சிறப்புக் கட்டுரைகள்

'புற்றுநோய்க்காக அச்சப்படத் தேவையில்லை'

22nd Sep 2020 03:38 PM | அ.அருள்ராஜ்

ADVERTISEMENT

புற்றுநோய் வந்துவிட்டால் அச்சப்படத்தேவையில்லை என்கிறார் கரூர் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் கதிரேசன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கேன்சர் என்றாலே நோயை குணப்படுத்த முடியாது என்ற பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்று. பொதுவாக ஆண்களுக்கு நுரையீரல்,  வாய்,  தொண்டை புற்றுநோயும்,  பெண்களுக்கு மார்பகம், கர்பப்பை புற்றுநோயும், இருபாலருக்கும் இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும். தமிழகத்தில் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை மையம் இல்லாமல் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர். ஆனால் ஏழ்மையில் நிலையில் உள்ள 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் ஆரம்ப நிலை சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமலும், நோயின் தோற்றத்தை அறிந்துகொள்ள இயலாமலும் நோய் முற்றிப்போய் மாண்டு விடுகிறார்கள்.

இந்த புற்றுநோயானது மனிதர்களுக்கு நான்கு நிலைகளில் காணப்படுகிறது. 1. ஒரு பக்கம் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு, 2. ஒரு பக்கம் மட்டும் பெரிய அளவில் பாதிப்பு, 3. உடலில் ஆங்காங்கே பரவிய நிலை. 4. உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துவது. இதில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு முற்றிலும் குணப்படுத்த முடியும். 4-ம் நிலை கொண்டவர்களுக்கு சிறந்த புற்றுநோய் மருத்துவர்களால் மட்டுமே நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இந்நோய் வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்பது தவறான தகவல். அனைத்து வயதினர்களையும் பாதிக்கும் இந்த நோய் அதிக வயதுடைய முதியவர்களை அதிகளவில் பாதிக்கும். ஏனெனில் வயது முதிர்வு காரணமாக உடலின் திசுக்கள் கட்டுப்பாட்டை இழந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோயின் நிலை மற்றும் அவர்களது உடற்தகுதி ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சையளிக்க இயலும். புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உடலின் எந்த ஒரு பகுதியிலும் உதிரப்போக்கு இருக்கும். மேலும் எடை குறைவு, கட்டி, பசியின்மை, மச்சத்தில் மாறுபாடு இருக்கும். இதனால் பெண்கள் மார்பக சுய பரிசோதனையை ஆண்டுதோறும் சோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ADVERTISEMENT

புற்றுநோய் வராமல் தடுக்க புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குடிப்பழக்கம், தவறான உணவுப்பழக்கம், பாதுகாப்பற்ற உடலுறவு, உணவு கலப்படங்கள், மாசுப்பட்ட 'சுற்றுச்சூழல், சில கிருமிகள் போன்ற காரணங்களால்தான் 90 சதவீதம் புற்றுநோய் மனிதனுக்கு ஏற்படுகிறது. இந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மட்டுமே புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். சிலர் வயது மற்றும் இனம் மற்றும் குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றால் 10 சதவிகிதம் பேர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

மேலும், ரத்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. உலகளவில் 100-க்கு 8 பேர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. லுக்கிமியா, மேலோமா, லிம்போமா போன்ற புற்றுநோய்கள் ரத்தத்துடன் தொடர்புடையவை. இவைக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ரத்த அணுக்களில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்த இயலும். இதற்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றார். 

Tags : roseday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT