சிறப்புக் கட்டுரைகள்

பள்ளிகள் திறப்பு: சவால்களும் பொறுப்புகளும்

22nd Aug 2021 03:54 PM | எஸ். மணிவண்ணன்

ADVERTISEMENT

கரோனா அலைகள் அடுத்தடுத்து வீசுவதால் அனைத்து தரப்பிலும் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதிக சேதத்தை சந்தித்தது பள்ளிப்படிப்பை இழந்த மாணவர்கள் தான்.

கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், பள்ளி செல்ல இயலாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மாணவர்கள் மிகப்பெரிய கேள்விக்குறியுடனே எதிர்காலத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனா இரண்டாவது அலையின் சீற்றம் குறைந்துள்ள நிலையில், மருத்துவக் குழுவினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே கரோனா முதல் அலையின் முடிவில் 2021 ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது கரோனா அதிகரிக்கத் தொடங்கியதால், மார்ச் 22-ம் தேதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. 62 நாள்கள் நடைபெற்ற வகுப்புகளில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும்  கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 2020 மார்ச் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கல்வி ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது மகிழ்ச்சி அளித்தாலும், கடந்த முறை நிகழ்ந்த தவறு இம்முறை நிகழ்ந்துவிடக் கூடாது என்ற அச்சமும் உடன் எழவே செய்கிறது.

பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம்:

கரோனா மூன்றாவது அலை குறிப்பாக குழந்தைகளையேத் தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை தமிழக அரசு எடுப்பதாக கருதினாலும்கூட, இதிலிருந்து காத்துக்கொள்வதன் முழு பொறுப்பும் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம்தான் உள்ளது. முன்பைவிட மேலாக அரசு இதில் முதன்மை பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்றே பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர். பள்ளியில் பயில்வதைப் போன்ற அனுபவ அறிவை ஆன்லைன் கல்வியில் பெற முடிவதில்லை என்பதும் அவர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. இத்தகைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு வழியின்றி அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டு பள்ளிக்கு அனுப்ப முன்வந்தாலும், அவர்களுக்கு முழு நம்பிக்கை அளிக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. 

இதையும் படிக்க | சென்னை அன்றும்..இன்றும்.. சுவாரசிய தகவல்கள்!

பள்ளிகள் திறப்பதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்திருந்தாலும்கூட அவை அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக பின்பற்றப்படுமா? அதனை அரசு எவ்வாறு உறுதி செய்யும்? ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து பெற்றோர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவது எப்படி? போன்ற கேள்விகளுக்கு அரசு பதில் காண வேண்டும்.

பள்ளிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? இல்லையா? என்பது குறித்து குழுக்களை அமைத்து அதன் மூலம் கண்காணித்து பள்ளிக் கல்வித் துறை தரவுகளைப் பெற வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

12 வயது சிறுவர்களுக்கு போடப்படும் சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி (ZYCOV-D) தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவை சந்தைக்கு வந்தால் அதனை அந்தந்த பள்ளிகளிலேயே செலுத்தப்படும் என அறிவித்து மாணவர்களை அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் செயல்பாட்டில் கூடுதல் கவனம்:

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தனியார் பள்ளிகள், பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். ஆன்லைன் கல்வியில் சவால்களும் பின்னடைவுகள் இருந்தாலும், வீட்டில் இருந்தவாறு பயில்வதில் உள்ள வசதிக்கு மாணவர்கள் பழகிவிட்டனர். தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதால், பள்ளி சூழலுக்கு மாணவர்களை உளவியல் ரீதியாகவே தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு உள்ளது.

பள்ளியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் ஒரு புறம் இருந்தாலும், கரோனா பேரிடருக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், ஒருவித அச்சம் அவர்கள் மத்தியில் எழவே செய்யும் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். தற்போது பள்ளிகள் திறக்கப்படுவது 9, 10, 11, 12-ம் வகுப்புகளை உள்ளடக்கிய பதின் பருவத்தினருக்குத்தான் என்றாலும், கரோனா பேரிடரில் வீட்டில் உறுப்பினர்களை இழந்த பதின் பருவ மாணவர்களிடையே கரோனா குறித்த அச்சம் எழாமல் இல்லை.

பள்ளிகளை தூய்மைப்படுத்தி கட்டட சுவர்களுக்கு புதிய வர்ணம் பூசி, வண்ணமயமான படங்களை வரைந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் மாணவர்களிடையே  அச்சம் நீங்கி நம்பிக்கை ஏற்பட வழியுள்ளது. கரோனாவால் பெற்றோரை, உறவினர்களை இழந்த மாணவர்களை வகுப்பறையில் கையாள்வதிலும் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

ஒட்டுமொத்தத்தில் வீட்டில் இருந்த சூழலைவிட பள்ளியில், வகுப்பறையில் அருமையான சூழல் ஏற்படும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதே உளவியல் மருத்துவர்களின் கருத்தாகவும் உள்ளது. 

மாணவர்கள் செயல்பாட்டில் குறைபாடு இருக்குமா?

கரோனா பொதுமுடக்கத்தில் பொருளாதார இழப்புகளை சந்தித்தவர்களைக் காட்டிலும், உயிரிழப்புகளை சந்தித்தவர்கள் அனைவரையுமே கரோனா பொதுமுடக்கம் பாதித்துள்ளது என்றே கூறலாம். இதில் மாணவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.

ஆன்லைன் கல்வி மூலம் கற்றல் திறன் பெரிதாக  பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அதுகூட இல்லாமல் படிப்புடன் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைம் முறையில் தேர்வுகள் எழுதி தேர்ச்சியடைந்த அனைவரையும் ‘கரோனா பேட்ஜ்’ என்ற வார்த்தைக்குள் கொண்டுவந்து பிரித்துக்காட்டுவது ஒரு சில மாணவர்களிடையே மனரீதியாக தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.    

பெரும்பாலும் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரிப் படிப்புகளில் நுழையும் மாணவர்களையும் 10-ம் வகுப்பு முடித்து தொழில்நுட்பக் கல்வியில் சேரும் மாணவர்களையும் ‘கரோனா பேட்ஜ்’ என்ற வார்த்தை மிகவும் பாதித்துள்ளது.

இதையும் படிக்க |சொன்னதைச் செய்தாரா அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஒருசில இடங்களில் மாணவர்களின் சான்றிதலும் இவ்வாறு வகைப்படுத்தப்படுவதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அடுத்தக்கட்ட கல்வி நோக்கிய மாணவர்களின் தன்னம்பிக்கை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது  என்பதே பெற்றோர்களின் வேதனை உள்ளது.

இதுபோன்ற காரணத்திற்காகவே பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும். வழக்கமான வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணும் நிலை உருவாகியுள்ளது எனலாம். இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அரசின் தலையாய கடமையாக உள்ளது.

அரசு செய்ய வேண்டியவை

கரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கைக்கு இடையே பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு தவிர்க்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதைப் போலவே, வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் பள்ளி வேளைகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை அறிவிப்பதன் மூலம், பொதுமக்களுடன் சேர்ந்து வருவது தவிர்க்கப்படும். இது தொற்று பரவலை கண்காணிப்பக்தை எளிமையாக்கும்.

கரோனாவில் வருவாய் இழப்பு போன்ற பல்வேறு காரணிகளால் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி அவர்களைத் தக்க வைக்க பள்ளிகளில் கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

தனியார் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளியின் மீது சளிப்பு ஏற்பட்டுவிடாத அளவிற்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமை. குறிப்பாக மாணவிகளுக்கு கழிவறை அமைத்து, அதற்கு பணியாளர் நியமித்து தூய்மையாக வைத்துக்கொள்வது, வசதியான வகுப்பறை, போதிய ஆசிரியர்கள், கல்வியைத் தாண்டி விளையாட்டு, நூலகம், பரிசோதனைக் கூடங்கள்  போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் ஆன்லைன் கல்வியைக் கூட எட்ட முடியாத மாணவர்களில் பலர் கூலி வேலைகளுக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளனர். பல குழந்தை திருமணங்களும் நடந்தேறியுள்ளன. அவர்கள் பள்ளிக்கு வருவதை அரசு எவ்வாறு உறுதி செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பருவப்பாட புத்தகங்கள் கூட சென்று சேராத இடங்களும் உள்ளன.

இவ்வாறு பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தேர்வை முன்னிருத்தி அவசர அவசரமாக பாடங்களை முடிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு இயங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்தாமல், தேர்வுக்குத் தேவையானவற்றை மட்டுமே குறிப்பிட்டு தேர்வு செய்து பிரிட்ஜ்-கோர்ஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பல தனியார் பள்ளிகள் இந்த வரம்பை மீறாமல் இருப்பதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பளிக்காத வகையில், அரசு தனது நடவடிக்கைகளை அனைத்து வகையிலும், பரவலாக்க வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் கூடுதல் பொறுப்புடன் ஒத்துழைக்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலையின் தொடக்கமாக இருந்தது கடந்த பிப்ரவரியில் பள்ளிகளில் பதிவான கரோனா தொற்றுதான். இம்முறை அனைவரும் கவனமுடன் செயல்பட்டால் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT