சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் மொழி: பெரியார் மீதான விமர்சனமும் அவரது சீர்திருத்தமும்

கி.ராம்குமார்

காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினம் நீண்ட நாள் பிழைத்திருக்கும் என்கிறது அறிவியல்.

மொழிக்கும்கூட இந்த வரையறை பொருந்தும். ஆதிகாலம் தொட்டு ஓசையில் தொடங்கிய மொழி, பின்னாளில் காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப கல்வெட்டுகளாகவும் பனையோலைச் சுவடிகளாகவும் தன்னைத் தகவமைத்து அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டது. கோடுகளாக இருந்த எழுத்துகள் இன்று தட்டச்சுகளிலும் கணினிக்கு ஏற்ற வகையிலும் தன்னைத்  தகவமைத்துக் கொண்டு பரிணமித்து வருகிறது.

நீண்ட வரலாறு கொண்ட பெருமை பெற்ற மொழி தமிழ். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே வடிவத்திலிருந்து இன்றைக்கு நாம் பயன்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்களைத் தமிழ் மொழி கண்டிருக்கிறது. அன்றைய மொழி வடிவத்திற்கும், இன்றைய மொழி வடிவத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மொழி கண்ட மாற்றங்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை.

அந்த வகையில் தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தில் பெரியாரின் பங்கை இன்றைய அவரது பிறந்த நாளில் நாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது. வழக்கமாகத் தமிழ் மொழிக்கு எதிரானவர், தமிழ் மொழியை இகழ்ந்தவர் என சிலரால் விமர்சிக்கப்படும்வேளையில் தந்தை பெரியார்தான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தத்தைப் பரவலாக்கியவர் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. ஒரு மொழியை விமர்சிப்பவரால் எப்படி அதன் சீர்திருத்தத்திற்கு வித்திட முடியும்?

தமிழை இகழ்ந்தவர் எனச் சிலரால் விமர்சிக்கப்படும் பெரியார், எதனால் தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தைப் பரவலாக்கப் பாடுபட்டார் என்பதில்தான் அவரது சிந்தனையின் முக்கியத்துவம் இருக்கிறது.

உலக மக்கள் பேசும் மொழிகளில் அறிவியல் கருத்துகள் வளர்ந்து வரும் வேளையில் தமிழ் மொழியில் பிற்போக்குக் கருத்துகள் பரவி வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய பெரியாரின் கருத்துகள் கால ஓட்டத்தில் பாதி அழிக்கப்பட்டு மீதி விமர்சனத்திற்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது.

காலத்திற்கு ஏற்றவாறு சமூக வாழ்வில் வேண்டியவற்றைச் சேர்த்தும், வேண்டாதவற்றை விலக்கியும் செயல்படுவதுதான் நீடித்த வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனப் பெரியார் வலியுறுத்தினார். அதன்படி, தான் கண்ட அல்லது சந்தித்த ஒவ்வொரு நிகழ்விலும் அதனை முயன்று பார்த்தார் பெரியார்.

19 ஆம் நூற்றாண்டில் புதிதாக அறிமுகமான அச்சு எந்திரங்களின் வருகையால் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1915 ஆம் ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய பத்திரிகையில் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டிய எழுத்துச் சீர்திருத்தம் குறித்து வ.உ.சி.யும், அதனைத் தொடர்ந்து 1930 இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'குமரன்' இதழில் ஆசிரியர் முருகப்பாவும் வரிவடிவங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளனர்.

தொடர்ந்து அச்சு எந்திரங்களில் அச்சிட முடியாத வகையில் அமைந்த தமிழ் எழுத்துகளுக்கு மாற்றாகப் புதிய வரி வடிவங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனப் பரவலாகக் கருத்துகள் ஒலிக்கத் தொடங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவந்த எழுத்துச் சீர்திருத்தத்திற்குப் பெரியார் பாசறையில் ஒரு வழி பிறந்தது.

பெரியாருடன் இணைந்து பயணித்த, அவரின் முற்போக்கு கருத்துகளோடு அன்றைய தமிழக அரசியலில் ஈடுபட்டு வந்த குத்தூசி குருசாமி தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இதனால் உந்தப்பட்ட பெரியார் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பத் தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள விழைந்தார். 

அன்றைய காலத்தில் தமிழ் மொழி எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று வடிவ அளவில் சிறியதும் பெரியதுமாக இருந்ததால் அதனை அச்சில் ஏற்றும்போது சிரமமும் கூடுதல் தாள்களைப் பயன்படுத்தும் சூழலும் ஏற்பட்டது. மொழியியல் அறிஞர்கள் இந்தச் சீர்திருத்த நடவடிக்கையில் இறங்கத் தயங்கியதைக் கண்ட பெரியார் அந்த நடவடிக்கையில் துணிவுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அதன்படி 1935ஆம் ஆண்டு பெரியார் ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ எனச் சீர்மைப்படுத்தப்பட்ட 13 எழுத்து வடிவங்களைச் தனது விடுதலை இதழில் பயன்படுத்தத் தொடங்கினார். மேலும் ஐ, ஒள போன்ற எழுத்துகளைக்கூட அய், அவ் எனக் குறிப்பிட்டார். பெரியாரின் இந்த முயற்சி அப்போது விவாதத்தைக் கிளப்பியது மட்டுமல்லாமல் உடனடியாகப் பரவலாக புழக்கத்திலும் வரவில்லை.

எனினும், விடாப்பிடியாகத் திராவிடர் கழக, இயக்க இதழ்கள் மட்டும்  தொடர்ந்து பின்பற்றிவந்தன. 

பின்னாளில், பெரியார் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஐ-அய், ஔ-அவ் எழுத்துகளைத் தவிர மற்ற 13 சீர்திருத்த எழுத்துகளைப் பின்பற்றுவதற்கான அரசாணையை  1978 இல் வெளியிட்டார். அரசின் செயல்பாடுகளில் நடைமுறைக்கு வந்தது, பாடப் புத்தகங்களிலும் பின்பற்றத் தொடங்கினர். இது நீண்டகாலமாக நிலவி வந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தொடர்ந்து தினமணி உள்பட நாளிதழ்களும் பயன்படுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து, அச்சுத் துறையில் சகலமும் கணினிமயமாகிக் கொண்டிருந்த நிலையில், பிற நாளிதழ்களும் அதன் அவசியத்தை உணர்ந்து பின்பற்றத் தொடங்கின. மக்கள்மயமானது எழுத்துச் சீர்திருத்தம்.

“ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொருத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்விகத் தன்மையையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக்கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்” என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்.

பல்வேறு தமிழறிஞர்கள், தமிழ் எழுத்து, மொழி வள மேம்பாடு குறித்துப் பேசும் போதெல்லாம் அதைக் குறித்துப் பேசிய பெரியார், அறிஞர்களின் வாயிலாகத் தான் தனக்கு இதைக் குறித்த அறிமுகங்கள் கிடைப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் நாளுக்குநாள் சேர்க்கப்பட்டு வரும் புதிய சொற்களைப் போல் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு புதிய சொற்களைத் தமிழ் மொழியில் அறிமுகம் செய்வதும் அவற்றைப் பாமர மக்களுக்குச் சென்று சேரும் வகையில் எளிமைப்படுத்தப்படுவதும் மட்டுமே மொழியை நிலைத்திருக்கச் செய்யும் வழி என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்.  

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல” என்றார் பெரியார்.

அவர் சொற்களை விரும்பவில்லை. மொழிகளில் உள்ள கருத்துகளைத் தேடினார். அதேவேளை மொழிக்கலப்பு குறித்து அதிகம் அச்சப்படாதவராக இருந்த பெரியார்,  ஹிந்தி மொழி குறித்தும் சமஸ்கிருதம் குறித்தும் பேசப்பட்டு வந்த கருத்துகளை மறுத்த பெரியார், எந்த வளமும் இல்லாத மொழியால் என்ன பயன் எனக் கடுமையாக விமர்சித்தார்.

மொழியின் சிறப்பே அதைச் சுலபமாகக் கற்றுக்கொள்ளக்கூடியதாகவும், புதிய அறிவைப் பெறுவதற்கு உதவியாகவும், சுதந்திரமாக சிந்திக்கின்ற தன்மைக்கு அனுமதிப்பதாகவும் இருப்பதே ஆகும் என்றார் பெரியார். வெறுமனே உணர்ச்சியைத் தூண்டி விடுவது மட்டும் மொழியின் வேலை இல்லை என அவர் வலியுறுத்தினார்.

“பாஷையின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைப் பொருத்ததே ஒழிய வேறல்ல...” என 20.01.1931 இல் குடியரசு தலையங்கத்தில் பெரியார் எழுதிய வரிகள் அவரின் மொழிப் பார்வையை வெளிச்சமிடுகின்றன.

சீர்திருத்தம் எனும் சொல்லின் அடிப்படையில் பெரியார் மேற்கொண்ட முன்னெடுப்பு அவரை எப்போதும் முன்னிறுத்தும். அது மொழியானாலும் சரி...சமூகமானாலும் சரி...


செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT