சிறப்புக் கட்டுரைகள்

மாணவர் தற்கொலைகளும் சமூகத்தின் கடமையும்

டாக்டர் வி. ஜீவானந்தம்

விவிலியத்தில் நல்ல சுமேரியன் என்றொரு கதை உண்டு. யூத வணிகன் ஒருவன் தன் பொருள்களை விற்க நகரத்தை நோக்கிச் செல்கிறான். ஒரு காட்டுப் பகுதியைக் கடக்கையில், கள்வர்கள் பொருள்களைக் கொள்ளையடித்து, அவனையும் அடித்துப்போட்டு விட்டுத் தப்பி ஓடி விடுகிறார்கள்.

ஒரு செல்வந்தர் கடக்கிறார், நமக்கேன் வம்பு என உதவாமல் வேகமாகக் காட்டைக் கடந்தார். பின் ஒரு பாதிரியார் வருகிறார். எவனோ ஒரு குடிகாரன் என்று, “கர்த்தரே அவனைத் திருத்திக் காப்பாற்றுவீர்” என்று பிரார்த்தித்துக் கடந்தார். பின் ஓர் ஏழை சுமேரியன் வந்தான். காயம்பட்டு உயிருக்குப் போராடும் வணிகனைக் கண்டு, தன்னிடமிருந்த தண்ணீரைப் பருகக் கொடுத்துக் காயங்களைச் சுத்தம் செய்து தனது இல்லத்திற்கு தூக்கிச் சென்று காப்பாற்றினான்.

இயேசு தன் சீடர்களை நோக்கி, ”இவர்களில் யார் கடவுளுக்கு பிரியமானவர்?” என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒரு பதிலைத் தந்தனர். கடைசியில் இயேசு ஏழை சுமேரியனே தன் தண்ணீரைத் தந்து தோளில் சுமந்து தூக்கிச்சென்று மேல்ஜாதி யூதனைக் காப்பாற்றினான், அவனே கடவுளுக்குப் பிரியமானவனாவான்” என்றார்.

நாம் நமது வாழ்நாளில் அதுபோன்ற வழிப்போக்கனையும் கள்வர்களையும் படித்தவர்களையும் பணக்காரர்களையும் பக்திமான்களையும் மனிதாபிமானிகளையும் சந்தித்துக்கொண்டுதான் உள்ளோம். நாம் அவர்களில் யாராக இருந்துள்ளோம் என்பதே இக்கதை நம்முன் எழுப்பும் கேள்வி.

கரோனாவும் நீட் தற்கொலைகளும் நிறைந்த இன்றைய காலகட்டத்திற்கு இக்கதையை பொருத்திப் பார்க்கலாம். மானுடத்தையே பூண்டோடு அழித்து விடுமோ என அஞ்சும் கரோனாவை முதலீடாக்கிப் பயப்படுத்திக் கொள்ளையிடும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், நாம் பிழைத்தால் போதுமெனத் தப்பி ஓடும் தனியார் மருத்துவர்கள், திட்டங்களை அறிவித்துக் காசு பார்க்கும் அரசு அலுவலர்கள், மருந்திலும் காசு குவிக்கும் கம்பெனிகள், பலியாகும் அப்பாவி மக்கள் என எல்லாம் நமது கண்முன்னே நடந்து கொண்டுதான் உள்ளன. மனிதாபிமானத்துடன் உதவும் எளிய மனிதனே இன்றைய தேவை.

அதேபோல் வித்யாதானம் புண்ணியம் என்று வழங்கப்பட்ட கல்வி, வணிகமயமாகி, காசுக்கேற்ற பணியாரமென விற்கப்படுகிறது. அறிவு வளர்க்க வேண்டிய அரசுகள், கடமை மறந்து கொள்ளையர்களுக்குத் துணை செல்கின்றன. ஏழைகளுக்கும், கிராமப்புற அடித்தட்டு மக்களுக்கும் உயர்கல்வி மறுக்கும் அநீதி, நீட் என்கிற பெயரில் புகுத்தப்படுகிறது. மருத்துவராவது என்பது கெளரவக் கனவு. இதுவரை கல்வி மறுக்கப்பட்ட சமூகம் வரலாற்றில் முதல்முறையாகப் பள்ளிப்படிப்பு முடிந்து உயர்கல்வி பெறத் துவங்கியுள்ளது.

எனவே, விளிம்புநிலை குடும்பத்தில் ஒருவரை மருத்துவராக்கிப் பார்த்துவிட வேண்டுமென்பதுதான் நடுத்தரக் குடும்பத்தினரின் ஆணித்தரமான கனவு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு என்ற அற்பச்சலுகையும் ஆளுநரால் அணை போட்டுத் தடுக்கப்படுகிறது.

நீட் எனும் தேவையில்லாத் தேர்வை தடுக்கப் போராடுவது, அரசியல் கட்சிகளின் கடமை. ஏழைக்குக் கல்வி என்பது அஸ்வமேத குதிரைதான். அதை அடக்கி வெல்லும் பயிற்சியைத் தருவது ஆசிரியர்களின் சமூகக் கடமை. வென்று காட்டுவது மாணவர் கடமை. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவர்கள் தடையை மீறித் தம்மை வளர்த்துக்கொண்டு மேலே வர வேண்டும். பயந்து சாவதும், தோல்வியில் துவண்டுபோவதும், சமூகத்திற்கே பேரிழப்பாகும், மாணவர்கள் தற்கொலைகள் பெருகி வருவது ஒரு சமூக நோயின் அறிகுறியே.

வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். விழுவதெல்லாம் எழுவதற்கே என்று தன்னம்பிக்கையும், உற்சாகமூட்டுவதும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் கடமையே. அறிவுள்ள கோழைகளைவிடவும் தன்னம்பிக்கை மிக்க செயல்பாட்டாளர்கள் எழுச்சி பெற்று லட்சியத்தை எட்டிப்பிடிப்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதன்மைத் தேவை.

“வசதி இருக்கிறவன் தரமாட்டான், வயிறு பசிச்சவன் விடமாட்டான்”. எனவே சிலந்தியின் போராட்டம்தான் வாழ்வு. இத்தனை காலம் அனுபவித்துச் சுவை கண்டவர்கள் விடமாட்டார்கள். இது அவர்களுக்கும் ஒரு ஜீவ மரணப் போராட்டமே. ஒடுக்கப்பட்ட சமூகம் மேன்மை பெறுவதும், இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்குமான சுயநலத் தேவை. மார்க்ஸ் சொல்வது போல இதுவரை அடிமைப்படுத்தியவர்கள் தமக்கான சவக்குழியைத் தாமே தோண்டிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

”நாங்கள் நிச்சயம் வெல்வோம், ஓர் நாள்” என்கிற கருப்பு நம்பிக்கைக் குரல் நம் காதுகளில் ஓயாமல் ஒழித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி யாருக்கு ?

வறுமை, நோய், ஆரோக்கிய வாழ்வுச் சூழல் குறித்த உலக ஆய்வுக் குறியீட்டுப் பட்டியலின்படி 123 நாடுகளில் இந்தியா 93வது இடத்திலுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பிற சிறிய வளரும் நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர் ஆகியவற்றைவிட நாம் கீழான நிலையில் உள்ளோம் என்பதை அந்தப் பட்டியல் தெளிவாகக் கூறுகிறது.

நமது பெரும் நோய் வறுமை, சத்துணவின்மை, சோகை, வளர்ச்சிக் குறைவு, குழந்தைகள் மரணம், வயிற்றுப்பூச்சி, வயிற்றுப்போக்கு ஆகியனவே. இவற்றைச் சரிசெய்ய பெரும் கல்வி பெற்ற மருத்துவர்கள் தேவையில்லை. விடுதலை பெற்ற பத்தாண்டுகளில் கிராமம், கிராமமாகப் போய் மருந்துகள் கொடுத்தும், ஆரோக்கிய வாழ்வுமுறைக் கல்வி கொடுத்தும் மாவோவின் வெறுங்கால் மருத்துவர்கள் மக்களைச் சந்தித்ததன் விளைவே இன்று அமெரிக்காவுடன் போட்டியிடும் ஷி ஜின்பிங்கின் சீன வல்லரசு.

குட்டி நாடு கியூபா, மருத்துவப் பேரிடரைச் சந்திக்கும் எந்த நாட்டிற்கும் தனது மருத்துவப் படையை அனுப்பி உதவி வருகிறது. அங்கு மருத்துவக் கல்வி மதிப்பெண் வாங்குபவர்களுக்கல்ல, தன் மக்களுக்குச் சேவை செய்ய முன்வரும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது. அங்கு மருத்துவம் அதிகப் பணம் ஈட்டும் தொழிலாகக் கருதப்படுவதில்லை. இத்தகைய உணர்வுகொண்ட வளரும் நாட்டு மாணவர்களுக்கு, காசுக்காக அன்றி இலவசமாக மருத்துவக் கல்வி தந்து சொந்த நாட்டிற்கே சேவை செய்யத் திருப்பி அனுப்புகிறது.

நாம் இவற்றை விடுதலைக்குப் பின் பின்பற்றியிருந்தால் 123 நாடுகளில் 93வது இடம் என்கிற அவமானத்தை தவிர்த்திருக்க முடியும். தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரப்பட வேண்டும். அவர்கள் நகரங்களுக்கும், அமெரிக்காவுக்கும் ஓடிவிடாமல் தம் பகுதி மக்களுக்குச் சேவை செய்ய நிர்ப்பந்திப்பதும் உதவுவதும் அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

ஒருமுறை ஜெயகாந்தனைத் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குப் பேச அழைக்க மருத்துவம் பயிலும் மாணவர்கள் சென்றிந்தோம். அவர், “நீங்கள் எங்கள் காசில் படித்துப் பட்டம் பெற்று விட்டு, எவனுக்கோ காசுக்குச் சேவகம் செய்ய ஓடும் ஓடுகாலிகள், உங்களைப் பற்றிய அளவு கடந்த ஆணவம் உங்களுக்குள் உள்ளது. ஆனால், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் சேவை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவே, உங்கள் சேவையும் தேவையானது” என்றார்.

அவரது சீற்றத்தில் கடையனுக்குக் கடைத்தேற்றம் எழுதிய ரஸ்கினையும், மகாத்மா காந்தியையும் தரிசிக்க முடிந்தது. இந்த உணர்வை நாம் தமிழகத்தில் வளர்த்திருந்தால் மருத்துவ வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார். ஆனால், முதல் தலைமுறையாக உயர் கல்வி பெறும் வாய்ப்பு பெற்ற தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கும் சமூகமே முதன்மைக் குற்றவாளி. 

ஆசிரியர்கள் பங்கு 

இன்றுள்ள ஆசிரியர்களில் பலரும் முதல் தலைமுறையாகக் கல்வி பெற்று சட்டை போட்டவர்களே. எனவே, அவர்களுக்கு இந்தத் தலைமுறைக்  குழந்தைகளை உயர்கல்வி பெறுபவர்களாக மாற்றவேண்டிய வர்க்கக் கடமையுள்ளது. இது சம்பளம், வேலை நேரம் தாண்டிய கடமை. இக்கடமையை பணியிலுள்ள ஆசிரியர்கள் பள்ளிகளுக்குள்ளும், ஓய்வுபெற்ற பின்னும் நான்கு இலக்க ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வெளியிலும் செய்யும் பொறுப்பை ஏற்றால் மட்டுமே, காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட வர்க்கத்தின் குழந்தைகள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, உயர் அலுவலர்களாக, ஆட்சியாளர்களாக முடியும். 

இவையெல்லாம் ஒற்றை ஆசிரியரால் இயலாது. ஓய்வுபெற்ற ஒவ்வொரு ஆசிரியரும் அநீதிக்கு எதிராகக் கோபம்  கொண்ட அர்ப்பணிப்பையும்  உழைப்பையும் மேற்கொண்டால் மட்டுமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை ஆகியவற்றைக் கற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக் கவனத்துடன் கற்பித்தால் மட்டுமே தலைமுறை இழிவுகளைப் போக்க முடியும்.

கவுன்சலிங்... ஆற்றுப்படுத்தல்

எல்லோரும் 100 மதிப்பெண் பெறுவது, மருத்துவராவது என்பது எல்லோருக்கும் இயலாது. மருத்துவம் தவிர வேறு வேறு துறைகளில் எளிதாகப் பணமும், புகழும் பெற முடியும் என்பதை உணர்த்தி மாணவர்களின் ஆர்வம், தகுதி ஆகியவற்றிற்கேற்ப பல துறைகளில் ஆற்றுப்படுத்துவது அவசியம். குறிப்பாக ஆசிரியர் பணி எளிதானது, ஓய்வு அதிகம் கிடைப்பது, மனநிறைவு தருவது, பாதுகாப்பானது, அரசு மற்றும் வங்கி, ராணுவம், கணக்காளர் என புதியப்  புதிய கதவுகள் திறந்துகொண்டே உள்ளன.

அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள் கிடைத்துவிட்டால் எந்தத் தொழிலிலும் ஏற்றம் பெறலாம். தாழ்வாகப் பார்க்கப்பட்ட முடிதிருத்தம் இன்று சிகை அலங்காரக் கலையாக உயர்வு பெற்று பிரமிப்பாகப் பார்க்கும் தொழிலாக மாறியுள்ளது.

தற்சார்புத் தமிழில் பயின்று யாருக்கும் அடிமையாக இல்லாமல் சுதந்திரமாகச் சம்பாதிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்பதை வாழ்க்கை உயர்ந்த பலரின் வாழ்வை முன்மாதிரியாகக் காட்டி நம்பிக்கையூட்டும் வழிகாட்டிகளே தற்போதைய தேவை. இதற்கு நகரில் பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், புதிய தொழிலதிபர்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தோல்விகளையே படிக்கற்களாக்கி உயர்ந்த பலரை இளையோர்க்கு ஆசானாக்க வேண்டும்.

வகுப்பும் பாடமும் மதிப்பெண்ணும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவத்தை, தன் வலிமை அறிந்து தனக்கேற்ற துறையை ஏற்றுத் தன்னம்பிக்கையுடன் முன்னேறத் துணை நிற்கும் சமூகம் தேவை.

பெற்றோர் தமது பேராசைகளைத் தம் பிள்ளைகள் மீது ஏற்றி, அவர்களை மனச் சோர்வுக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கி, தாழ்மை உணர்ச்சி வளர்ப்பவர்களாக உள்ளதே பல மாணவர்களின் தற்கொலைகளுக்குக் காரணம். எனவே, மாணவர்களை விடவும் பெற்றோர்களுக்கே கவுன்சலிங் பெரிதும் தேவையானதாக உள்ளது.

நீட் தேர்வை ஒழிப்பது ஒருபுறம் நடக்கட்டும். அதற்கு முன் நீட் தேர்வு பயமும், தோல்வியின் துயரும் நமது மாணவர்களைப் பலிகொள்ளும் கொடுமையைத் தடுக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள், தொண்டு நிறுவனங்கள் என ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுபட்டுச் சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயல்படுவது உடனடியான அவசரத் தேவை.

மனிதன் வாழ மருத்துவரா, ஆசிரியரா என்பதல்ல முக்கியம். தன்னம்பிக்கைமிக்க இளைஞன் எங்கும், எப்படியும் வெற்றி பெற்று வாழ்வான். இந்தத் தன்னம்பிக்கை உணர்வை இளைய தலைமுறையினரிடம் வளர்ப்போம். அநியாய தற்கொலைகளைத் தடுப்போம்.

[கட்டுரையாளர்- தமிழக பசுமை இயக்கத் தலைவர், ஈரோடு]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT