சிறப்புக் கட்டுரைகள்

'மருத்துவர்களின் முயற்சியால் என்னைப்போல பலர் மீண்டு வந்துள்ளனர்'

எம்.மாரியப்பன்


நாமக்கல்: 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற வாசகம் அனைவரும் அறிந்ததே. எவ்வளவு வசதிமிக்கவராயினும் குணப்படுத்த முடியாத நோயில் சிக்கிக்கொண்டால் அவர் மீண்டு வருவது மறுபிறவி எடுப்பதற்கு ஒப்பானது. பணம் ஒருபுறம் கரைவது மட்டுமல்ல, உடலின் இயக்கங்கள் பழைய நிலையை எட்ட பல மாதங்களாகி விடும்.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் பலவகை இருந்தாலும் புற்றுநோய் உடலை உருக்கி உயிரை அழிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. 80 – 90 காலகட்டங்களில் புற்றுநோயை கருவாக வைத்தே பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றன. இதனால், புற்றுநோய் என அறிந்தாலே பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாவார்கள்.

ஆனால், கால மாற்றத்தில் நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள், மருந்துகள் புற்றுநோயிலிருந்து பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றி வருகிறது என்பதை மறுக்க முடியாது.

ரத்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் விவசாயியான வி. ராஜேந்திரகுமார் (52) கூறுகிறார்:

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் ராசிபுரத்தில் உடல் பரிசோதனை மருத்துவ முகாம் பிரபல தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. அதில், எனது மகன் எக்ஸ்ரே, இசிஜி, சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை செய்துகொண்டார். அவரை அழைக்கச் சென்றபோது, என்னையும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு நண்பர்கள் கூறினர். இரு மனதாக உடல் பரிசோதனையை செய்துகொண்டேன்.

சில மாதங்களுக்குப் பின் மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது அவர் ஏற்கெனவே எடுத்த எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றுடன் என்னுடைய எக்ஸ்ரேயையும் பையில் எடுத்துக்கொண்டு சேலத்தில் உள்ள மருத்துவர் ராமு என்பவரைச் சந்திக்கச் சென்றோம். அப்போது எக்ஸ்ரேயைப் பார்வையிட்ட மருத்துவர், இரண்டு உள்ளது, இது யாருடையது என மகனிடம் கேட்டார். அப்போது தந்தையின் எக்ஸ்ரே என தெரிவித்துள்ளார்.

பின்னர் மருத்துவர் மீண்டும் ஒரு முறை நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து வருமாறு தெரிவித்தார். நானும் அருகில் உள்ள ஓர் மையத்தில் எக்ஸ்ரே எடுத்து வந்தேன். அதை பார்த்த மருத்துவர், நுரையீரலில் கட்டி இருப்பதாக தெரிவித்தார். அதன்பின் இரண்டு, மூன்று மருத்துவமனைகளில் அந்த கட்டி என்னவென்று தெரிந்து கொள்வதற்காக பரிசோதனைக்கு சென்றேன். அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜன் சந்தோசம் என்ற நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணரைச் சந்தித்து மருத்துவ அறிக்கைகளை காட்டினேன். அதனைப் பார்த்த அவர் தைராய்டு புற்றுநோய்க்கட்டி என்றார். உடல் ரீதியாக எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. இருந்தபோதிலும் புற்றுநோய் என்ற வார்த்தை என்னை நிம்மதியிழக்க செய்தது.

இருந்தபோதும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுமாறு கூறினேன். ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு செல்லும்போதும் ரூ. 30 ஆயிரம் செலவாகும். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில், புற்றுநோய் செல்கள் ரத்தத்தில் கலந்துள்ளது தெரியவந்தது. 6 மாதங்களாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

பின்னர் புற்றுநோயை வளரவிடக் கூடாது என்பதற்காக, சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் சிறப்பு சிகிச்சை வார்டில் சேர்ந்தேன். இங்கு சிகிச்சை முறை என்னவென்றால், புற்றுநோய் பாதிப்பு செல்களை அழிக்க உடலில் அயோடின் செலுத்தி சிகிச்சைகளை வழங்குவர். இதற்காக அங்கு பிரத்யேக வார்டு ஒன்று உள்ளது. இதனை நியூகிளியர் மெடிசன் என கூறுகின்றனர்.

இந்த அயோடின் சிகிச்சை பெறுவதற்கு 40 நாள்களுக்கு முன்பாக எவ்வித உப்பு சார்ந்த உணவுப் பதார்த்தங்களையும், அயோடின் தொடர்புடைய மருந்துகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்தனர். அதேபோல் 6 மாதங்களுக்கு ஒருமுறை சிகிச்சை மேற்கொண்டேன். படிப்படியாக நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட்டேன். தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புற்றுநோய் பாதிப்பு தொடர்பான பரிசோதனையைச் செய்து கொள்கிறேன். இந்நோய் பாதிப்பில் இருந்து விடுபட ரூ. 10 லட்சம் வரையில் செலவிட்டுள்ளேன்.

உடல், மனம் ரீதியாக சற்று வலுவானவன் என்பதால் என்னால் மீள முடிந்தது. சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதித்த மோசமான நிலையில் உள்ள பலரைப் பார்த்தேன். அவர்கள் கதை இதைவிட வேதனையானது. பணம் ஒரு புறம்  செலவழிந்தாலும், மீண்டும் உயிருடன் வருவோமா என்ற கவலைதான் தினம், தினம் நம்மைக் கொல்லும்.

புற்றுநோயானது மூளை,  கல்லீரல்,  மண்ணீரல்,  நுரையீரல்,  இதயம்,  ரத்தம்,  மலத்துவாரம், சிறுநீரகம், குடல், உணவுக் குழாய், பிறப்புறுப்புகள் என பல இடங்களிலும் தாக்கக்கூடியது. புற்றுநோய் பாதிப்பால் பலர் இறந்திருந்தாலும், கடவுளின் கருணை, மருத்துவர்களின் முயற்சியால் என்னைப்போல் பலர் மீண்டு வந்துள்ளதை மறுக்க முடியாது.

இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. மருத்துவத் துறை வளர்ந்து விட்டது. அனைத்துக்கும் சிகிச்சை உள்ளது. இந்த ரோஸ் தினத்தில் என் போன்றோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என்றார் ராஜேந்திர குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT