சிறப்புக் கட்டுரைகள்

மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு புத்துணர்வூட்டும் யோகா ஆசிரியை

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர், தனது தளராத தன்னம்பிக்கையினால் தொடர்ந்து யோகா பயின்று, இப்போது அதை பயிற்றுவிக்கும் ஆசிரியையாக உள்ளார்.

மேலும், தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றுப்படுத்துநராகவும் இருந்து மன அமைதிக்கும், எதையும் எதிர்கொள்கிற ஆற்றலுக்கும் வழிகாட்டி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே உள்ள திருநயினார்குறிச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீலதா ஸ்ரீகுமார் (61), இவருடைய வீட்டுக்குள் நுழைந்ததுமே பெண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவர்களில் சிலருக்கு ஆலோசனை கூறுகிறார். சிலரிடம் ஆறுதலாகப் பேசுகிறார்.

'உங்களையெல்லாம்விட வாழ்வில் விரக்தியின் விளிம்பில் இருந்தவள் நான். ஆனால் இன்று இங்கு மன திடத்தோடு நிற்கிறேன்' என தன் சொந்த வாழ்க்கையையே அனுபவப் பாடமாக முன்வைக்கிறார் வாழும் கலை மையத்தின் யோகா ஆசிரியை ஸ்ரீலதா ஸ்ரீகுமார்.

மேலும் அவர் கூறுகிறார்: 'என் கணவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அதனால் பணி காரணமாக இந்தியா முழுவதும் பல பகுதிகளிலும்  குடியிருந்தோம். சிறுவயதிலிருந்தே நான் உடல் ரீதியாக பல
சுகவீனங்களைத் தாங்கி, வாழ்வின் இறுக்கமான சூழலிலேயே வாழ்ந்தேன். நான் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளேன்.

கல்லூரிக்குச் சென்று படித்திருந்தாலும் எனக்குள் ஏதோ ஒரு பயமும், விரக்தியும் துரத்திக் கொண்டிருந்தன. அது எதனால் என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னுள் ஏதோ ஓர்  இனம் புரியாத தயக்கம் இருந்தது. வீட்டுக்கு யாரும் வந்தால்கூட வாய் திறந்து பேசமாட்டேன். அது பல நேரங்களில் என்னைப் பற்றிய தவறான புரிதலைக்கூட உருவாக்கியிருக்கும்.

திருமணத்துக்குப் பின்பு குழந்தைப்பேறும்கூட சிக்கல் ஆனது. 4 முறை கருச்சிதைவு ஆனது. அதன் பின்னர் 5 ஆவதாக பிறந்தவன்தான் என் மூத்த மகன் ஸ்ரீஜித். இப்போது மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்கின்றார்.

பிரசவத்தைத் தொடர்ந்து முகுகு வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை என வாழ்வின் பாதி நாள்கள் படுக்கையிலேயே சென்றது. அத்தனை நோய்களும் சேர்ந்து, சொந்த குடும்பத்தினர் மீதே நான் கோபத்தை காட்டி, எரிச்சல்படும் அளவுக்கு சென்றது.

இதனிடையே எனது 40 வயதில், கடந்த  2000 ஆம் ஆண்டில் எனக்கு மார்பகப்  புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது நாங்கள் கோவையில் இருந்தோம். அங்கு சிகிச்சைகள் தொடங்கின. பின்னர் திருவனந்தபுரம் புற்றுநோய் சிகிச்சை
மையத்தில் சேர்ந்து அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். 2001 ஆம் ஆண்டில் மன அழுத்தம் தாங்க முடியாமல், வாழ்வில் விரக்தியின் உச்சத்தில் இருந்தேன்.

அப்போது  யோகா பயிற்சி பெறச் சேரும்படி மருத்துவர் வலியுறுத்தினார். அதன்படி யோகா பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு நான் பல்வேறு யோக கலைகளைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக மூச்சுப் பயிற்சி, சுதர்சனகிரியா என்ற பயிற்சியின் மூலம் உடல்ரீதியான சில மாற்றங்களை என்னால் உணர முடிந்தது.

யோகா பயிற்சியால் என் மனம் லேசானதை உணர்ந்தேன். எதையும் 
எதிர்கொள்ளும் ஆற்றல் உருவானது. அந்த மனப்பக்குவமே, எனக்கு உடல் பக்குவத்தையும், ஆரோக்கியத்தையும் தந்ததை உணர முடிந்தது. எனக்குள் இருந்த மன இறுக்கங்களை யோகாவும், அமைதியான தியானமும் சீர்படுத்தின.

என்னுடைய பயம், இறுக்கம் என அத்தனையும் என்னை விட்டு போயிருந்தது.
தொடர்ந்து யோகாவில் ஆர்வம் அதிகரித்தது. இடைவிடாமல் யோகா கலையை தொடர்ந்தேன். 2014 ஆம் ஆண்டில் வாழும்கலை மையத்தில் யோகா ஆசிரியையாக ஆனேன்.  குமரி மாவட்டத்தில் திங்கள்சந்தை மையத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மையத்திலும் யோகா ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன். அனைவருக்கும் எனது வாழ்க்கையையே பாடமாக்கி, அனுபவ ரீதியாக பிரச்னைகளை எதிர்கொள்ளுவது குறித்து பயிற்சியில் பேசுவேன். உடல் நலமின்மையால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாமானிய பெண்ணான நான் மீண்டு வந்த விதத்தை, மனதை ஒருமுகப்படுத்திய விதத்தைக் கூறுவது பிறருக்கும் பயன்படுவது ஒரு மன நிறைவையும் தருகிறது.

இதைக் கேட்டுப் பலரும் ஆறுதல் அடைந்து, நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்வதாகத் தெரிவித்தனர்.  நானும் இப்போது மார்பகப் புற்றுநோய், அச்சப்பட எதுவுமே இல்லை என பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறேன்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்திலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகிறேன். என்னிடம் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூரத்தில் உள்ளவர்களும்கூட ஆன்லைனில் யோகா கற்று வருகிறார்கள்.

நான் இன்று உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு யோகா மூலம் மனதைத் திடப்படுத்தியதுதான் காரணம். வாழும்கலை மைய குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி ஆசியுடன் என் பயணம் தொடர்கிறது" என்றார் அவர்.

61 வயதிலும் தன்னம்பிக்கை மிளிர பேசும் இவர் பெண்களுக்கு குறிப்பாக புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு ஒளிக்கீற்றாய் திகழ்கிறார் என்றால் மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT