சிறப்புக் கட்டுரைகள்

புற்றுநோய்க்கு வாய்ப்பளிக்கும் புகையிலை சாகுபடியை தவிர்த்துவரும் விவசாயிகள்

கே.பி. அம்​பி​கா​பதி

நூற்றாண்டுகளைக் கடந்து புகையிலை சாகுபடி செய்வதில் பெயர் பெற்ற வேதாரண்யம் பகுதி விவசாயிகள் இவற்றின் மூலம் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து, புகையிலை சாகுபடி முறையை தவிர்த்து வருவது சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் புகையிலை பயிர் சாகுபடி சிறப்பு பெற்றதாக இருந்து வந்துள்ளது. சதுப்பு நிலப்பகுதியைச் சார்ந்த கோடியக்கரை, கடி நெல்வயல், கருப்பும்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, பஞ்சநதிக்குளம், பன்னாள் என 20-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களில் அதிக அளவிலான பரப்பில் புகையிலை சாகுபடி செய்வது வழக்கம்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் புகையிலைப் பொருள்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்லாது இங்கிருந்து இலங்கை, மியான்மர்(பர்மா) போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

காவிரிப்படுகை பகுதியில் வேறு எங்கும் இல்லாத அளவில் நூற்றாண்டுகளை கடந்து வந்த இந்த புகையிலை சாகுபடி இந்தப் பகுதி விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் தொழிலாகவே இருந்து வந்துள்ளது.

தொடக்கத்தில் அதிக அளவான உற்பத்தி இருந்துவந்துள்ள நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஆண்டுக்கு 3000 டன் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இங்கு உற்பத்தியாகும் புகையிலையை மக்கள் வாயில்போட்டு மெல்ல மட்டுமே பயன்படுத்துவதால் இதனை வாய்ப்புகையிலை என்றே அழைக்கின்றனர்.

இதனால், ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு பிரதான வாழ்வாதாரமாகவும், ஆண்டுக்கு 140 நாள்கள் முழுநேரமும், 30 நாள்கள் பகுதி நேரமாகவும் வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

மேலும், புகையிலையை பொட்டலம் போட்டு சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், புகையிலையின் உலர்த்தப்பட்ட தண்டுப் பகுதியில் இருந்து மூக்குப்பொடி போன்றவை தயாரிப்பதன் மூலமும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்தன.

இந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் அரசே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கி, சந்தை வாய்ப்பும் பெற்றுத் தந்தன.

காலப்போக்கில், 2001-ல் அரசு கொண்டு வந்த புகையிலை தடைச் சட்டம் போன்ற பல்வேறு காரணிகளால் புகையிலை சாகுபடி உற்பத்தி பரப்பு குறைந்து வந்தபோதிலும், லாபம் தரும் பயிராக இருந்ததால் அதனை விரும்பி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறையவில்லை.

அதிகரித்து வரும் புற்றுநோய்

இந்த நிலையில், மற்ற பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் பகுதியில் வேதாரண்யமும் உள்ளதாக தெரிய வந்தது.

இதையடுத்து, ஆய்வுகள், தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

வாய்ப்புகையிலையை மெல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதும், இவை புகையிலையில் உள்ள நச்சு சாகுபடியின்போது நீர், நிலத்தில் கலந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இதனிடையே, புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக புகையிலை இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. லாபம் தரும் பயிராக இருந்தாலும், புகையிலையால் பாதிப்புகள் ஏற்படுவதை விவசாயிகள் விழிப்புணர்வால் உணர்ந்துள்ளனர்.

இதனால், படிப்படியாக குறைந்து வந்த புகையிலை உற்பத்தி பரப்பு தற்போது கணிசமான அளவில் குறைந்து வந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அடையாளம் தெரியாமல்கூட போகலாம்.

இந்தப்பகுதியில் புகையிலைக்கு மாற்றாக மல்லிகைப்பூ சாகுபடி, மாங்காய், நிலக்கடலை போன்ற பயிர்களை விவசாயிகள் மேற்கொள்ள முனைப்புக் காட்டி வருகின்றனர்.

லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படாமல் சமூக நலனுக்கு எதிராக மாறியுள்ள புகையிலையை சாகுபடி செய்வதை விவசாயிகளே தவிர்த்து வருவது ஆரோக்கியமான தொடக்கமாக மாறியுள்ளது. இந்த மனமாற்றம் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT