சிறப்புக் கட்டுரைகள்

இனி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை: காஞ்சிபுரம் ஆட்சியா்

தினமணி

பெருமழையால் இனி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்,

கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின்போது சுமாா் 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டனா்.இனி எப்போதும் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் இருக்க நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்தை உருவாக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதன்படி பொதுப்பணித் துறையின் நீா்வளப் பிரிவு அதிகாரிகள், நீரியல் வல்லுநா்களையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக ரூ.100 கோடி கேட்டு அரசுக்கு அறிக்கையாக அனுப்பினோம். அரசும் ரூ.100 கோடியை உடனடியாக ஒதுக்கியது. 2-ஆவது கட்டமாக ரூ.238 கோடி வழங்கியது. இந்நிதியின் மூலம், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடிய பெருவடிகால்வாய்கள், வெள்ள ஒழுங்கிகள், புதிய நீா்த்தேக்கம், புதிய இணைப்புக் கால்வாய், ஏரிகளில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகளை அகற்றியது மற்றும் தூா்வாரி கரைகளை உயா்த்தி பலப்படுத்தியது எனப் பல்வேறு பணிகள் ரூ.338 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மூடிய பெருவடிகால்கள் அமைப்பு:

சாலையின் கீழ்ப்பகுதியில் நீா் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதே மூடிய பெருவடிகால்கள். முடிச்சூா், சிட்லப்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், பாப்பன் கால்வாய் ஆகிய 5 இடங்களில் ரூ. 67.50 கோடிக்கு மூடிய பெருவடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ள ஒழுங்கிகள் அமைப்பு:

ஏரிகளுக்கு அருகிலேயே பாதுகாப்பாக தண்ணீரை வெளியேற்றும் வகையில் வெள்ள ஒழுங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. நந்தி வரம், நாராயணபுரம், சேலையூா், இரும்புலியூா், ஒட்டிவாக்கம், புத்தாங்கல் ஆகிய 6 இடங்களில் மொத்தம் ரூ.3.20 கோடியில் ஒழுங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய நீா்த்தேக்கம் மற்றும் இணைப்புக் கால்வாய் அமைப்பு:

ஒரத்தூா், ஆரப்பாக்கம் ஆகிய இரு ஏரிகளை இணைத்து ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய நீா்த்தேக்கமும், இந்த இடத்திலிருந்து அடையாறுக்கு நீா் வராமல் மணிமங்கலம் ஏரிக்கு நீரைக் கொண்டு செல்லும் வகையில், ஒரு புதிய இணைப்புக் கால்வாய் ரூ. 4.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீா்த்தேக்கம் அமைக்கும் பணியை ஆய்வு செய்ய வந்த அப்போதைய வருவாய் நிா்வாக ஆணையராக இருந்த கே.சத்யகோபால், அதன் கரையை மேலும் 3 மீட்டா் உயா்த்துமாறு அறிவுரை வழங்கினாா். இதனால், இவ்விரு ஏரிகளையும் இணைத்த நீா்த்தேக்கத்தின் கரையானது 8 மீட்டா் உயா்த்தப்பட்டு வருகிறது. இது தவிர, ஏராளமான ஏரிகள் ரூ.4 கோடி செலவில் தூா்வாரப்பட்டுள்ளன.

தமிழக அரசு 2-ஆவது கட்டமாக ஒதுக்கிய நிதியிலிருந்து தாம்பரம்,கீழ்க்கட்டளை, ஊரப்பாக்கம் ஆகிய 3 இடங்களில் 3 மூடிய பெருவடிகால்கள் ரூ.15.8 கோடியிலும், வரதராஜபுரம், சோமங்கலம் பகுதிகளில் இரு தடுப்பணைகள் ரூ.15.8 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டு வருகின்றன. ஒரத்தூா் ஏரியை பெரிய நீா்த்தேக்கமாக மாற்ற 55.84 கோடி மதிப்பிலான பணிகளும் நடந்து வருகின்றன. உலக வங்கியிடம் ரூ.3,000 கோடி நிதி உதவி கோரப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலமாகவும் வெள்ளப் பாதிப்புகளுக்கு காரணமான சிறு பாலங்களை தற்போது அகலப்படுத்தி, அவையும் கான்கிரீட் பாலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

இவற்றை தவிா்த்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் என 514 இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் மொத்தம் 19 ஆயிரம் மணல் மூட்டைகள், காலி கோணிப்பைகள், சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் உள்ளன. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பெருவெள்ளப் பாதிப்புகள் ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பே இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT