சிறப்புக் கட்டுரைகள்

உணவுப் பழக்கங்களால் வரும் உணவுக்குழாய்ப் புற்றுநோய்: லேப்ராஸ்கோபி சிகிச்சை

22nd Sep 2020 05:00 AM | ம. முனுசாமி

ADVERTISEMENT

மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் உணவுக்குழாய் புற்றுநோய் முதல் ஐந்து இடங்களுக்குள் வருகிறது. மரணத்தை உண்டாக்குவதிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் உணவுக்குழாய் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புற்றுநோய் மரபுவழியைவிட உணவுப் பழக்கவழக்கங்களாலேயே அதிளவில் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைத் திரும்பத், திரும்பப் பயன்படுத்தி சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் உப்புத்தன்மை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் போன்றவையும் உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கு காரணங்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், புகையிலைப் பொருள்கள் பயன்பாடு, மதுப்பழக்கம் ஆகியவற்றாலும் இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுகிறது. உணவு விழுங்குவதில் சிரமம், ரத்த வாந்தி, கருமை நிறத்தில் மலம் கழித்தல், தானாக உடல் எடை குறைதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும் (இவற்றில் ஏதேனுமொன்று இருப்பதாலேயே புற்றுநோய் என்றும் கருதிவிடக் கூடாது). பழங்கள், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோய் வருவதை தவிர்க்க முடியும்.

ADVERTISEMENT

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அறுவைச் சிகிச்சை இல்லாமல் புற்றுநோய்க் கட்டியைக் கரைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புற்றுநோய்க் கட்டி பெரி அளவிலான பின்பே சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவதாகவும், அதன்பின் அறுவைச் சிகிச்சை செய்தே அகற்ற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவுக் குழாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்து தற்போது நலமாகவுள்ள கரூரைச் சேர்ந்த பா.தமிழரசி (58) கூறியதாவது:

"ஒரு மாதத்துக்கும் மேலாக உணவு உட்கொள்ள முடியாமலும், அடிக்கடி வாந்தி பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்தேன். தினமும் இதனால் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தேன். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றேன். பரிசோதனையில் உணவுக்குழாயில் புற்றுநோய்க் கட்டி இருப்பது தெரியவந்தது. கட்டி சிறிய அளவில் இருந்ததால் லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

"தொடர்ந்து லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் உணவுக்குழாயில் இருந்து புற்றுநோய்க் கட்டி கரைக்கப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்குப் பின் பூரணமாக குணமடைந்து நலமாக உள்ளேன். தற்போது பழைய மாதிரி உணவு உட்கொள்ள முடிகிறது. வாந்தி போன்ற வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆரம்ப நிலையில் சென்றதால் அறுவைச் சிகிச்சை இல்லாமல் புற்றுநோய் கட்டி முழுவதும் கரைக்கப்பட்டுவிட்டது" என்றார் தமிழரசி.

Tags : roseday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT