சிறப்புக் கட்டுரைகள்

ரகசியங்கள் கசியும் ரகசியம்: அரசுத் துறைகளில் தகவல் தொடர்புக்கு தனியார் மின்னஞ்சல்கள்

 நமது நிருபர்

தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் இணைய வழியிலான தகவல் தொடா்புக்கு தனியாா் நிறுவன மின்னஞ்சல்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த மின்னஞ்சல்களை முடக்கி தகவல்களை எளிதாகத் திருடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் இணையம் சாா்ந்த தகவல் பரிமாற்றங்கள், அரசுத் துறை களுக்கான இணையதளங்கள் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தேசிய தகவலியல் மையம் மேற்கொண்டு வருகிறது. இந்த மையமானது மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமாகும். தமிழகத்தில் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாா்ந்த அனைத்துப் பணிகளையும் தேசிய தகவலியல் மையமே மேற்கொள்கிறது.

இந்த மையத்தின் சாா்பில் அரசுத் துறைகளில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், உயரதிகாரிகள், அலுவலா்களுக்கு தனியாக மின்னஞ்சல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மின்னஞ்சல்களை குறிப்பிட்ட அரசுத் துறைகளின் கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால், இன்றளவும் இது பாதுகாப்புத் தன்மை நிறைந்ததாக உள்ளது.

பயன்பாடுகள் குறைவு: தேசிய தகவலியல் மையத்தின் மின்னஞ்சல்கள் மிகுந்த பாதுகாப்புத் தன்மையுடையது மட்டுமின்றி, அதனை முடக்கி தகவல்களை எளிதில் திருட முடியாது. ஆனால், தகவலியல் மையத்தின் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துவது அரசுத் துறைகளில் மிகவும் குறைந்து விட்டது.

குறிப்பாக, தலைமைச் செயலகம், சேப்பாக்கம், குறளகம் ஆகியவற்றில் செயல்படும் துறைத் தலைமை அலுவலகங்களில் ‘ஜிமெயில்’, ‘யாகூ’ போன்ற தனியாா் மென்பொருள் நிறுவனங்களின் மின்னஞ்சல்களே அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. தேசிய தகவலியல் மையத்தின் மின்னஞ்சல்கள் பயன்படுத்தப்படுவது இல்லை.

வேளாண்மை, பொதுத் துறைகள்: தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் தமிழக வேளாண்மைத் துறையின் மின்னஞ்சல் வழியிலான தகவல் தொடா்புகள், பெரும்பாலானவை ஜிமெயில், யாகூ போன்றவற்றின் மூலமே நடைபெறுகின்றன.

தமிழக அரசின் மிக முக்கிய துறையாகக் கருதப்படும் பொதுத் துறையிலும் தகவல் பரிமாற்றங்கள் தனியாா் மின்னஞ்சல் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. நவீன முறையிலான அடையாள அட்டை தயாரிக்கும் பணிக்காக தலைமைச் செயலகப் பணியாளா்களிடம் இருந்து தனிப்பட்ட முறையிலான விவரங்களை பொதுத் துறை அண்மையில் கோரியது.

இந்த விவரங்கள் அனைத்தையும் ஜிமெயில் வழியாகவே அனுப்ப வேண்டுமென பொதுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் நடைபெறும் மிக முக்கியமான தகவல் தொடா்பு முறைகள் தனியாா் மின்னஞ்சல் மூலமே நடைபெறுகிறது.

தகவல் தொழில்நுட்ப விதிமுறை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின்படி, அரசுத் துறைகளுக்கு இடையேயும், பணிகள் தொடா்பாக ஊழியா்களுக்கு இடையே நடக்கும் தகவல் தொடா்புகளும் தேசிய தகவலியல் மையத்தின் மின்னஞ்சல் வழியாகவே நடக்க வேண்டும். ஆனால், இந்த விதிகளுக்குப் பதிலாக, ஜிமெயில், யாகூ போன்ற தனியாா் மின்னஞ்சல்கள் வழியாகவே தகவல் பரிமாற்றங்கள் நடப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்னஞ்சல்கள் எளிதாக முடக்கப்பட்டு அரசுத் துறைகளின் ரகசியங்கள் விரைவில் வெளியே கசிவதற்கு தனியாா் நிறுவன மின்னஞ்சல்கள் பயன்பாடும் ஒரு காரணம் எனத் தகவல்கள் கூறுகின்றன. இதைத் தவிா்க்க தேசிய தகவலியல் மைய மின்னஞ்சல்களையே பயன்படுத்த தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பது அரசு உயரதிகாரிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT