர்களது சரிந்த வாழ்க்கை, மருத நிலத்தின் நிச்சயத் தன்மையற்ற வேளாண் தொழில் இவை சோக நிழல்களாக அசைவுறுகின்றன. 

தண்ணீருக்கும் அரிசிக்கும் 
பிஸ்கட்டுகளுக்கும் மெழுகுவர்த்திகளுக்குமாக 
நீள்கின்றன
நெல்லும் உளுந்தும் தெளித்த கரங்கள்

ஓடுகள் பறந்த வீட்டுவாசலில் தொங்கிய நெற்குஞ்சத்துடன் எடுத்துக்கொண்ட தன்முகப் படத்தை, சிறுமி தன் பழைய வளமிகு வாழ்க்கையின் இழந்த எழிலை நினைவூட்டிக்கொள்ளும் விதமாக அவள் பார்த்துக் கொண்டிருப்பதாக ச் சொல்லப்படும் 'மின்னூட்டம் கரைந்துகொண்டிருக்கும் அலைபேசி' எதன் படிமமாக வருகிறது?

இயற்கைப் பேரிடர்களாலும் அரசியல் தரகர்களாலும் கொள்ளைக்கார வணிக நிறுவனங்களாலும் சுரண்டப்பட்டும் வளங்கள் களவாடப்பட்டுக் கொண்டுமிருப்பதால் தன் வனப்பை இழந்துகொண்டிருக்கும் மருத நிலத்தின் எழிலார்ந்த பசுமையைத்தானே!

நிவாரண முகாமின்
மெழுகுவர்த்திச் சுடர் விழும் சுவரில் 
கைகளின் சைகைகளால் 
மருதநிலத்தின் நிழல்சித்திரங்கள் காட்டும் 
சிறுவனின் நிலத்திலும் ஒரு மரம் இல்லை 

ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில் நடந்துகொண்டிருக்கும்பொழுது அவரது முழு வாழ்க்கை நிகழ்வுகளையும் மனதினில் ஓட்டிப் பார்த்துவிடுவதென்பது, கணப்பொழுதில் முடிவடைந்துபோகும் மனித வாழ்க்கையின் நிலையாமை குறித்த துயர் தவிர வேறென்ன!

'இந்த மழைக்கு என்ன அர்த்தம்' கவிதைக்குள் நேச இருப்பில் இருந்த நண்பனின் பாடையைப் பின்தொடர்ந்து போகும் கூட்டத்தில், அவனது கடந்த காலம் நிழல் உருவங்களாக மனதில் அசைய, அவனுடனான வாழ்க்கைத் தருணங்கள் மீள்நினைவுகளாக மனக்காட்சியில் சலனிக்க, துயருடன் நடந்து போகும் ஒருவனின் கால்களை, தகனமேடை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கவிதை  வரிகளுக்குள் காண்கிறோம்.

இழப்பின் சோகம் அழுத்தும் கனம் அவனுக்குள்ளிருந்து கண்ணீராகப் பெருகி, விழி மதகில் மோதி நிற்க, நண்பனைக் குறித்த நற்கணங்கள், இடுக்கண் களைய அவன் ஆற்றிய பேருதவி, அவனிடம் பகிரப்படாமல் கையிருக்கும் மன்னிப்புகள் எனச் சுருள்சுருளாக நினைவுகள் அவிழ்ந்தபடியிருக்கையில் பாடைக்கு முன்னும்பின்னுமாக மலர்த் தூசிகள் இறைந்து சிதறுகின்றன.

சட்டென சன்னமாகத் தொடங்கி பிறகு வலுக்க ஆரம்பிக்கும் அம்மழை, மெதுவாக பளு ஏற்றமடைந்து பாரம் குறைந்தபடியிருக்கும் அவனது மன உணர்வுகளுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது.

சேகண்டிக்கும் சங்கொலிக்கும் மத்தியில் 
பனிவெய்யில் நாளின் பின்மாலையில்
ஒளியை வடிகட்டி நனைத்தபடி 
சன்னமாய் பெய்யும் இந்த மழை உனக்காகத் தானா

'மீட்பரில்லா இடர்' என்னும் கவிதையும் இசையின் தடத்தில் பயணிக்கிறது. 

அவள் நேர்ப்பேச்சில், தனது ஆவலை வெகுளித்தனத்தின் நற்குணங்களால் மறைத்துக் கொள்பவளாகிறாள். அவள் அவனுக்காகப் பாடும் குரல் குழைவில், தன் பெருவிருப்ப ரகசியத்தை, பிரிவின் தாபத்தை, கூடலின் விழைவை உணர்வின் தேனில் இழைத்துப் பாடும் த்வனியில் தன்னை அவனிடம் சமர்ப்பணம் செய்கிறாள். 

பாடச் சொன்னால் 
ம்கூம் ம்கூம் மென தலையசைத்து 
வெட்கத்தில் சிலிர்க்கும் நீ 
உணர்வின் லிபிகளை 
எப்படிக் குரலில் கொண்டு வந்தாய் 
பேசும்போது த்வனிக்கும் 
குழந்தைத்தனத்தை மறைத்துக்கொண்டு 

பெண்மையின் இவ்விசித்திரம்தானே படைப்பின் பேரழகு.

பிரபஞ்சப் பேரியற்கை தனது இச்சைகளைத் தனது படைப்புயிர்கள் வழியாகச் செயல்படுத்தி பூர்த்தி செய்துகொள்கிறது. மனிதரும், பிற உயிர் ராசிகளும் இறையாற்றலின் பெருவிருப்பத்தை நிறைவேற்றவே பிறப்பெய்துகின்றன. பற்றற்ற படைப்பு சக்திக்கு எல்லாமே லீலை. மனிதர்கள், மகிழ்வின் சுகிப்பில் வாழ்வின் மேல் எந்தப் புகாரும் சொல்வதில்லை; துயரின் கசப்பைச் சுவைக்க நேர்கையில் வானத்தை நோக்கி 'இறைவா ஏனிந்த விளையாட்டு?' எனக் கூக்குரலிடுகிறார்கள். தத்துவ விசாரம் தழைக்கிறது: 

இரவுகளைத் துடிக்கவிட்டு 
காலம் தன் விசித்திரங்களை எழுதிப்பார்க்க
நாமென்ன சிலேட்டா.

அநேக கவிதைகளின் உணர்வுக் கூறுகள் இசையின் அலகுகளால் ஸ்வரப்படுத்தப்படுதல் இத்தொகுப்பின் தனித்தன்மை பெற்ற அழகு. 

"இசை தரும் அனுபூதிக்குப் பக்கத்தில் கவிதையை நிறுத்தவே முயன்று கொண்டு இருக்கிறேன்" என இத்தொகுப்பின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் ரவிசுப்பிரமணியன். 

சொற்களால் அல்லாமல், மனதின் ரகசியப் பொக்கிச அறைகளில் பதப்படுத்தப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் வழியாகவும் அல்லாமல், ஒருவர் கடந்த காலத்திற்குள் நுழையும் நுட்பத்தை இசை இவருக்கு அருளுகிறது. 

பேரன்பு நிகழ்ந்துவிட்டிருந்த அற்புத தருணத்திற்குள் இசையின் துடுப்புகளால் நிகழ்காலத்தைப் பின்நகர்த்தி, அடைந்துவிடுகிறார். மேய்ச்சலில் திரியும் ஆவினங்கள், குரால்கள் மற்றும் மறிகள், நிலமெங்கும் குளிர்மிதக்கும்  வெளி, நிசப்தக் கீழ்வானின் கொன்றை ஜ்வாலையாய் சுடரும் சூரியன், மரக்கிளையில் இசையாய் இழையும் குயில், வட்டச் சுழற்சியில் ஏறித் தாழ்ந்து பறந்தலையும் புள்திரள், நதிக்கரைப் பாதையின் பன்னீர் மர நிழல் என கண்ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கும் உற்சவங்களோடு ஒரு நினைவாய் மட்டும் எஞ்சித் துடித்துக்கொண்டிருக்கும் கடந்த காலக் காதலின் பேருணர்வை இணைத்துப் பின்னும் சித்திரப் பூத் தையல் போலாகிறது அவன் மீட்டும் வயலினிசை: 

நினைவுக்கும் நிகழுக்கும்
இசையாலொரு சித்திரத் தையல் 
நீண்டும் வளைந்தும் மேலும் கீழும் 
முறுகும் ஸ்வரங்கள் அலைவதெல்லாம்
நின் நாமமெனும் ஒற்றை ராகத்தில்தான் 
காற்றில் நனைந்து முற்றிப் பழுக்கிறது நாதம் 
அதன் செழிப்பின் தயவில் தழைகிறேன்

சம்போகத்தின் இன்னிசையை அதன் ராக தாள ஆலாபனைகளுடன் விஸ்தரிக்கும் இன்னொரு கவிதையில், கூடலில் பிணைந்த இரு உடல்கள், வீணையின் முறுக்கேற்றப்பட்ட தந்திகளாக சேர்ந்தாற் போல் அதிர்வுற்று, போகத்தின் நாதத்தில் திளைத்து அடங்குகின்றன.

அமிர்தப் பிரசன்னம், உக்கிர மகிழ்வசைவுகள், காமத் தழல், செவ்வண்ணச் சிமிழ், ஆன்மமுத்தம் ஆகிய சொற்கள் பயன்பாட்டின் உச்சாடனங்களில், மோகப் பெருவிருப்பின் பேராற்றல் சன்னதம் கொண்டு ஆடும் மூர்க்கம், அந்த ஆட்டத்தில் தன்னைக் கரைத்து அசைவற்ற வெறுமையின் ஏகாந்தத்தில் தோய்கிறது: 

திகைத்துப் படர்ந்த சொற்களால் வசமிழந்து 
தீண்டலின் வருடல்களில் சிலிர்த்தணைத்து 
கூந்தலில் மகரந்தம் நுகர்ந்து 
எனக்குப் பிடித்த இதழோர மச்சத்தில் 
முத்திட்டுத் துவங்குதுன் அடவு 

இந்திய ஞான மரபு காதலை ஆன்மிகத்திற்கு முந்தைய படிநிலையாகப் பார்க்கிறது. கபீர் தன் கவிதையொன்றில், 'அன்பின் சந்நிதியில் சுடரும் அகல்விளக்குகளின் வரிசை போல என் கண்கள் திகழ்கின்றன' என்றும் அவர் இன்னொரு கவிதையொன்றில், 'என் நேசனே, வானத்தில் மின்னலின் ஒளிக்கற்றையாகப் பளீரிடுகிறான்' என்கிறார்.

இங்கு நம் கவிஞர், காதலியின் வீட்டு வாசலில் பூத்திருக்கும் ஒற்றை மலராகத் தன்னைக் காண்கிறார்.

இயல்பில், இதயத்தை மட்டும் சார்ந்து நிற்கும் ஆண்டாள் மற்றும் மீராவிற்கு அன்பில் தன்னைச் சமர்ப்பணமாகக் கரைத்தல் எளிது.

ஆனால், மூளையை முதன்மையாகக் கொண்டு இயங்கும் ஆண் ஒருவர், அத்தகைய அனுபூதியை அடைய கவித்வம் மற்றும் பெண்மை ஆகிய இரண்டு வாயில்கள் வழியாக தன்னை உருமாற்றம் செய்துகொண்டு நேசத்தின் சமர்ப்பணத்தில் தன்னை முற்றாக இழக்க வேண்டும்.

காதல் வயப்படும் ஒருவர், தனக்குள் எப்பொழுதும் முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும் "நான்... நான்.. நான்.." என்ற தன்மையிலிருந்து விடுபட்டு, பிறிதொருவரைப் பற்றி மட்டுமே சதா நினைவு கொள்கிறார். 'நான்' என்ற தன்முனைப்பு அழிகையில் அதனுடன் இணைந்தே வரும் எல்லாவித எண்ணங்களும் அழிந்துவிடுகின்றன. எண்ணங்களிலிருந்து விடுபட்டதும் அவனது 'தனி இருப்பு' மறைந்து போய், பிரபஞ்ச இயக்கத்தின் அங்கமாகிவிடுகிறான் அக்கணமே அவன்.

பிரபஞ்சப் பேரிருப்புடன் அவன் இயைந்துவிடுகையில், ஒரு மலர் முகிழ்க்கையில், அவனும் அதனுடன் சேர்ந்து மடலவிழ்கிறான், காற்று வீசுகையில் இலைகளினூடாக அவனும் சலசலக்கிறான். வானவில் தோரணத்தில் அவனும் ஒரு நிறமாகிறான். அன்பின் உபாசனையில் தெய்விகத்தின் வாசல் திறந்துகொள்கையில், இயற்கை அவனைத் தன்னில் மலர வைக்கிறது: 

மலர்க்  கொத்தாய் எனதன்பை ஏந்தி
உன் முன் நிற்க இயலவில்லை
வாசலில் இருக்கும் அந்த மரத்தைப் பார்
நின் இருப்பின் தயையில் பூத்துச் சிரிக்குமந்த 
ஒற்றை மலர் நான்தான்

இத்தொகுப்பின் கவிதை நெடுகிலும் அன்பின் வெளியை விரித்துச் செல்லும் கவிஞர், மனிதர், மரம், பறவை, நிலம், நாய், அணில், அநாதைச் சிறுவன், மழை, இசை என யாவற்றின் மீதும் நற்கருணையின் இனிய நிழலைப் படர விடுகிறார்.

ஆளற்ற பொட்டல் வெளி வெய்யிலில் தாறுமாறான மடங்கிய கிளைகளோடு தனித்து நிற்கும் மரத்தின் அருகில் ஆறுதலாக நின்று, பறவைகள் அற்ற அவ்வொற்றை மரத்தின் மீதும் நேசம் பாலிக்கிறார்.

மற்றுமொரு வாய்ப்பில், தெருவில் தடுமாறித் தடுமாறி விழுந்து நடக்கும் அநாதை நாய்க்குட்டியைச் சித்திரப்படுத்துகையில், இவருக்குள் தாய்மையின் பரிவு சுரக்கப் பெண்மையாய் கனிகிறார்: 

தாயின் முலைகளில் கனிவின் பால் சுரக்க
ஒரு கையில் மகனின் தலை கோதி
மறு கையால் குட்டியை ஏந்திக் கொள்கிறாள்

தொகுப்பில்  அடங்கிய பெரும்பாலான கவிதைகள் தன்னிலையில் வெளிப்பட்டு விரிவாக்கம் கொள்கின்றன:  குறுங்கதையாடல் பாங்கில் கவிதைகள் அமையப் பெற்றிருப்பினும் யாவற்றினுள்ளும் செறிவான கவித்துவம் அடர்ந்து, கண்ணெதிரே வீற்றிருக்கும்.

பிரபஞ்ச உயிர்த்தன்மை பரவசம் மேலிட்டு மகிழ்வில் தளும்புகையில் கவிதையும் பரவசமுறுகிறது; அந்த இயற்கை ஜீவிதம் வாட்டமுற்று நிற்கையில் கவிதைக்குள் துயர்மேலிடுகிறது.

இதில் - நட்பு, காதல், இசை, கருணை, காமம், சூழல் அழகு, அஃறிணைகள் மீதான பரிவு யாவும் ஒரே தத்வ தர்சனத்தின் பெருங்கடலில் சங்கமிக்கின்றன. பிறகு இவை எது எதுவென பிரித்தறிய இயலாவகையில், ஒன்றினுள்யொன்று இயைந்து, அம் மகா கடலின் எல்லையற்றதாகி விடுகிறது.

[ நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்  (கவிதைத் தொகுப்பு)
- ரவிசுப்பிரமணியன், போதிவனம், அகமது வணிக வளாகம், 12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி: 91 - 98414 50437, பக்கங்கள் : 132, விலை : 150]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT