சிறப்புக் கட்டுரைகள்

'புற்றுநோயிலிருந்து மீள உறவினர்களின் அன்பும் ஆதரவுமே காரணம்'

22nd Sep 2020 05:00 AM | அ. ரவி

ADVERTISEMENT

புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து குணமடைய உறவினர்கள் அளித்த அன்பும் அரவணைப்பும் ஊக்கமுமே காரணம் என்றார் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர். 

புற்றுநோயை வெற்றி கண்ட அவர் கூறுகிறார்:

"கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. நோய் அறிகுறி தென்பட்டவுடன் மிகவும் கவலையுடன் உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டது என மிகவும் பயந்து போய்விட்டேன்.

"எனது கணவர், மகன், மகள் மற்றும் அனைத்து தரப்பு உறவினர்களும் எனக்கு ஆறுதல் சொல்லி சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு சிகிச்சைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே 6 மாத காலம் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

"அந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் நிறுவனர் சாந்தா அம்மையார், ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியே கவனித்து அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறித்த பயத்தைப் போக்கும் அளவிற்கு ஒரு தாயைப் போல கனிவுடன் அனைத்து சிகிச்சைகளும் மிகக் குறைந்த மதிப்பில் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். கீமோதெரபி, ரேடியோதெரபி ஆகியவற்றின் தாக்கத்தால் தலைமுடி மிகவும் கொட்டிப் போய்விட்டது.

"பின்னர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டு அவர்கள் கொடுத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு நோயின் தாக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு, இப்போது தலைமுடியும் நன்றாக வளர்ந்து விட்டது.

"உயிர்க்கொல்லி நோயான இந்த நோயை சவாலாக எடுத்துப் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் சாந்தா அம்மையார் அளித்த அன்பும், அரவணைப்பும், மற்றும் உறவினர்கள் அளித்த ஆக்கமும் ஊக்கமும் நோயிலிருந்து முழுமையாக விடுபட காரணமாக இருந்தது. 

"எனக்கு வாழ்வில் மறுவாழ்வு அளித்த சாந்தா அம்மையார், என் தாய்க்கும் மேலாக பாசத்துடனும், நேசத்துடனும் அணுகியது, நோயிலிருந்து விடுபட்டு மறுவாழ்வுக்கு காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.  அவரை உயிருள்ளவரை மறக்கமாட்டேன்" என்றார் அவர்.
 

Tags : roseday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT