சிறப்புக் கட்டுரைகள்

'ரோஸ் நாள்' நட்சத்திரம்: வாடாத ரோஜாவாக வாழ்ந்து மறைந்த மெலிண்டா ரோஸ்

கி.ராம்குமார்

வேகமாகச் சுழலும் உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் இலக்குகளை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றனர். சிலர் தங்களது சொந்த இலக்குகளை நோக்கியும், சிலர் தங்களின் இலக்குகளின் மூலம் மற்றவர்களுக்குப் பயன்தரும் வகையிலும் தங்களது பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குறித்து இந்த சமூகத்தில் என்னவிதமான பார்வை இருக்கும் என நம்மில் பலருக்கும் தெரியும். ஒரு பரிதாபத்திற்குரியவராக பார்க்கப்படும் பலருக்கும் மத்தியில் தன்னை ஒரு தன்னம்பிக்கையின் வடிவமாக மாற்றிக் கொண்டவரை குறித்து நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா?

இல்லை என்றால் கனடா வரைக்கும் நாம் சென்று வருவது பயனுள்ளதாக இருக்கும். பல நண்பர்களுக்கு உற்சாகமளிக்க நான் விரும்பினேன் எனக் கூறிய 12 வயதான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறாள்.

மிக இளவயதில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்தான் மெலிண்டா ரோஸ். 1994 பிப்ரவரியில் மெலிண்டாவிற்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது 12 வயதில் மீள முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவள் அவள்.

உரிய சிகிச்சைகள் இல்லாத அந்தக் காலத்தில் இரத்தப் புற்றுநோய் குறித்த பல்வேறு அச்சங்கள் நிலவி வந்தன. இரண்டு வாரம் மட்டும் உயிர் பிழைத்திருப்பார் என மருத்துவர்கள் கூற அவர்களின் வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கினாள் மெலிண்டா.

அவளுக்குப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தபோது, ​​அவள் தோள்பட்டை மற்றும் முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவளுக்கு மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை அவரின் ஆயுள் நீட்டிப்பிற்கு உதவியது.  

தன்னைப்போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கத் தனது தந்தை மற்றும் சகோதரரின் உதவியுடன் பிரத்யேக இணையப் பக்கத்தை உருவாக்கி அங்கு தனது புற்றுநோய்க் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டாள். 

தன்னைப் போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கரங்களையும் மெலிண்டா பற்றினாள். அவர்களுக்கு நம்பிக்கையளித்தாள். இன்னும் சொல்லப்போனால் மெலிண்டா வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு மெலிண்டாவின் கடிதங்கள் ஆயுளை நீட்டிக்கும் உறுதிப்பாட்டு ஆவணங்களாகத் தெரிந்திருந்தது என்பதில் வியப்பேதுமில்லை.

புற்றுநோய் அச்சப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதன் காரணமாக யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது என மெலிண்டா வலியுறுத்தினாள்.

“மருத்துவமனையில் நான் இருந்த காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகளைச் சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலோர் மிகவும் அச்சத்துடன் இருந்தார்கள், அதனால் என்னால் முடிந்தபோது, ​​அவர்களுடன் பேசினேன். அவர்களைக் குறைந்தபட்சம் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் உணரவைக்க முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும் நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும்போது புதிதாக கண்டறியப்பட்ட புற்றுநோய் குழந்தைகளைச் சந்திக்க முயலுகிறேன், அவர்கள் அனைவரும் எப்போதும் என் சிறப்பு வாய்ந்த நண்பர்களாகவே இருப்பார்கள்” என்ற அவளின் வார்த்தைகள் மனிதம் போதிக்கும் வரிகள்.

“இப்போது, ​​எனது பழைய நண்பர்கள் மட்டுமல்ல, எனது புற்றுநோய் குழந்தை நண்பர்களும் எனது புதிய நண்பர்களும் என்னை எப்போதும் அழைக்கிறார்கள், என்னால் முடிந்தால், நான் அவர்களுடைய சில வீடுகளில் ஓரிரு நாள்கள் தங்குவதற்குக்கூட செல்கிறேன்.”

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கலக்கமுற்ற குழந்தைகளுக்கு ஆறுதலளிக்கும் இடமாக மெலிண்டா இருந்தாள்.

தான் ஒரு புற்றுநோயாளி என்பது தெரிந்தும் பிறரின் கவலைகளைக் களைய முனைந்தாள் மெலிண்டா. மெலிண்டா வாழ்ந்த மிகச் சிறிய வாழ்வில் இந்த உலகத்திற்கு கொடுத்த செய்தி ஒன்றுதான் “எந்தக் கவலையையும் நாம் அனுமதிக்காமல் அதனால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதே.”

மெலிண்டாவின் ஊக்கம் மற்றும் ஆறுதலான வார்த்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகளுக்கு நிவாரணம் அளித்தன. அவர்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போது அவளுடைய வார்த்தைகள் அவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தன. தனது செயல்களின் மூலம், எண்ணற்ற உயிர்களில் ஊடுருவிப் பலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாள் மெலிண்டா.

தான் சந்திக்கச்சென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மெலிண்டா ரோஜாக்களை பரிசளித்தாள். மருத்துவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி இரண்டரை ஆண்டுகள்  வரை தன் ஆயுளை அவள் பெருக்கினாள். எனினும், இறுதியாக 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, மெலிண்டாவுக்குப் புற்றுநோய்ப் பாதிப்பு அதிகமாகித் தன் 15 வயதில் மறைந்தாள். அவளின் நம்பிக்கை வார்த்தையால் ஊக்கம் பெற்ற புற்றுநோயாளிகளின் மலர்களால் அவளின் கல்லறை நிரம்பி வழிந்தது. 

அவளின் அந்த அன்புமிக்க அந்த நடவடிக்கையை நினைவுகூர இன்று உலகமே ரோஜாக்களைப் பரிமாறிக்கொள்கிறது,

எந்தவொரு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் புறக்கணிக்காமல் அவர்களை சக மனிதராக நடத்தி, நோயிலிருந்து மீள உதவுவதே மனிதம் என்பதை உணர்த்தியுள்ளார் மறைந்த மெலிண்டா ரோஸ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT