சிறப்புக் கட்டுரைகள்

புற்றுநோய் தொடர்பான அனைத்து வசதிகளும் இலவசமாகக் கிடைக்கும் அரசு மருத்துவமனை!

சி.வ.சு. ஜெகஜோதி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது நினைவாக அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அருகில் கடந்த 1969 ஆம் ஆண்டு 100 படுக்கை வசதிகளோடு கூடிய அரசு புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

இடப்பற்றாக்குறை காரணமாகப் பின்னர் கடந்த 1980 ஆம் ஆண்டு 290 படுக்கை வசதிகளோடு கூடிய அரசு புற்றுநோய் மருத்துவமனையாகக் காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டையில்  கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது ரூ. 120 கோடி மதிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியால் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய வளாகம் காரப்பேட்டையில் உள்ள மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்பட்டு பணிகள் முனைப்பாக நடந்து வருகின்றன.

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் இம்மையம் குறித்து தெரிவித்தது:

"தமிழகத்திலேயே புற்றுநோய்க்கு அனைத்துவிதமான நவீன கருவிகளோடும் அனைத்து வசதிகளோடும் செயல்படக்கூடிய மருத்துவமனையாக இம்மையம் உள்ளது. அரசு மருத்துவமனையாக இருப்பதால் அங்கு அறுவைச் சிகிச்சை முதல் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுவது பெரும் சிறப்பாகும். புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்கென சிறப்பு மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவ வல்லுநர்கள் பலரும் தியாக உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.

வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சையளிக்கப் பயன்படும் அதிநவீன லீனியர் ஆக்ஸிலேட்டர் என்ற கருவி.

அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு அறுவைச் சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை ஆகிய முக்கியமான சிகிச்சைகள் அனைத்தும் இம்மையத்தில் செய்யப்படுகிறது. இவை தவிர துணைப் பரிசோதனைகளான சதைப் பரிசோதனை, கதிர் ஊடுருவியல் துறை, பல் சார்ந்த புற்றுநோய் மருத்துவம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் குறித்த சிறப்புப் பிரிவு, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., மிக நவீனமான சி.டி. ஸ்கேன் கருவி  ஆகிய அனைத்து வசதிகளும் இம்மருத்துவமனையில்  உள்ளன.

கோபால்ட் கதிர்வீச்சு இயந்திரம் என்ற கருவி கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பக்க விளைவுகள் இல்லாததும், நோயாளிகளுக்கான சிகிச்சை நேரம் குறையக்கூடிய வகையில் பயன்படக்கூடிய பல கோடிகள்  மதிப்பிலான  மிக  நவீன கதிர்வீச்சு இயந்திரமும் இம்மருத்துவமனையில் செயல்பாட்டில் இருப்பது தனிச் சிறப்பாகும். 

நோய் கண்டறிவதற்கும்,கதிர் வீச்சு சிகிச்சைக்கும் பயன்படும் சி.டி.ஸ்கேன் கருவி

1969 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை இம்மையம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் பொன்விழாவை கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் பழனிசாமியால் இம்மைய வளாகத்திலேயே ரூ. 120 கோடி மதிப்பில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

கருப்பைவாய்ப் புற்றுநோய் உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்கும் பயன்படக்கூடிய பிரேக்கி தெரபி சிகிச்சை, என்டாஸ்கோப்பி, அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி, அனைத்துவிதமான புற்றுநோய்களுக்கும் அறுவைச் சிகிச்சை செய்ய உதவும் உயர்தரமான லேப்ராஸ்கோபி ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த வசதிகள் தவிர உள்நோயாளிகளுக்கு யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான சுயதொழில் பயிற்சிகளும் கற்றுத் தரப்படுகிறது. உள்நோயாளிகளுக்கு இலவசமாக 3 வேளையும் உணவு, சிகிச்சை முடியும்வரை தங்குவதற்கான வசதிகள் ஆகியனவும் உள்ளது. நோயாளிகளோடு உடன் வந்திருக்கும் உறவினர்களும் தங்கிக்கொள்ளும் விடுதி வசதியும் இருக்கிறது.

உள்கதிர் வீச்சு சிகிச்சையளிக்கப் பயன்படும் அதி நவீன பிரேக்சி தெரபி இயந்திரம்


கடந்த 2019 ஆம் ஆண்டு செய்த சிகிச்சை விவரங்கள்

கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் புதுநோயாளிகளாக வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 6,500 பேர், பழைய நோயாளிகளாக இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தம் 27 ஆயிரம் பேர். அறுவைச் சிகிச்சைகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 402 அறுவைச் சிகிச்சைகளும், 1,720 சிறு அறுவைச் சிகிச்சைகளும் நடத்தப்பட்டு நோயாளிகள் குணமடைந்திருக்கின்றனர். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாகவும் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுப் பல நோயாளிகள் நன்கு குணமடைந்துள்ளனர்.

இம்மருத்துவமனையில் மேமோகிராம்  பரிசோதனைக் கருவி உள்ளது. இக்கருவியின் மூலம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதை சில ஆண்டுகளுக்கு  முன்பே  அறிந்து கொள்ள  முடியும். இதேபோல கால்ப்போஸ்கோப்பி கருவி மூலம் கருப்பை வாய்ப்புற்றுநோய் வருவதையும் பரிசோதித்து முன்கூட்டியே அறிய முடியும். இவ்விரு கருவிகள் மூலம் ஏராளமான மக்கள் மிகுந்த பயனடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் வேகமாக பரவக்கூடும் என்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் நோயாளிகளுக்கு இருப்பதாலும் கரோனா நோய்த்தொற்றுக் காலத்திலும் தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட அரசு மருத்துவமனை இதுவாகும். இதே மருத்துவமனையில் எம்.எஸ்.சி.கதிரியக்க இயற்பியல் என்னும் மூன்றாண்டு பட்ட மேற்படிப்பும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT