சிறப்புக் கட்டுரைகள்

கரோனா காலம்: அனுபவங்களும் படிப்பினைகளும் விபரீதங்களும்

23rd Oct 2020 12:29 PM | நசிகேதன்

ADVERTISEMENT

கரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பை நேரடியாக அனுபவித்து வரும் நிலையில், இதற்கு முன் சிக்கன் குன்யா உள்ளிட்ட வைரஸ் நோய்ப் பாதிப்புகளை மட்டுமே நேரடியாகப் பார்த்தவர்களுக்கு இந்த கரோனா ஏற்படுத்தும் விளைவுகளும் அச்சங்களும் தவிர்க்க முடியாதனவாகவும், இந்த நோய்க் கால அனுபவங்கள் வினோதமாகவும் இருந்து வருகின்றன.

ஓரிரு தலைமுறைகளுக்கு முன், நம் தாத்தா - பாட்டி காலங்களில் பிளேக், காலரா நோய்ப் பாதிப்புகள் இருந்ததாகவும், இதன் காரணமாக பொத்து பொத்தென்று விழுந்து மனிதர்கள் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் ஊனத்துடன், பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்ததாகவும் கூறப்படுவதைக் கேட்கையில், ஒரு பெருங்கதையை கேட்பதுபோல் பிரமிப்பாகத்தானிருந்தது.

பிளேக், காலரா காரணமாக நகரங்களும் கிராமங்களும் காலியானதாகவும், பாதிப்பு குறைந்ததற்குப் பிறகுதான் மீண்டும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மக்கள் திரும்பி வந்ததாகவும் நமக்குக் கூறப்பட்ட உண்மைகள் யாவும் கதைகளாக அதிசயமாகவும்  அபூர்வமானதாகவும் இருந்தன, கரோனாவுக்கு முன்னர் வரை.

கரோனாவுக்குப் பிறகு, 'அனைத்து நோய்ப் பாதிப்புகளும் இருந்திருக்கும், ஆனால், இதைவிட மோசமானதாக இருந்திருக்குமா' என்கிற சந்தேகம் இன்றைய தலைமுறையினருக்குத் தோன்றாமல் இல்லை. 

ADVERTISEMENT

பிளேக், காலரா பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கு அனைத்து மதத்தினரும் தங்களது நகரம் மற்றும் கிராமங்களை விட்டுவிலகித் தங்களது கடவுளர்களிடம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டதும் கூறப்படுவதுண்டு.

சில மாவட்டங்களில் நகரப் பகுதிகளை விட்டு வெளியேறிய இஸ்லாமியர்கள் நகரின் வெளிப்புறப் பகுதியில் கூடாரங்களை அமைத்துத் தங்கி அங்கு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டு உணவு வகைகளைப் பரிமாறித்  தாங்களும் சாப்பிட்டு இறைவனுக்கும் படைத்ததும் நிகழ்ந்ததாகவும், இந்தக் கூட்டு வழிபாடு காரணமாக  நோய்ப்பாதிப்பு குறைந்ததாகவும், அந்தக் கூட்டுப் பிரார்த்தனைகள் 50 ஆண்டுகளுக்குப் பின்னரும், கடந்த கால நோய்க் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதே நாளில் இன்றும் கூட்டுப் பிரார்த்தனை, கூட்டுத் தொழுகை நடைபெற்று வருவதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் தொடங்கியபோது, இந்தியாவில் அந்த நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அனைவருக்கும் இருந்த நம்பிக்கையை  கரோனா ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறிந்தது. 60 வயதுக்கு மேலான முதியவர்களின் மரணங்கள் நோயின் பாதிப்பை அனைவருக்கும் பலமாக உணர்த்தியது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், முதல் இரண்டு மாதங்களுக்கு நகரங்கள் வெறிச்சோடி, மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அதிசயம் நிகழ்ந்தது.

வீடுகளை விட்டுக் காரணமின்றி வெளியேறியவர்கள் மீது வழக்குகள் பாய்ந்தன, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கைகள் சாதாரண நடவடிக்கையாக மாறியது. இரண்டு மாத காலம், வெளிநாடுகள், வெளி மாவட்டங்களிலிருந்து வர முடியாதவர்கள் தவித்த பாடுகளையும், வெளி மாவட்டங்களில் இருக்கும் மகன்கள், மகள்கள் அம்மா - அப்பாவுடன் தங்கும் அபூர்வங்களும் நிகழ்ந்தன.

வேலை வேலை என்று அலுவலகங்களில் தவம் கிடக்கும் பெற்றோர்கள், அதே உணர்வில் வெளி மாவட்டங்களில் தவம் கிடந்த மகன்கள், மகள்கள், வெளிமாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயின்று வந்த மகன்கள், மகள்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை கரோனா அதிசயமாக ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த அபூர்வத் தருணங்களை அனுபவித்த குடும்பங்கள் கரோனாவை மனதார வாழ்த்தியதும் நிகழ்ந்தது. 

கரோனா ஊரடங்கை ஒருபக்கம் குடும்பத்தினர் மகிழ்வுடன் தங்களது விடுமுறைக் காலமாகக் கொண்டாடியபோதும், வருவாயின்றித் தவித்த குடும்பத்தினரும், பாதியாகக் குறைந்த மாத ஊதியத்துடன் செலவுக்குத்  தடுமாறிய குடும்பத்தினரும், சில மாதங்கள் மாத ஊதியங்களை முழுமையாகவும், பின்னர் பாதியாகவும் பின்னர் எதுவுமே தராமல் நிறுத்தப்பட்டதைத் துணிச்சலுடன் வெளியே கூற முடியாமல் தகுதிக்குக் குறைந்த வேலைகளைத் தேடிச்சென்ற குடும்பத் தலைவர்கள் மற்றும் தலைவிகளையும் கொண்ட குடும்பத்தினர்களையும் கொண்ட கலவையான நகரங்களாகத்தான் இந்த கரோனா அனைவருக்கும் உண்மையை உணர்த்தின.

எதுகுறித்தும் கவலையின்றி, சம்பாதிப்பது, செலவு செய்வது என்றிருந்தவர்களுக்கு வருவாய் என்பது செலவுக்கானது. குடும்பத்தின் பாதுகாப்புக்கானது, குடும்பத்தின் எதிர்காலத்திற்கானது, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட மகிழ்ச்சிக்கானது, குடும்பத்தினரின் சந்தோசத்திற்கானது என்பதை  உணர்த்தத் தொடங்கியதும் இந்த ஊரடங்கு காலமாகத்தான் இருக்கும்.

இதுபோன்ற பலருக்கும் புரியாமலிருந்த பல உண்மைகளை விளைவுகளுடன் புரிய வைத்தது கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ். ஆனால், இந்த திடீர் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் குடும்பத் தலைவர்கள் சிலர் தற்கொலை முடிவுக்கு சென்ற விபரீத முடிவுகளும் நடைபெற்றன.

இதனை விடவும் தொழில்சார்ந்து வாழ்ந்து வந்தவர்கள் பாடு பெரும்பாடாகத்தானிருந்தது. வாகனத் தொழிலை மட்டும் நம்பியிருந்தவர்களின் வீடுகள் முழுமையும் சோகத்தை நிரப்பியிருந்தது. இதுபோலத்தான் வீதியோரங்களில் கடைகள் அமைத்தும், கட்டட வேலை, பூக்கள் கட்டி விற்பனை செய்வோர் என தினசரி வருவாயை நம்பி வாழ்ந்து வந்த அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

இதனிடையே பேருந்துகளில் வேலைக்காக, உறவினர் வீடுகளுக்கு வந்தவர்கள் பேருந்துகள் இன்றி, ரயில்கள் இன்றி பொதுப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டு சாலையோரங்களில் வாழும் நிலையும், சாப்பாட்டு நேரங்களில் இலவச உணவுப் பொட்டலங்களை நம்பியிருந்ததும் நிகழ்ந்தது. வியாபாரமின்றித் தங்களது நிறுவனப் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை அரசு வழங்க நிர்ப்பந்தித்தும் தர முடியாத நிலையும் நீடித்தது. 

பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் நகரங்கள் பொலிவுக்குத் திரும்பத் தொடங்கின. பெரிய நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு, பின்னர் சிறு வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு, கடை வீதிகள் கூட்டம் நிரம்பத் தொடங்கியது. துணி வணிகர்களும் பல பண்டிகைகளைத் தவறவிட்டும், கோடைக்கால, மழைக்கால, குளிர்கால, ஆடி மாத விற்பனைகளை இழந்த விபரீதமும் இந்தக் கரோனா ஏற்படுத்திக் கொடுத்தது.

கரோனா காலங்களில் ஆடம்பரத் திருமணங்கள் வெகுவாகத் தவிர்க்கப்பட்டு வீடுகளில் குறைவான கூட்டத்துடன் நடக்க வேண்டிய அற்புதமும் நடந்தது. வழக்கமாகப் பெரும் ஆரவாரத்துடன் நடைபெறும் திருமணங்கள், மணமக்கள் முகக்கவசம் அணிந்தபடியும், திருமணத்தை நடத்தி வைப்பவர்களும், புதுமணத் தம்பதியினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் பெற்றோர் மற்றும் குறைவான உறவினர்களும் முகக்கவசங்களுடன் திருமணத்தை நடத்தி வைத்ததும், ஆசி வழங்கியதும் அரங்கேறின.

அரசியல்வாதிகள் தனியார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுக்கூட்டங்களை நடத்த முடியாமல் அலைபேசியில் ஸூம் கூட்டங்களில் கலந்துகொண்டதும் நடைபெற்றது, நடைபெற்று வருகிறது. புண்ணிய நதிகளில் பக்தர்கள் நீராடத் தடையும், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதால் அனைத்துத் தரப்பு பக்தர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனை நம்பியிருந்தவர்களின் வருவாயும் பாதிக்கப்பட்டது. 

திருமணங்கள் வீடுகளில் நடைபெற்றதால் திருமண மண்டபங்கள் வெறிச்சோடின. அதேபோல் இதுவரை மூடப்படாத திரையரங்குகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள், விபத்துகள் தவிர சாதாரண பரிசோதனைகளுக்குக்கூட நோயாளிகள் செல்லாமல் பல்நோக்கு மருத்துவமனைகளும் வெறுமனே காட்சியளித்தன. இதுவரை பார்க்கக்கூட முடியாத 24 மணிநேர பரபரப்புடன் இருக்கும் பல்நோக்கு மருத்துவர்கள் செல்போன் மூலமாக அறிவுரைகளைக் கூறி காட்சியளிக்கத் தொடங்கினர். தமிழகம் முழுவதும் இளைய மருத்துவர்கள் பலரும் மக்களுக்கு, நோயாளிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு ஆலோசனைகளை, உணவு முறைகளை செல்போன், காணொலிகள் மூலம் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர்.

பள்ளிகளின் வகுப்புகள் வீடுகளுக்கு மாற்றப்பட்டு ஆசிரிய, ஆசிரியர்கள் இணையதள வசதியுடன் பெரிய வகுப்புகளாகவே குறுகிய வகுப்புகளாகவோ மாணவ, மாணவியர்களூக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். வீடுகளே வகுப்பறைகளாக மாறி மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடனோ, சுறுசுறுப்புடனோ அல்லது இது எதுவுமின்றியோ அனைத்து வீடுகளிலும் பாடங்கள் வழக்கம்போல் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுகளும் பாடவிளக்கமும் நடைபெற்று வருகிறது. 

மருந்தகங்கள் ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம், ஆர்சனிக் மாத்திரைகளை விற்பனை செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டியதும், அதையே பலரும் வரிசை கட்டி வாங்கிச் சென்றதும் நிகழ்ந்தது. உணவகங்கள் மூடப்பட்டதால் வீடுகளில் அனைவரும் உணவருந்தத் தொடங்கினர். இதுவரை மறைந்திருந்த கூட்டுக் குடும்ப முறை திடீரென வீடுகளில் எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

குடும்பத்தினர் கூட்டாகக் கூடி தாயக்கட்டை உள்ளிட்ட இதுவரை ஒழிந்திருந்த விளையாட்டுகளைத் தூசிதட்டி விளையாடத் தொடங்கினர். தொலைக்காட்சிகள் புதிய புதிய திரைப்படங்களைப் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பத் தொடங்கி, இப்போது வறண்டே போய்விட்டன.

இப்படித்தான் இதுவரை மக்களுக்குள் ஒளிந்திருந்த உணர்வுகளை வெளிக் கொணர்ந்ததும், உடல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதும், உடல், ஆரோக்கியம் குறித்து கவலைகளை அதிகரிக்கச் செய்தது. குடும்பத்தின் மீதான அக்கறையை அதிகப்படுத்தியது.

முதியோர்கள் பாதுகாப்புக்காக கூடுதல் அக்கறை எடுத்தது, குடும்பத்தினர் முகம் பார்த்துப் பேசியது, கூட்டாக அமர்ந்து உணவருந்தியது, கணவன்- மனைவி தங்களது உறவின் மேன்மையை உணர்ந்தது என பல்வேறு புதிய அற்புதத் தருணங்களையும் கரோனா தாமாக உணர்த்தித் தந்தது.

இப்படி பல்வேறு முரண்பட்ட வித்தியாச உணர்வுகளை உணர்த்திய இதே கரோனா நகரங்களில் காணப்பட்ட பல்வேறு சிறு வியாபார நிறுவனங்களை மூட வைத்துள்ளது. சிறிய, பெரிய உணவகங்கள் பலதும் தளர்வுக்குப் பிறகு மூடப்பட்டது. இதேபோல் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மளிகைக் கடைகள் என பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டன. வெளிமாநிலத்திற்கு சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பாததால் கட்டட வேலைகள் முழுமையடையாமலும், அரசுப் பணித் திட்டங்கள் முழுமை பெறாமலும் பாதியில் நின்று கொண்டிருக்கின்றன.

ஒரு நோயால் இதுபோன்ற ஒற்றுமையையும் விலகலையும் உண்மையையும், அற்புதத்தையும், அதிசயத்தையும், விபரீதத்தையும் ஒருங்கே ஏற்படுத்த முடிந்திருக்கிறது.

இதனை நல்லவிதமாகவும், வாழ்க்கையின் பாடமாகவும், புண்ணியத்தின் விளைவுகளாகவும், பாவத்தின் சாபமாகவும் அவரவர், அவரவர் வசதிக்காக நோயின் அனுபவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு நோய் இப்படிக் கலவையான ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், அனுபவித்துதான் ஆக வேண்டும், இது எழுதப்படாத விதியா அல்லது எழுதப்பட்ட விதியின் கதியா, யாருக்கும் புரியாமலே எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

காலம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது!

Tags : special articles coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT