சிறப்புக் கட்டுரைகள்

தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டால் நலம் பெறலாம்: மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள்

22nd Sep 2020 05:00 AM | ம. முனுசாமி

ADVERTISEMENT

உலக அளவில் தொற்றா நோய்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில்  புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது. புற்றுநோய்  செரிமான  மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலங்களில் தீமை செய்யும் ஹார்மோன்களை விடுவித்து உடல் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பில் 43 சதவிகிதம் மார்பகப் புற்றுநோய். புகையிலைப் பயன்பட்டால் 22 சதவிகிதம் பேருக்குப் புற்றுநோய் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்னதான் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டாலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து தற்போது நலமாக உள்ளவர்கள் சிலரின் கருத்துகள்:

உஷா எம். ஷா (69), கோவை:

ADVERTISEMENT

கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தோள்பட்டை, மார்பகப் பகுதிகளில் வலி இருந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றேன். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில்தான் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆரம்பநிலை என்பதால் கீமோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

2009 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து 8 மாதங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். 8 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட முதல் 4 நாள்கள் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை, வாந்தி போன்ற பாதிப்புகள் இருந்தன. அதன்பின் வேறு எந்த பாதிப்பும் இல்லை. கீமோதெரபி சிகிச்சையால் தலை முடி முழுவதும் கொட்டிவிட்டது. பின் ஆரோக்கியமான உணவு, உணவு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்ததால் தற்போது ஆரோக்கியமாக உள்ளேன். தற்போது அனைத்து வேலைகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். அச்சப்படாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டால் எளிதில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம்.

ரா.சரஸ்வதி (71), கோவை:

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்பகப் பகுதியில் வலி இருந்ததால் குடும்ப மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றோம். அங்கு ஸ்கேன் செய்தபோது புற்றுநோய் கட்டிபோல இருப்பதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளலாம் என சென்றோம். பரிசோதனையில் புற்றுநோய்க் கட்டி இருப்பது தெரியவந்தது. புற்றுநோய் என்றதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். பின் மருத்துவர்களின் நம்பிக்கைப் பேச்சால் தைரியத்துடன் எதிர்கொண்டேன்.

கட்டி சற்று பெரியதாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றனர். அறுவைச் சிகிச்சைக்குப் பின் 18 முறை கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஓராண்டு சிகிச்சைக்குப் பின் முற்றிலும் குணமடைந்தேன். தற்போது பூரண நலத்துடன் உள்ளேன். அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். எதற்கும் யார் உதவியையும் நாடுவதில்லை.

முதல் கீமோதெரபி சிகிச்சையின்போதே முடி உதிரத் தொடங்கியதால் அதற்காக வருந்தாமல் தன்னம்பிக்கையோடு நானே தலையை மொட்டை அடித்துக்கொண்டேன். சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக உள்ளதால் தற்போது திரும்பவும் முடி வளர்ந்துவிட்டது. அச்சம்தான் மனிதனுக்கு முதல் எதிரி, எனவே அச்சத்தைப் போக்கி தைரியத்துடன் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணம் பெறலாம்.

லி. சரஸ்வதி (58), நீலகிரி: தலையின் உச்சியில் பரு போன்று இருந்தது. பரு தானே என்று அலட்சியமாக இருந்ததால் பின் சீழ் வடிய ஆரம்பித்தது. இதனால் உதகையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது கோவையில் சென்று காட்ட அறிவுறுத்தினார். அதன்பின் 2016 ஆம் ஆண்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டோம். இங்கு வந்து பரிசோதித்தபோது புற்றுநோய்க் கட்டிபோல உள்ளதாகவும், உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. கட்டி அகற்றப்பட்ட இடத்தில், கால் பகுதியில் இருந்து சதை எடுத்து பதியப்பட்டது. பின் கடந்த 6 ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் நலமாக இருக்கிறேன்.

இதேபோல கடந்த 6 மாதங்களுக்கு முன் மார்பகப் பகுதியில் இருந்த புற்றுநோய்க் கட்டி கீமோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளது. 8 முறை கீமோதெரபி சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி முழுமையாக கரைக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளேன்.

புற்றுநோயைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை, காலத்தே எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்  என்கிறார்கள் இந்தப் பெண்கள்.

Tags : roseday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT